World Bicycle day: ஓரம்போ ஓரம்போ.. இன்னும் சைக்கிள் ஓட்டுபவரா நீங்க.. வாழ்த்துகள்ங்க!

Swarnalakshmi
Jun 03, 2026,11:28 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3  ஆம் தேதி உலக மிதிவண்டி  நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. மிதிவண்டி சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு எளிமையான மலிவான போக்குவரத்து வாகனம். 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த நாளை பன்னாட்டு நாளாக அறிவித்தது.


உலக மிதிவண்டி நாளுக்கான ஐக்கிய நாடுகளின் தீர்மானம் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வந்த மிதிவண்டிகளின் தனிச்சிறப்பு, நீண்ட காலமாக அவற்றின் பயன்பாடுகள், மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு எளிமையும் மலிவான 'போக்குவரத்து கருவி' என்பதை அங்கீகரித்தது.


'உலக மிதிவண்டி தினம்' ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதோடு பசுமையான சுற்றுச்சூழலையும் உருவாக்கும் மிதிவண்டி பயன்பாட்டின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது. 


ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலக மிதிவண்டி தினத்தை அறிவித்தது. போலந்து அமெரிக்க சமூக விஞ்ஞானியும், மிதிவண்டி பயன்பாட்டு ஆர்வலருமான பேராசிரியர் லெசெக்  சிபில்ஸ்கி இந்த யோசனையை முன் வைத்தார். இந்த தீர்மானம் 193 உறுப்பு நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் மிதிவண்டி பயன்பாட்டின் ஆதரவு பெருகியது.


இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மிதிவண்டி பயன்பாட்டில் இருந்து வருகிறது. முதல் மிதிவண்டிகளான 

'டேண்டி  ஹார்ஸ் ' 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அன்று முதல் மிதிவண்டிகள் குறிப்பிடத்தக்க அளவில் பரிணாம வளர்ச்சி அடைந்து பலரின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது.


மிதிவண்டி ஓட்டுவதன் நன்மைகள் :




இன்றைய காலங்களில் இருக்கும் அதிகமான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும்,காற்று மாசுபாட்டை குறைக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு போக்குவரத்து முறை மிதிவண்டி ஓட்டுதல் ஆகும்.


ஆரோக்கியம்:

 

உடல் ஆரோக்கியத்திற்கும் மிதிவண்டி ஓட்டுதல் என்பது உடற்பயிற்சி செய்வதற்கு ஒரு சிறந்த வழியாகும்.இது இதய ஆரோக்கியம் தசை வலிமை மற்றும் ஒட்டு மொத்த உடற்பகுதி மேம்படுத்துவதற்கான ஒரு அருமையான வழியாகும்.


பொருளாதார நன்மை:


மிதிவண்டிகளை அனைத்து தரப்பினரும் வாங்க இயலும் என்பதாலும்,மோட்டார் வாகனங்களுடன் ஒப்பிடும்போது அவற்றின் பராமரிப்பு செலவு குறைவு என்பதாலும் மிதிவண்டி பயன்படுத்துவதனால் பொருளாதார நன்மைகள் அதிகம்.


விலை மலிவு:


பிற போக்குவரத்து முறைகளைப் போல் அல்லாமல் மிதிவண்டிகள் மலிவானவை மற்றும் அனைத்து தரப்பு மக்களும் எளிதில் வாங்கக் கூடியவை ஆகும்.


மகிழ்ச்சி:

 

மனம் சோர்வாக இருக்கும் போது ஒரு மிதிவண்டியில் ஏறி ஒரு சுற்று பயணம் சென்று வந்தால்,அதுவே மகிழ்ச்சியான மருந்து ஆக இருக்கும்.


மிதிவண்டிகளை பற்றி எழுச்சியூட்டும் பொன்மொழிகள் :

 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்பவர் 'வாழ்க்கை என்பது மிதிவண்டி ஓட்டுவதை போன்றது சமநிலையை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும் 'என்று மிதிவண்டியை மையப்படுத்தி  எழுச்சியூட்டும்  பொன்மொழியை கூறியுள்ளார்.


'மிதிவண்டி ஓட்டுவதன் எளிய இன்பத்திற்கு ஈடு இணை இல்லை 'என்று ஜான் எஃப் கென்னடியும் கூறியுள்ளார்.


மிதிவண்டி குறைந்த செலவில் பயணிக்க கூடிய மிகச்சிறந்த சாதனமாகவும், உடற்பயிற்சிக்கும், உடல் எடையை குறைக்கவும், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.


கொண்டாட்டம்:


உலக மிதிவண்டி  தினத்தையொட்டி  பல்வேறு நகரங்களில் சைக்கிள் பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மிதிவண்டிகளின் பயன்பாட்டை நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவதே இந்த நாளின் முக்கிய செய்தியாகும்.


அருகிலுள்ள கடைகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்ல இருசக்கர வாகனங்களை தவிர்த்து மிதிவண்டியை பயன்படுத்துவது சிறுவர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சியாக இருக்கும். இன்றைய  போக்குவரத்து நெரிசலை குறைக்க இது ஒரு சிறந்த ஆரோக்கியமான வழி  இல்லையா?.. பிரண்ட்ஸ். பள்ளிச் சிறுவர் சிறுமியருக்கு மிதிவண்டி வாங்கி கொடுத்து அவர்களை ஓட்ட உற்சாகப்படுத்துவது சிறப்பு.


மேலும் இது போன்ற  சுவாரஸ்யமான  தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.