எது சகோதரத்துவம்?
- தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச்செல்வி
ராமுவும் சோமுவும் சிறுவயதில் பிரிக்க முடியாத பாசமான சகோதரர்கள். வறுமையிலும் ஒருவருக்கொருவர் அரவணைப்பாக இருந்தனர்; ராமு சோமுவை ஒருபோதும் எங்கும் விடாமல் அன்பாய் பார்த்துக் கொண்டான்.
காலம் உருண்டோடியது. இருவரும் வளர்ந்து, அவரவர் குடும்பம் எனத் தனித்தனியாக வாழத் துவங்கினர். முதுமையில், பூர்வீக சொத்துப் பிரிவினையின் போது, சிறுவயது பாசம் மறைந்து, சுயநலம் மேலோங்கியது.
எனது குடும்பம், எனது உரிமை' என்ற எண்ணம் அவர்களை எதிரிகளாக்கியது. தம்பியை நெஞ்சோடு அணைத்திருந்த அதே அண்ணன், இப்போது சொத்துக்காக அவனைக் கோர்ட்டுக்கு இழுத்தான்.
"நம் இரத்த பந்தத்தை விட சொத்து முக்கியமா?" என்ற தம்பியின் மனக்குமுறலுக்கு அண்ணனிடம் பதில் இல்லை. அந்த இளமை பாசம் முதுமையில் எங்கே போனது? 'நான்', 'எனது' என்ற அகந்தை, இளமையின் தூய பாசத்தைச் சிதைத்து, அவர்களை அந்நியர்களாக்கியது.
நான் குழந்தையா இருந்தபோது என்னை அப்படி அரவணைத்த இந்த அண்ணன் , இன்று இப்படி என்னை வதைக்கிறானே என நினைத்து மனதுக்குள் வெதும்பிப் போனான் சோமு.
சொத்தை சமமாக பங்கிடுவது தானே நியாயம். ஆனால் அவன் என்னை வளர்த்தானாம். அதனால் அவனுக்கே எல்லாம் வேண்டுமாம்.!
இதுவே இன்றைய உலகில் நடக்கும் கசப்பான உண்மை.
(சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். சாதனைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா போன்ற 30 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்)