Proverb: தாயைப் பார்த்து பெண்ணை கொள், பாலை பார்த்து பசுவைக் கொள்!

Swarnalakshmi
May 11, 2026,04:38 PM IST

- ஸ்வர்ணலட்சுமி 


தாயின் அன்பு,அக்கறை, அரவணைப்பு, தியாகம், முக்கியத்துவம் ஆகியவற்றை உணர்த்தும் நான் ரசித்த சில பழமொழிகள், வாக்கியங்களை பற்றி  இப்பதிவில் பார்ப்போம்..


1. தாயைப் பார்த்து பெண்ணை கொள், பாலை பார்த்து பசுவைக் கொள்.


ஒரு பெண்ணின் குணத்தை அறிய அவளது தாயை  பார்த்தாலே தெரிந்து விடும். பசுவின் பால் எவ்வளவு தூய்மையாக உள்ளது, அவ்வாறு ஒரு பெண்ணின் தூய்மையான உள்ளம் அவளது தாயின் உள்ளத்தை போன்றே தூய்மையாக அமையும், என்பதை விளக்குகிறது .


2. அன்னை ஓர் ஆலயம்.


தாய் என்பவளே ஒரு கோவிலுக்கு சமமாகும்.


3. தாய் உள்ளம் வாடாத மலர்.




தாயின் அன்பு எப்போதும் தூய்மையானது, அன்று பூத்த மலர் போல இருக்கும். எப்போதும் அவள் அன்பு வாடாது. என்பதை உணர்த்துகிறது.


4. அழுத பிள்ளைக்காக பாய் விற்றாலும், தாய்ப்பால் கொடுப்பாள்.


தாய் எத்தகைய சூழ்நிலையில் இருந்தாலும்,தன் பிள்ளை அழுதது என்றால் இரவு பகல் பாராமல் தன் உடலை வருத்தி ரத்தத்தை பாலாக்கி  கொடுப்பாள் என்பதை விளக்குகிறது.


5. தாயைப் போல ப்பிள்ளை நூலைப்போலச் சேலை.


சேலை நெய்யும் பொழுது நூலைப் பொருத்துதான் சேலையின்  நிறமும்,தரமும்   அமையும். அதுபோல  தாயின் குணாதிசயங்கள் பிள்ளையிடம் பிரதிபலிப்பதை  குறிக்கிறது.


6. தாய் இல்லா பிள்ளைக்கு நாய் பட்ட பாடு.


தாய் இல்லாமல் இருக்கும் பிள்ளைகள் படும் கஷ்டத்தை உணர்த்துகிறது.


7. தாயைப் பார்க்கிலும் சிறந்த கோயிலும் இல்லை.


வாழ்வில் பண்டிகை நாட்கள்,சிறந்த நாட்களில் கோவிலுக்கு செல்வதை விட தாயிடம் பெறும்  ஆசீர்வாதம் சிறந்தது.


8. தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.


ஒரு குழந்தை கருவில் இருந்து பெரியவன் ஆகும் வரை அனைத்தையும் கற்பது தாயிடம் இருந்துதான். அவள் இதயம் பள்ளிக்கூடத்திற்கு சமமானது.


9. தாயின் வாழ்த்து வெந்தணலால்  வேகாது, வெள்ளத்தால் அழியாது.


தாயிடம் பெரும் வாழ்த்தானது சுட்டெரிக்கும் நெருப்பாலும், புயல் வெள்ளத்தால் அழியாது என்பதை உணர்த்துகிறது.

அத்தனை சக்தி தாயின் வாழ்த்துக்களுக்கு உள்ளது என்பதை விளக்குகிறது.


10. மனித அன்பின் பிறப்பிடம் தாய்.

 

பிள்ளைகளிடம் தாய் காட்டும் அன்பே முதன்மையானது. அன்பு செலுத்துவதை கற்றுக் கொள்வதே தன்    தாயிடமிருந்து தான்.


11. அன்னையின் அன்புக்கு வயது  கிடையாது.


தன் பிள்ளை எவ்வளவு வயது மூத்தவனாக, பெரியவனாக, அரசனாக ஆனாலும் தாய்க்கு தன் பிள்ளை என்றும் குழந்தைதான்.


12. தாயைப் போல உறவில்லை,  காயத்ரியை  போல மந்திரம் இல்லை.


அனைத்து மந்திரங்களிலும் காயத்ரி மந்திரம் மகிமை வாய்ந்தது, முதன்மையானது. அதுபோல தாயின் உறவும் மிக்க மகிமை வாய்ந்தது. சிறந்தது.


தாயும் தகப்பனும் தவிர, சகலமும் வாங்கலாம்.


காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம்.ஆனால், தாய் தகப்பனை வாங்க இயலாது. விலையில்லா பொக்கிஷங்கள் அவர்கள். மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி  பாலசுப்ரமணி.