அதிமுக கூட்டணியில் அமமுக.,விற்கு 6 சீட்டா?...உண்மையை உடைத்த டிடிவி தினகரன்

Dec 24, 2025,05:07 PM IST

ஆண்டிப்பட்டி : தமிழக அரசியல்கட்சிகள் கூட்டணி பற்றி பேசி வரும் நிலையில், அதிமுக-பாஜக கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையையே துவக்கி விட்டார்கள். நேற்று நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமி - பியூஷ் கோயல் ஆலோசனை பற்றி பல்வேறு தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் அதிமுக கூட்டணியில் தினகரனின் அமமுக.,விற்கு 6 சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது.


அதிமுக-பாஜக கூட்டணியில் விரைவில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் இணைய போவதாக தகல்கள் வெளியாகி வருகிறது. தேர்தல் கூட்டணி குறித்த பல்வேறு யூகங்கள் நிலவி வரும் சூழலில் இந்த தகவல்கள் குறித்து டிடிவி தினகரனிடமே நேரடியாக கேள்வி எழுப்பப்பட்டது. ஆண்டிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறுகையில், "ஆண்டிப்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளர் தான் கண்டிப்பாகப் போட்டியிடுவார். நாங்கள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும், இந்தத் தொகுதியை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றார். மேலும், "எங்களுக்கு எந்தக் கூட்டணி வேண்டும் என்பதை நாங்களே முடிவு செய்வோம்" எனக் கூறினார்.




சமீபகாலமாக அதிமுக கூட்டணியில் அமமுக இணையப் போவதாகவும், அவர்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதனை முற்றிலுமாக மறுத்த டிடிவி தினகரன், "கூட்டணியே இன்னும் அமையாத போது, தொகுதிகள் ஒதுக்கீடு என்பது வெறும் வதந்தி" என்று தெளிவுபடுத்தினார்.மேலும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், கட்சியின் கட்டமைப்பு மிகவும் பலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.


கடந்த செப்டம்பர் மாதம் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அமமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியதாக தினகரன் அறிவித்தார். தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லாத நிலையில், வரும் நாட்களில் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.தற்போதைய சூழலில், அதிமுக மற்றும் பாஜக இடையே தொதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையில், டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அடுத்தகட்ட நகர்வுகள் தமிழக அரசியலில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்