உலகமே நீ தான்!
Jan 06, 2026,10:35 AM IST
- பா. பானுமதி
ஆழி பெருங்கடல் உன் அழகாக
ஊழி உலகம் உன் ஆபரணமாக
தாழி வெண்ணெய் உன் மேனியில் ஆட
வானகம் உன்னில் வளைந்து ஓட
கானகம் செழுமை உன் கன்னங்களில் கூட
பானகம் உன் இனிமையில் குழைந்தாட
ஆறுகள் உன் பின்னல் ஆக
தேருகள் உன்னுடன் நடை பயின்றாட
குயில்கள் உன்னை கூடிபாட
மயில்கள் நடனமாடி உன்னை தேடி
பூக்கள் சேர்ந்து மாலையாக கழுத்தில் விழ
நிலவு தோழமை கொள்ள நெருங்கி வர
கோயிலில் உன் குரல் ஒலிக்க
வாயிலில் கோலங்கள் உன் வருகைக்காக ஏங்க
சாலையில் உன் சலங்கை ஒலிக்க
காலையும் மாலையும் உன்னை கவி பாட
சோலையும் வேலையும் உன் நினைவுகள் கூட்ட
உலகமே நீ ஆனாய்!