சென்னை: கடந்த வாரம் கரூரில் தவெக தலைவர் விஜய்யின் சாலைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் வெளியிட்ட வீடியோவைப் பார்க்கும்போது, விஜய் அரசியலில்இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இந்த துயரத்திற்குப் பிறகு, அவரது தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஒரு இக்கட்டான கட்டத்தில் உள்ளது.
விஜய் முதலில் இந்த சம்பவத்திற்காக எந்தவிதமான நிபந்தனையோ, பூச்சோ இல்லாமல் பகிரங்கமாக வருத்தமும் மன்னிப்பும் கேட்க வேண்டும். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்கிறார். ஆனால் ஒவ்வொரு கூட்டத்துக்கும் தாமதமாக அவர் வந்ததை உலகமே பார்த்துள்ளது. தாமதிக்காமல் உரிய நேரத்தில் வந்திருந்தால் குறைந்தபட்சம் இப்படி ஒரு நெருக்கடியை நிச்சயம் அவர் சந்தித்திருக்க வாய்ப்பே ஏற்பட்டிருக்காது. தனது கட்சியினரை இன்னும் சற்று கண்டிப்புடன் அவர் நடத்தியிருக்க வேண்டும்.
இ்நத விஷயத்தில் விஜயகாந்த்தை அவர் ரோல்மாடலாக எடுத்திருக்க வேண்டும். அதையும் அவர் செய்யவில்லை. ஒப்புக்கு அறிக்கை மட்டும் விட்டால் போதுமா.. இவரது ரசிகர்களில் 99 சதவீதம் பேர் இளம் ரத்தம் ஓடும் இளைஞர்கள். துடிப்புடன்தான் இருப்பார்கள். ஆனால் விஜய்தான் அவர்களை கண்டித்து வழி நடத்தியிருக்க வேண்டும். அதை அவர் செய்யத் தவறி விட்டார் என்பது உண்மை. அதை அவர் முதலில் உணர வேண்டும்.
51 வயதான விஜய், தமிழ்நாட்டின் மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை ஈர்க்கும் சக்தி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சினிமா வெளிச்சத்தில் இருந்து அரசியல் களத்திற்கு மாற, அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். இந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, விஜய் தனது சென்னை வீட்டில் முடங்கியுள்ளார். அவரது தவெக கட்சி இப்போது ஒரு சிக்கலான சூழ்நிலையில் உள்ளது. களத்தில்
முதல் ஆளாக அவர்தான் நின்றிருக்க வேண்டும். விஜயகாந்த் இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால் எப்படிச் செயல்பட்டிருப்பார் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலத்தின்போது ரோட்டில் இறங்கி அவர் கூட்டத்தைக் கட்டுப்படுத்திய விதத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. அப்படி செயல்பட்டிருக்க வேண்டும் விஜய்.
எதைச் செய்ய வேண்டுமோ அதை இதுவரை விஜய் செய்யவே இல்லை. தான் தப்பே செய்யவில்லை என்று நிறுவப் பார்க்கிறார் விஜய். அதுதான் முதல் பெரிய தவறு. தனது பக்கமும் தவறுகள் உள்ளன. அதற்காக வருந்துகிறேன். இனிமேல் அதைச் சரி செய்வேன் என்று அவர் பகிரங்கமாக கூறியிருக்க வேண்டும். அதை ஏன் செய்யத் தவறுகிறார் என்பது புரியவில்லை. இப்போதும் கூட நேற்றைய வீடியோவில் சிஎம் சார் என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணிக் கொள்ளுங்க, என் தொண்டர்கள் மீது கை வைக்காதீங்க என்று அவர் கூறியது சினிமாத்தனமான வசனமாகவே தோன்றுகிறது.
ஒரு முதல்வராக தனது கடமையைச் செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதைக் குறை கூறவே முடியாது. ஒரு வேளை அவர் இதையெல்லாம் செய்யாமல் இருந்திருந்தால் அவர் விமர்சிக்கப்பட்டிருப்பார். ஒரு முதல்வராக, தனது மாநிலத்தில் நடந்த துயரச் சம்பவத்திற்காக அவர் இரங்கல் தெரிவித்தார். உடனே கிளம்பிப் போனார். நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டார், நிவாரண உதவிகளையும் அறிவித்தார்.சட்டப்படி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குகளும் போடப்பட்டுள்ளன. இதை தவறாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும். விஜய் எதார்த்த அரசியலுக்கு வேகமாக வர முயற்சிக்க வேண்டும்.
அதேபோல அதிகாரிகள் சொன்னார்கள், தான் உடனே பாதிக்கப்பட்டவர்களைப் பார்ப்பது சரியாக இருக்காது என்று விஜய் கூறுவதும் பொருத்தமாக இல்லை. உடனே வர முடியாது என்றால் திருச்சியிலேயே தங்கியிருக்கலாமே. அவர் திருச்சியில் பாதுகாப்பான முறையில் தங்கினால் தொண்டர்களுக்கும் ஒரு தெம்பு கிடைத்திருக்கும். மக்கள் மத்தியிலும் அவர் மீதான நம்பிக்கை கூடியிருக்கும். அதைச் செய்யத் தவறியது மில்லியன் டாலர் மிஸ்டேக்.
விஜய் முதல் வேளையாக தன்னைச் சுற்றியிருக்கும் உருப்படாத ஆட்களை விரட்டியடிக்க வேண்டும். சரியான அனுபவம் உள்ள நல்ல தலைவர்களை, பிற கட்சிகளிலிருந்து இழுத்தாவது தன்னுடன் சேர்க்க வேண்டும். கூட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றை நடத்துவதில் நல்ல அனுபவம் வாய்ந்த 2ம் கட்டத் தலைவர்கள் உடனடியாக அவருக்குத் தேவை. இவை எல்லாவற்றையும் விட தனது ரசிகர்களை நல்ல தொண்டர்களாக மாற்ற வேண்டிய பெரும் கட்டாயத்தில் அவர் இருக்கிறார். அவரது கட்சியினரும் நிதானமாக எதையும் அணுக வேண்டும். சினிமா ரசிகர்கள் போல பின்னாடியே போவது, பஸ்களில் தொற்றுவது, மரத்தில் ஏறுவது என்று இருந்தால்.. நிச்சயம் விஜய்க்கு ஜெயம் கிடைக்காது.. விஜயத்துடன் வீடு திரும்ப வேண்டியதுதான்.
நல்ல இளைஞர் செல்வாக்கு விஜய்க்கு உள்ளது. மிகப் பெரிய எழுச்சியுடன் அவர்கள் அணி திரள்கிறார்கள். சமீப கால அரசியலில் யாருக்கும் கிடைக்காத மாபெரும் ஆதரவு இது. மக்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இன்னும் மக்கள் முழுமையாக விஜய்யை வெறுக்கவில்லை. இதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் குழப்பிக் கொண்டிருக்கிறார் விஜய். அவர் உடனடியாக தெளிவாக வேண்டும். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை எடுத்துக் கொண்டு வேகமாக தன்னையும், தனது தொண்டர்களையும் திருத்திக் கொண்டு தெளிவான முறையில் யாரையும் பாதிக்காத வகையில் குறிப்பாக மக்களை பாதிக்காத வகையில் அவர் செயல்பட்டால் நிச்சயம் ஜெயிக்க முடியும். விஜய் யோசிக்க வேண்டும்.
விஜய் கற்க வேண்டியது நிறைய உள்ளது.. இன்னும் மேம்பட்டால்தான் நல்லது.. இல்லாவிட்டால் கஷ்டம்!
பீகார் சட்டசபைத் தேர்தல்.. வாக்களிக்கத் தயாராகும் 7.4 கோடி வாக்காளர்கள்.. இறுதிப் பட்டியல் வெளியீடு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 01, 2025... இன்று இவர்களின் வாழ்க்கையே மாறும்
35 வயதுப் பெண்ணை மணந்த 75 வயது தாத்தா.. முதலிரவு முடிந்த மறு நாள் நடந்த விபரீதம்!
கரூரில் விஜய் பேரணியின் போது நடந்தது இதுதான்.. வீடியோ போட்டு விளக்கிக் கூறிய அமுதா ஐஏஎஸ்!
கரூர் சம்பவத்திற்குப் பிறகு திமுக அரசு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் இன்று முதல் அக்., 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
உறுதியாக எனது அரசியல் பயணம் தொடரும்... சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும்: விஜய்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கைது
{{comments.comment}}