2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?

Su.tha Arivalagan
Jan 30, 2026,11:26 AM IST

சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக 50 சட்டசபைத் தொகுதிகளுக்கு பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. இதனால் பாஜக 50 தொகுதிகளில் போட்டியிட போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளது. பிப்ரவரி 17ம் தேதி தமிழக இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளதாக தேர்தல் கமிஷன் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதனால் பிப்ரவரி இரண்டாவது வாரம் அல்லது பிப்ரவரி மாத இறுதிக்குள் தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்ப்படுகிறது.இதனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. 


இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 50 தொகுதிகளுக்கு பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. இதை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் பாஜக 50 தொகுதிகளில் போட்டியிட போகிறதா? பொறுப்பாளர்களுக்கு ஒதுக்கி உள்ள இந்த 50 தொகுதிகளில் தான் பாஜக போட்டியிட போகிறதா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. 




தமிழகத்தில் என்டிஏ கூட்டணிக்கு தலைமை ஏற்றிருக்கும் அதிமுக, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கூறி வருகிறார். அப்படி தனிப்பெரும்பான்மையை பெற வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 140 முதல் 150 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டும். அப்படி போட்டியிட்டால் தான் 120 இடங்களுக்கும் குறையாமல் வெற்றி பெற்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். 118 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றால் கூட, கூட்டணி கட்சிகளை நம்பியே ஆட்சி நடத்த வேண்டிய நெருக்கடி நிலை ஏற்படும்.


அதிமுக 150 இடங்களில் போட்டியிடுகிறது என்றால், மீதமுள்ள 84 தொகுதிகளை தான் கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க முடியும். 84 தொகுதிகளில் பாஜக.,விற்கு மட்டும் 50 இடங்களை ஒதுக்கினால், 34 தொகுதிகளை மற்ற கட்சிகளுக்கு ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் 50 இடங்களில் பாஜக போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான். அதிமுக கூட்டணியில் பாஜக.,விற்கு 25 முதல் 35 சீட்கள் ஒதுக்குவது என ஏப்ரல் மாதம் கூட்டணி பேசும் போதே, தொகுதிகளும் பேசி பைனல் செய்யப்பட்டு விட்டதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


தற்போது 50 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது எதற்காக என்றால், ஒரு மாவட்டத்திற்கு ஒரு தொகுதி என்ற வகையில் குறிப்பிட்ட தலைவர்களுக்கும், பாஜக.,விற்கும் செல்வாக்கு அதிகம் உள்ள தொகுதிகள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இது பாஜக தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்திற்கான பொறுப்பாளர்கள் குழு மட்டுமே. பாஜக.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனிப்பதற்கு என தனியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு கீழ் குழுக்களும் பிரித்து கொடுக்கப்பட்டு, ஏற்கனவே சத்தமே இல்லாமல் தேர்தல் பணிகளை பாஜக துவங்கி விட்டது.