இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலம் தேவையா?
- க.யாஸ்மின் சிராஜூதீன்
இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலம் தேவையா என சிந்தித்தால் அதை யாராலும் மறுக்க முடியாது கண்டிப்பாக தேவைதான்.. ஆனால் ஒன்று ஆங்கிலம் என்பது ஒரு மொழி அதை லட்சக்கணக்கில் செலவிட்டு தனியார் பள்ளிகளில் படிக்க வைத்தால் தான் கிடைக்கும் என பெரும்பாலான பெற்றோர்கள் நம்புவதை என்னவென்று சொல்வது. ஆங்கில வழி கல்வி அரசுப் பள்ளியிலும் உள்ளது.நம் தாய் மொழியை யாரும் கற்றுக் கொண்டு பிறப்பதில்லை.. முயன்று தவறி கற்கிறார்கள்.
வீட்டில், சுற்றுப்புறத்தில் பேசுவதை போலச் செய்து பேசக் கற்றுக்கொள்கிறோம். நகரத்தில் மற்றும் கிராமத்தில் படித்த பெற்றோர் வீட்டில் ஆங்கில வார்த்தைகளை சிறுவயதிலிருந்தே கற்றுக்கொடுக்கும் போது குழந்தைகள் தாய் மொழியோடு ஆங்கிலம் பேசக் கற்றுக் கொள்கின்றனர். மொழியை கற்க இன்று பல வழிகள் உள்ளன. ஆன்லைன் பயிற்சி கூடங்களும் உள்ளன.
ஆங்கிலம் என்பது மொழியே அதை கற்க முயற்சி செய்வோம் தாய்மொழியை போற்றி வணங்குவோம்.
சரி இப்போது நம் வாழ்வில்ஆங்கிலத்தின் பங்கு என்ன என்பதை பார்ப்போம்.
இன்றைய உலகம் உலகமயமாக்கலின் காலமாகும். உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு செயல்படும் சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய காலகட்டத்தில் ஆங்கில மொழியின் அவசியம் மிகவும் அதிகரித்துள்ளது.
ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழியாகக் கருதப்படுகிறது. கல்வி, தொழில், அறிவியல், தொழில்நுட்பம், வணிகம், மருத்துவம் போன்ற பல துறைகளில் ஆங்கிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பலரும் ஆங்கிலத்தின் மூலம் உலக அறிவை அறிகிறார்கள். இணையதளங்களில் உள்ள பெரும்பாலான தகவல்கள் ஆங்கிலத்தில் இருப்பதால், அதை அறிந்திருப்பது அறிவைப் பெருக்க உதவுகிறது.
வேலைவாய்ப்புகளிலும் ஆங்கில அறிவு முக்கியமானதாகும். பல நிறுவனங்கள் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் தெரிந்தவர்களை விரும்புகின்றன. வெளிநாடுகளில் வேலை பெறவும், மற்ற மாநில மக்களுடன் தொடர்பு கொள்ளவும் ஆங்கிலம் உதவுகிறது. அதே நேரத்தில், தாய்மொழியை நாம் மறக்கக்கூடாது. தாய்மொழி நம் அடையாளம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. ஆகவே, ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதுடன் தாய்மொழியையும் மதித்து பேண வேண்டும்.
முடிவாகச் சொல்வதானால், இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலம் மிகவும் தேவையான மொழியாகும். ஆனால் தாய்மொழியுடன் சேர்த்து கற்றால் தான் முழுமையான முன்னேற்றம் பெற முடியும்.கற்றது கைமண்ணளவு. என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். கற்கும் வரை மலைப்பு கற்றபின் இவ்வளவு தானா என பேசும் ஆற்றல் கிடைக்கும் மடை திறந்த வெள்ளம் போல. மொழிகள் பல கற்று திகழ முயற்சி மட்டுமே நமக்கு தேவையான ஆயுதம்.. முயற்சி செய்வோம்.. சிகரம் தொடுவோம்.
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)