மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?

Su.tha Arivalagan
Feb 16, 2026,12:17 PM IST

சென்னை: டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று இந்தியாவிடம் படு தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி மீண்டும் இந்தியாவைச் சந்திக்க வாய்ப்புள்ளது. அது அரை இறுதிப் போட்டியா அல்லது இறுதிப் போட்டியா என்பதுதான் இப்போதைய கேள்வி.


பாகிஸ்தான் தனது மீதமுள்ள போட்டிகளில் (நமீபியா உட்பட) வெற்றி பெற்று, தனது பிரிவில் முதலிடம் பிடிப்பதாக வைத்துக்கொள்வோம். அதே நேரத்தில், இந்தியா தனது பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தால்:


விதிமுறைகளின்படி, ஒரு பிரிவின் முதலிடம் பிடிக்கும் அணி, மற்றொரு பிரிவின் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியுடன் அரையிறுதியில் மோத நேரிடும். இந்தச் சூழலில், ஏ பிரிவில் முதலிடம் பிடிக்கும் பாகிஸ்தான் பி பிரிவில் 2வது இடத்தைப் பிடிக்கும் இந்தியாவுடன் அரையிறுதிப் போட்டியில் மோத வாய்ப்பு உருவாகும்.


ஒருவேளை இரு அணிகளுமே சூப்பர் 8 சுற்றில் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் என்ன நடக்கும்?




பாகிஸ்தான் தனது சூப்பர் 8 பிரிவில் உள்ள அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தால், மற்றும் இந்தியாவும் தனது சூப்பர் 8 பிரிவில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தால், அவர்கள் அரையிறுதியில் ஒருவரை ஒருவர் சந்திக்க மாட்டார்கள். மாறாக இறுதிப் போட்டிக்கு வரும் வாய்ப்பு உருவாகும்.


இரு அணிகளும் வெவ்வேறு அணிகளுடன் அரையிறுதியில் மோதி வெற்றி பெற்றால் மட்டுமே, நாம் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டியை காண முடியும். அதுதான் உண்மையான கிரிக்கெட் போராகவும் இருக்கும். காரணம் உலகக் கோப்பை என்பதால் இரு அணிகளுமே முட்டி மோதும், முரட்டுத்தனமாக விளையாடும், அனல் பறக்கும்.. உணர்ச்சிகள் கொந்தளிக்கும்.. உற்சாகம் உச்சத்தைத் தொடும். அப்படிப்பட்ட போட்டியைத்தான் இரு நாட்டு ரசிகர்களுமே எதிர்பார்க்கவும் செய்வார்கள். எனவே இறுதிப் போட்டிக்கு இந்தியா, பாகிஸ்தான் வருமா என்ற எதிர்பார்ப்புதான் பலரிடமும் உள்ளது.


தற்போதைய நிலையில் பாகிஸ்தானுக்கு நமீபியாவுடனான வெற்றி என்பது தகுதி பெறுவதற்கு மிக முக்கியமானது. ரன் ரேட் மற்றும் புள்ளிப் பட்டியலில் அணிகள் அமரும் இடமே இந்த மோதல்களைத் தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.