திமுக எதிர்ப்பு .. இது மட்டும் போதுமா அதிமுக வெற்றி பெற.. எங்கேயே இடிக்குதே!

Su.tha Arivalagan
Dec 27, 2025,04:35 PM IST

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி 100 சதவீதம் உறுதியாக இருக்கும், பலமாக இருக்கும் என்று தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் சுற்றுமுற்றும் பார்த்தால் கூட்டணி வலுவாக அமைய எந்த சாத்தியக் கூறும் இருப்பதாக தெரியவில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.


திமுக எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்ட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, ஆளும் கட்சி மீதான அதிருப்தி வாக்குகளைப் பிரிந்து விடாமல் அறுவடை செய்வதே இக்கூட்டணியின் முக்கிய நோக்கம். ஆனால் எதார்த்தம் வேறு மாதிரியாக இருக்கிறது.


கடந்த 2021ல் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணி உண்மையிலேயே வலுவாக அமைந்திருந்தது. அதில் சந்தேகம் இல்லை. பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், தமமுக, மூமுக என கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. திமுக கூட்டணிக்கு உண்மையிலேயே டஃப் கொடுத்தது அதிமுக. ஆனால் பாஜக என்ற ஒற்றைக் கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது அதிமுக.




அதிமுக கூட்டணியால் வெறும் 75 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.  அதேசமயம் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் அதிமு கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் இடையிலான வாக்கு சதவீதம் வெறும் 5.43 சதவீதம்தான். இதனால்தான் இந்த முறை எப்படியாவது அதிமுக கூட்டணியை பலமாக அமைக்க வேண்டும் என்று விரும்புகிறது. ஆனால் இப்போது கூட்டணி அமைவதே பெரும் சிக்கலாக மாறிக் கொண்டுள்ளது.


தேமுதிக, பாமக ஆளுக்கு ஒரு பக்கம் முறைத்துக் கொண்டு நிற்கின்றன. தேமுதிக மிகவும் பலவீனமாக உள்ளது. பாமகவோ இரண்டாக பிளந்து கிடக்கிறது. பாஜக கூடுதலாக தொகுதிகளைக் கேட்டு வருகிறது. இப்படி எல்லாப் பக்கமும் எக்குத்தப்பாக சிக்கல் குவிந்து கிடக்கிறது. இதற்கு மத்தியில்தான் எடப்பாடி பழனிச்சாமி அபார வெற்றி பெறுவோம், ஆட்சியைப் பிடிப்போம் என்று பேசி வருகிறார். எந்த மன நிலையில், எந்தக் கணக்கில் அவர் இப்படிப் பேசுகிறார் என்று அதிமுகவினருக்கே தெரியவில்லை.


ஆனால் தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கப் போகும் வாக்குகளை மனதில் வைத்தே அதிமுக தெம்புடன் இருப்பதாக அதிமுக தரப்பில் சொல்கிறார்கள். ஆனால் அங்கும் கூட சிக்கல்தான் இருக்கும் என்று தெரிகிறது. காரணம், விஜய் பிரிக்கப் போவது யாருடைய வாக்குகளை என்பது தெரியவில்லை. அவர் அனேகமாக அதிமுக, நாம் தமிழர் கட்சி போன்றவற்றுக்குத்தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார் என்று சொல்கிறார்கள், கணக்கிடுகிறார்கள். அப்படி நடந்தால் அது திமுகவுக்குத்தான் சாதகமாகப் போகும். இதை அதிமுக உணரவில்லையா என்று தெரியவில்லை.


அதேசமயம், இப்படி நடந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் விஜய்யை, அதிமுக பக்கம் கொண்டு செல்ல கடுமையான முயற்சிகள் நடந்தன. அவர் போய் விடக் கூடாது, தனித்தே போட்டியிட வேண்டும் என்று திமுக பக்கமிருந்தும் சில காய் நகர்த்தல்கள் நடந்ததாகவும் கூட சொல்லப்பட்டது. பாஜகவோ, விஜய்யை எப்படியாவது தன் பக்கம் இழுக்க முயற்சித்தது. ஆனால் விஜய் யார் பக்கமும் போகவில்லை. யாராக இருந்தாலும் என் கிட்ட வாங்க, நான்தான் முதல்வர் என்று அவர் சொல்லி விட்டார்.


இப்படி நாலாபக்கமும் குழப்பம் நிலவிக் கொண்டுள்ள நிலையில்தான், சமீபத்தில் டெல்லியிலிருந்து சென்னை வந்த பியூஷ் கோயலிடம் அதிமுக தரப்பு முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதில் பாஜகவுக்கான சீட் எண்ணிக்கை குறித்து முக்கியமாக பேசப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பாஜக தரப்பு 50க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்ட நிலையில் 23 என்ற அளவில் எடப்பாடி பழனிச்சாமி சொல்லி வைத்திருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அதே அளவில் பாமகவுக்கும் சீட் ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது. தினகரன், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரது கட்சிகளுக்கு தலா 6 சீட் என்றும் சொல்லப்படுகிறது. ஓபிஎஸ் கூட்டணிக்கு வந்தால் அவருக்கு 3 சீட் கிடைக்கலாமாம். தமாகவும் அதே அளவிலேயே போட்டியிடும் என்று சொல்கிறார்கள். அது தாமரை அல்லது இரட்டை இலை சின்னமாக இருக்கலாம். ஓபிஎஸ்ஸும் கூட தாமரை சின்னத்திலேயே போட்டியிட வாய்ப்புள்ளது.


ஆனால் இதெல்லாம் வெறும் ஊகங்கள்தான். உண்மையில் அங்கு சீட் ஒதுக்கித் தரும் அளவுக்குக் கூட கட்சிகள் இன்னும் சேரவில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது. இப்படி நிலவரம் உள்ள நிலையில் மிக வலுவான கூட்டணி அமையும் என்று எந்தக் கணக்கில் எடப்பாடி பழனிச்சாமி சொல்லி வருகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.