ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?

Su.tha Arivalagan
May 20, 2026,01:36 PM IST

சென்னை : தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் நகர்வுகளின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இடம்பெற வேண்டும் என்ற விருப்பத்தை முன்னிறுத்தி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மறுபக்கம், தவெக அரசில் அதிமுக எம்எல்ஏக்கள் இடம் பெற மாட்டார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்திருப்பது புதிய பரபரப்பைக் கூட்டியுள்ளது.


இது குறித்துப் பேசிய தவெக தரப்பு முக்கிய நிர்வாகி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் என அனைவரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறோம். இது குறித்து அவர்கள் உடனடியாகத் தங்கள் கட்சித் தலைமைகளுடன் கலந்தாலோசித்து முடிவு சொல்வதாகக் கூறியுள்ளனர். எனவே, விரைவில் நல்ல செய்தி வரும் என்று நாங்கள் நம்புகிறோம்." என தெரிவித்தார். 


அதோடு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்ததாக மிக கடுமையாக விமர்சித்தார்.


இடதுசாரிகள் எச்சரிக்கை :




ஆதவ் அர்ஜூனாவின் இந்த அறிவிப்பு தமிழகத்தின் பாரம்பரிய கூட்டணிக் கணக்குகளில் ஒரு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக அமைச்சரவையில் விசிக உள்ளிட்ட கட்சிகள் இணைவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். 


விசிகவின் தன்னாட்சி முடிவுகளுக்கு மதிப்பளிக்கும் அதே வேளையில், தவெகவின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் பிற கட்சிகளுடனான கூட்டணி குறித்து அவர் சில நிபந்தனைகளையும் எச்சரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்.


"தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்க நினைத்தால் அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அதே அமைச்சரவையில் அதிமுகவினரையும் சேர்த்துக் கொள்ள தவெக முற்பட்டால், எங்களது ஆதரவை நாங்கள் மறுபரிசீலனை செய்வோம்." என இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன. 


விசிகவின் அதிகாரப் பகிர்வுக்கான விருப்பத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் இடதுசாரிகள், அதே மேடையில் அதிமுக போன்ற மாற்று அரசியல் சக்திகள் இடம்பெறுவதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்தத் தங்களின் நிலைப்பாட்டின் மூலம் மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளனர்.


அதிமுகவுக்கு இடமில்லையா




அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக தவெக விடுத்துள்ள அழைப்பு குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதே சமயம், அதிமுக.,விற்கு கூட்டணியில் இடம் இல்லை என திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார். 


அதிமுக.,வில் சி.வி.சண்முகம் தலைமையிலான எம்எல்ஏ.,க்கள் தவெக.,விற்கு ஆதரவாக ஏற்கனவே சட்டசபையில் ஓட்டளித்து விட்டனர். தவெக தங்களின் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பகைத்துக் கொண்டு தனியாக வந்து விட்டார்கள். 


இப்போது அந்த அதிமுக.,வினரை ஏற்றுக் கொள்ள தவெக தயாராக உள்ளது. ஆனால், அதிமுக கூட்டணிக்கு வந்தால் தாங்கள் தவெக அரசு அமைவதற்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்க உள்ளதாக விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் கூறுகின்றன. இதனால் சி.வி.சண்முகம் தரப்பு மட்டுமல்ல, தவெக.,அரசும் புதிய சிக்கலையும், நெருக்கடியையும் சந்திக்கும் நிலையில் உள்ளன.


இருப்பினும் தவெக அமைச்சரவையில் வேலுமணி தரப்பு இப்போது சேர்ந்தால் சட்டப் பிரச்சினை வரும் என்று சொல்லப்படுவதால் இப்போதைக்கு அதிமுக எம்எல்ஏக்களுக்கு தவெக அரசில் இடம் இருக்காது என்றே தெரிகிறது.