தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!

Su.tha Arivalagan
Feb 20, 2026,01:11 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் ஆகிய இருவரும் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, திமுக சார்பில் வழங்கப்படவுள்ள ராஜ்யசபா இடத்தில் எல்.கே.சுதீஷ் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.


தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டை திமுக தருவது உறுதியானால், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே தேமுதிக தனது முதல் ராஜ்யசபா எம்.பியை காணும் வாய்ப்பு உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சந்திக்க முதல் முறையாக திமுகவுடன் கை கோர்த்துள்ளது தேமுதிக. விஜயகாந்த்தின் கடைசிக் காலத்திலும், அவருக்குப் பிறகும் சரிவு நிலையில் இருந்து வந்து தேமுதிகவினருக்கு இந்தப் புதிய கூட்டணி புதிய உற்சாகத்தையும், நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது. தேமுதிக மீண்டும் எழுச்சி பெறும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்துள்ளது.




மேலும் சட்டசபைத் தேர்தலில் குறைந்தது 3 முதல் 5 எம்எல்ஏக்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையும் அக்கட்சியினர் மத்தியில் உள்ளதாம். திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் 6 முதல் 7 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட்டும் கிடைக்க வாய்ப்புள்ளது.


இந்தத் தேர்தலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வடக்கில் ஒரு தொகுதியில் போட்டியிடக் கூடும். அனேகமாக அவர் விஜயகாந்த் போட்டியிட்டு வென்ற ரிஷிவந்தியம் அல்லது விருத்தாச்சலம் ஆகிய தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடலாம். விஜயகாந்த்தின் பாரம்பரியத்தை தான் தொடர பிரேமலதா விரும்புவதால் இந்த முடிவாம். 


அதேபோல விஜய பிரபாகரன், தென் மாவட்டங்களில் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் அவர் நிற்கலாம். விருதுநகர் மாவட்டம்தான், விஜயகாந்த்தின் சொந்த ஊர் உள்ள மாவட்டம். இதனால்தான் கடந்த மக்களவைத் தேர்தலில் விஜய பிரபாகரன், விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் என்பது நினைவிருக்கலாம்.


இதுதவிர விருகம்பாக்கம், பல்லாவரம், சேலத்தில் ஒரு தொகுதி என தேமுதிகவுக்கு சீட்டுகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பல்லாவரம் தொகுதியில் தற்போது திமுக சார்பில் இ. கருணாநிதி உறுப்பினராக உள்ளார். அவரை விடுவித்து விட்டு அந்த சீட்டை தேமுதிகவுக்கு திமுக கொடுக்குமா அல்லது அருகாமையில் உள்ள வேறு தொகுதியைத் தருமா என்பது தெரியவில்லை.


தேமுதிகவுக்கு கிடைக்கலாம் என்று கருதப்படும் தொகுதிகளின் உத்தேசப் பட்டியல்: ரிஷிவந்தியம், விருத்தாச்சலம்,  விக்கிரவாண்டி, விருதுநகர் மாவட்டத்தில் ஒரு தொகுதி, விருகம்பாக்கம் (விஜயகாந்த் வீடு உள்ள பகுதி என்பதால்), பல்லாவரம் அல்லது அருகாமை தொகுதி, சேலத்தில் ஒரு தொகுதி.