கரூர் சம்பவத்தால் பின்னடைவு.. வலுவாக தாக்கும் திமுக.. கூட்டணியைத் தேடும் நிலையில் விஜய்?
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவத்தை திமுக மிகப் பெரிய அளவில் கையில் எடுத்து தீவிரமாக அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளதால், தமிழக வெற்றிக் கழகம் கட்சி தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. திமுக எடுத்து வைத்து வரும் ஆணித்தரமான வாதங்கள், பிரதிவாதங்கள், ஆதாரங்கள், விளக்கங்களுக்கு சரியான பதிலடி கொடுக்க முடியாத நிலையில்தான் தவெக இருந்து வருகிறது. இதனால் வருகிற சட்டசபைத் தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடாது, ஏதாவது ஒரு கட்சியுடன் வலுவான கூட்டணி அமைத்துதான் போட்டியிட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.
Stalin is more dangerous than karunanidhi என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா முன்பு சொன்னது மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. அவர் என்ன பொருளில் சொன்னார், ஏன் சொன்னார் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உண்மையில் அதை இப்படி மாற்றிச் சொல்ல வேண்டும் DMK is more dangerous than any other party.. காரணம், திமுக அத்தனை சீக்கிரம் ஒருவருடன் மோதாது.. மோதுவதற்கு முன்பு எதிரியின் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை நிறுத்தி நிதானமாக எடை போடும், அளவிடும், அமைதி காக்கும், அனுமானிக்கும்.. எந்த இடத்தில் அடிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே யோசித்து வைத்திருக்கும்.. அதேசமயம், அடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், மரண அடியாக கொடுக்கும்.. இதை கடந்த காலங்களில் நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.
விஜய்யிடமும் அதே அணுகுமுறையைத்தான் அது கடைப்பிடித்துள்ளது. அதாவது கருணாநிதி காலத்து ஓல்டு டெக்னிக்கை வைத்துதான் இப்போது விஜய்யையும் அது நிலைகுலைய வைத்துள்ளது. பகிரங்கமாக சொல்வாதானால் விஜய்யை ஆட விட்டு வேடிக்கை பார்த்து வந்தது திமுக. அதை விஜய்தான் புரிந்து கொள்ளவில்லை.. அதாவது அவருக்கு அரசியல் புரியவில்லை. ஆடும் வரை ஆடட்டும், நம்ம ரவுண்டு வரும்போது பார்த்துப்போம் என்றுதான் திமுக அமைதி காத்து வந்தது. அதேசமயம், நாலாபுறமும் விஜய்க்கு எதிராக அணை கட்டவும் அது மறக்கவில்லை. சமயம் வரும்போது சிதைப்போம் என்பதுதான் திமுகவின் திட்டம்.
ஒவ்வொரு கூட்டத்திலும் விஜய்க்கு்க கூடிய கூட்டத்தைப் பார்த்து தவெகவினரும், தவெக ஆதரவாளர்களும்தான் சந்தோஷப்பட்டனர், குதூகலித்தனர்.. ஆனால் இந்த இரண்டிலும் சேராத பொதுமக்கல் பதை பதைக்கவே செய்தனர். இவ்வளவு கூட்டம் இருக்கே, பெண்கள், குழந்தைகள் எல்லாம் வருகிறார்களே.. ஏதாவது அசம்பாவிதம் ஆனால் என்னாகும் என்று பலரும் பதைக்கவே செய்தனர். இதையும் விஜய் தரப்பு புரிந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு ஊரிலும் கூடிய கூட்டமும், பெரிதாக எந்தப் பிரச்சினையும் வரவில்லை என்பதாலும் விஜய் தரப்பு மேலும் மேலும் உற்சாகமாகிக் கொண்டே போனது. ஆனால் காத்திருந்த விபரீதம் புரியாமல்.
கரூரில் நடந்த சம்பவம் விஜய் மீதான மொத்த இமேஜையும் தூக்கி கீழே போட்டு உடைத்திருக்கிறது. இந்த இடத்தில்தான் திமுக களம் குதித்தது, களேபரமாக்கி விட்டது. மொத்த திமுக விங்குகளும் எப்படி செயல்பட்டன, இன்னும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை இந்த நொடி வரை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. இதுதான் திமுக.. இந்த திமுகவை அதிமுகவுக்கு நன்றாக தெரியும், மற்ற கட்சிகளுக்கும் மிக நன்றாக தெரியும். இதனால்தான் அவர்கள் பார்த்துப் பார்த்து விளையாடுகிறார்கள்.
ஆனால் தமிழக வெற்றிக் கழகம் இளங்கன்று என்பதால் பயம் தெரியாமல் விளையாடி விட்டது. இப்போது திமுகவின் சீற்றம் மிகப் பயங்கரமாக இருப்பதால் தவெகவினர் உண்மையான அரசியல்னா இதுதானா என்ற பாடத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அதேசமயம், விஜய்க்கு இப்போதைக்கு யாரும் முடிவுரை எழுதி விடவும் முடியாது. அவர் மற்ற நடிகர்கள் போலத் தெரியவில்லை. அவரது அரசியலே நிதான அரசியல்தான். அதைத்தான் ஆரம்பத்திலிருந்து அவர் அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொண்டு வருகிறார். கரூர் சம்பவத்திற்கு அவரை நேரடியாக குற்றம் சாட்டவும் முடியாது. என்ன ஒன்று.. அவர் சற்று சுதாரிப்பாக இருந்திருக்க வேண்டும். தனது எதிரி எப்படிப்பட்டவர், எந்த மாதிரி பாய்வார்கள், எந்த மாதிரி செயல்படுவார்கள் என்பதை அவர் முன்கூட்டியே உணர்ந்து உஷாராக இருந்திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியதுதான் அவரது ஒரே தவறு.
இப்போது விஜய்யின் நிலை வேறு மாதிரியாக மாற ஆரம்பித்திருக்கிறது. தற்போது உள்ள நிலையில் அவர் அடுத்தடுத்து செயல்படப் போகும் விதத்தில்தான் அவரது அரசியல் தலையெழுத்து அமையும். அதாவது இந்த சம்பவத்திலிருந்து மீளுவதோடு மட்டுமல்லாமல், கட்சியினர், ரசிகர்கள் தாண்டி பொதுமக்களிடம் அவர் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டும். அவர்களது மனதைத் தொடும் வகையில் அவர் செயல்பட்டாக வேண்டும். அவர் மீதான வெறுப்பு பிரச்சாரத்தைத் தாண்டி மக்களிடம் அன்பைப் பெற வேண்டும். இதைச் செய்தால்தான் அவர் தொடர்ந்து தனித்து செயல்பட முடியும்.
அப்படி நடக்காவிட்டால் அவருக்கு வேறு ஒரு கூட்டணிக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படிப் போனால் எந்தக் கூட்டணிக்கு அவர் போக முடியும் என்பதற்கும் அவருக்கு ஒரே ஒரு ஆப்ஷன்தான் உள்ளது. அதாவது அதிமுக - பாஜகவுடன்தான் அவர் கை கோர்க்க வேண்டும். அதைத் தாண்டி அவருக்கு வேறு வழியில்லை. அதிமுகவை மட்டும் பிரித்து எடுத்து தனியாக கூட்டணி வைக்க வாய்ப்பில்லை. அதை பாஜக அனுமதிக்காது. காரணம், இப்போது விஜய்க்கு ஆதரவாக முழு வீச்சில் இறங்கியிருப்பது பாஜகதான். இதை விஜய்யும் உணர்ந்தே இருக்கிறார்.
இதனால் தனக்கு இக்கட்டான நேரத்தில் கை கொடுத்து ஆதரவாகப் பேசி வரும் அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய சூழலில் அவர் தனித்துப் போட்டியிட்டால் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. மிகப் பெரிய தோல்விதான் கிடைக்கும். காரணம், கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் சென்னை திரும்பியது, 2 நாட்களுக்குப் பிறகு அறிக்கை வெளியிட்டது, நடந்த சம்பவத்திற்கு தானும் ஒரு காரணம்தான் மன்னித்து விடுங்கள் என்று மக்களிடம் கூறாதது என்று பல அதிருப்திகள் அவர் மீது படிந்துள்ளன. அதைச் சுமந்து கொண்டு அவர் மக்களைச் சந்திக்கச் சென்றால் மேலும் மேலும் அதிருப்தியும் கசப்பான அனுபவங்களுமே அவருக்குக் கிடைக்கும்.
தனது விக்கிரவாண்டி மாநில மாநாட்டின் போது கூட்டணிக்கு நாங்க ரெடி.. யார் வேண்டுமானாலும் வாங்க என்று அதிரடியாக அறிவித்தார் விஜய். இதனால் யாரெல்லாம் வரப் போறாங்க என்ற பரபரப்பும் கிளம்பியது. ஆனால் ஒரு கட்சியும் இதுவரை வரவில்லை. விஜய்யை அவர்கள் நம்பவில்லை என்பதே இதற்குக் காரணம்.. அவர்களது முடிவு சரிதான் என்பதை கரூர் சம்பவம் நிரூபித்து விட்டது. இந்த நிலையில் தற்போது நிலைமை அப்படியே உல்டாவாகி விட்டது விஜய்க்கு. அவர் ஏதாவது ஒரு கூட்டணியைத் தேடிப் போக வேண்டிய கட்டாயம் தற்போது வந்திருக்கிறது.
விஜய் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.