"அடடா ஜல்லடை பொசுங்கிப் போச்சே.. அத்தே அத்தே".. முதல் சமையல் அனுபவம்!

Su.tha Arivalagan
Oct 07, 2026,05:14 PM IST

- கவிஞர் க.யாஸ்மின் சிராஜுதீன்


திருமணமாகி இரண்டே மாதமான புது மருமகள் ரோஜா, அவள் தான் உண்டு தன் படிப்பு உண்டு என இருந்தவள். யாரிடமும் அதிகம் பேச மாட்டாள், சொந்தங்களாக இருந்தாலும்  ஒரு புன்னகை மட்டுமே ...சிறிது கூச்ச சுபாவம்  உடையவள்.


அவள் சொந்த அத்தை மகனைதான்  திருமணம் செய்திருந்தாள்... அவர் அன்பாக பார்த்துக்கொண்டார்.. திருமணமாகி இரண்டு மாதங்கள் அவளுடைய அத்தை (மாமியார்) சமையல் செய்து அன்பாக பார்த்துக்கொண்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவளுடைய அத்தை இனி நீயே சமையல் செய் என்றார்.


இவளுக்கு தூக்கி வாரிப்போட்டது சமையலா..! என்று வேறுவழியில்லை சரி என்றால்.. அப்போது விறகு அடுப்புதான். அவள் அடுப்பு பற்ற வைக்க பட்டபாடு  இருக்கே அப்பப்பா... ஒருவழியாக  பற்ற வைத்தாச்சி. இப்போ காலை உணவு சரி உப்புமா செய்யலாம் என பார்த்தாள். ரவையை  வறுத்தாள், ரவையை ஜல்லடையில் போட்டாள். ஜலிக்க பார்த்தால் வானமே தெரியுது என்னடா இது நீல வண்ண நிலா தெரியுதே என அதிர்ச்சி அடைந்தாள்.




அடடே.. ! ஜல்லடையை  காணோமே, எங்கடா போச்சு.. சூட்ல பொசுங்கி போச்சு .. திக் திக் நொடிகள்  கையில கம்பி மட்டும்தான் இருக்கு..  அத்தை வந்து கேட்டா ... என்ன செய்வது.. விர்ர்ர்.. என எழுந்தாள் தோட்டத்துப் பக்கம் கம்பியை எடுத்து சென்றாள். முள் வேலியில்  வீசிவிட்டு  வந்து விட்டாள்.. ஒருவழியாக காலை உணவு முடிந்தது.


இப்போது மதியம் காய்கறி சாம்பார் செய்ய நினைத்தாள். பருப்பு வேக வைக்க பூண்டு வேணுமே. பூண்டு  பக்கெட்டுக்குள் வைத்த நியாபகம். இரண்டுகிலோ பூண்டு இரண்டு மாசமாச்சி.  மூடிய திறந்தா பாருங்க அதிர்ச்சி அடைந்தாள்...! எல்லாம் அழுகிப்போச்சி... என்ன செய்ய அத்தை வந்து பார்த்தா அவ்வளவுதான்... மீண்டும் ஓடினாள் தோட்டத்துப்பக்கம்... இதுவும் முள் வேலி பக்கம் போய் சேர்ந்தது.


பிரச்சனை முடிந்தது என பார்த்தா  பின்னாடியே இன்னொரு பிரச்சனை வருதுங்க... ஒருபாத்திரத்தில் நீர் ஊற்றி  காய்கறி நறுக்கிபோட்டாள். இடை இடையே அடுப்பு வேற மக்கர்பண்ணுது. ஊது குழலால ஊதுறா  கண்ணு வேற எரியுது. கண்ணீர்  வந்துட்டு இருக்கு. இது என்னடா எனக்கு வந்த சோதனை என நினைத்தாள்... பின்னர் மண்சட்டி அடுப்பில் வைத்தாள். எண்ணெய் ,கடுகு ,கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு தாளித்தாள். பிறகு காய்கறிகளை  அதனுடன் சேர்த்தாள். சட்டி ரொம்பிடுச்சி என்னடா இது என யோசிச்சா  தண்ணியோட சேர்த்து போட்டுட்டா.


இது என்ன கொடுமை... வேற லெவல் போங்க ..வேற  வழியில்ல  யார் முகத்துல முழிச்சேனு தெரியலயே இன்னிக்கு எதுவும் சரியா இல்ல ...என புலம்பிக்கொண்டே தாளித்ததை வேறு பாத்திரத்தில்  ஊற்றிவிட்டு  மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தாள்.. ஒருவழியாக சமையல் முடிந்தது.. மதியம்  கணவரும் வேலை முடித்து வந்துவிட்டார், அத்தையும் வந்து விட்டார்... சமையல் நடந்த கதை கடைசிவரை அவர்களுக்குத் தெரியாது ..


நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமும் போல நாட்கள் நகர குழந்தைகளும் வளர்ந்து விட்டார்கள் இன்று.. 

சமையலும் சற்று முன்னேறி உள்ளது. எவ்வளவு தெரியுமா  பிறருக்கு சமையல் குறிப்பு சொல்லும் அளவுக்கு...


ரோஜாவுக்கு தன்னம்பிக்கை அதிகம்..

முதல் சமையலை இன்றும் நினைப்பாள் சிரிப்பாள்...

அனுபவமே சிறந்த ஆசான் என்பதை உணர்ந்தவள் அல்லவா...


(இது நிழலல்ல  நிஜம்)


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)