சத்தம் ஏதுமின்றி... மௌனமாய் விழிகளில்!
- அ.வென்சி ராஜ்
மான் விழி கொண்ட மங்கையைக் கண்டு...
மன்னவன் அவனும் மையல் கொண்டானோ..
வில்லெனும் அவளின் புருவம் கண்டு...
வேந்தன் அவனும் விருப்பம் கொண்டானோ....
தேன் ஊறிய பலா இதழ்கள் கண்டு..
திரும்பவும் பார்த்திட ஆசை கொண்டானோ...
மலர்களின் அரசி அவளெனக் கூறிட ...
மலரோடு அவள் முன் மயங்கி நின்றானோ...
மன்னவன் புன்னகைக் கண்டதும் மாது அவள்..
வெட்கத்தால் சிவந்துபோய் வேந்தனைப் பார்த்தாளோ ...
மொத்தத்தில் இருவரும் சத்தம் ஏதுமின்றி...
மௌனமாய் விழிகளில் பேசி மகிழ்ந்தனரோ.... !
(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)