எஸ்டிபிஐ, ஓவைசியை முற்றாக நிராகரித்த கர்நாடக முஸ்லீம்கள்..!

May 14, 2023,11:14 AM IST
பெங்களூரு: வாக்குகளைப் பிரிக்கும் கட்சியாக அறியப்படும் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தாஹதுல் முஸ்லிமீன் கட்சியையும், தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் அரசியல் பிரிவான எஸ்டிபிஐ கட்சியையும் கர்நாடக முஸ்லீம்கள் முழுமையாக நிராகரித்துள்ளனர்.

இதில் ஓவைசியின் கட்சி மறைமுகமாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், முஸ்லீம்களின் ஓட்டுக்களைப் பிரித்து பாஜகவுக்கு மறைமுகமாக உதவி செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தடை விதிக்கப்பட்ட பின்னர் எஸ்டிபிஐ சந்தித்த முதல் தேர்தல் கர்நாடக சட்டசபைத் தேர்தல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த இரு கட்சிகளையும் முஸ்லீம்கள் நிராகரித்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு முழுமையாக ஆதரவைக் கொடுத்ததால்தான் பாஜகவால் வெற்றி பெற முடியாமல் போய் விட்டதாக கூறப்படுகிறது.




எஸ்டிபிஐ கட்சி 16 தொகுதிகளில் போட்டியிட்டு அத்தனை தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. இந்தக் கட்சியின் நரசிம்மராஜா வேட்பாளர் அப்துல் மஜீத் மட்டுமே அதிக அளவிலான ஓட்டுக்களை வாங்கினார். அதாவது 41,037 வாக்குகளைப் பெற்று அந்தத் தொகுதியில் 3வது இடத்தைப் பெற்றார். இது பதிவான வாக்குகளில் 22.19 சதவீதமாகும். மற்ற வேட்பாளர்கள் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை.

ஓவைசியின் கட்சி 2 இடங்களில் போட்டியிட்டு இரண்டிலும் படு தோல்வியைத் தழுவியுள்ளது. ஹுப்பள்ளி தார்வாட் கிழக்கு தொகுதியில் இக்கட்சி சார்பில் துர்கப்பா காஷப்பா பிஜாவத் போட்டியிட்டு வெறும் 5640 வாக்குகளே பெற்றார். இது பதிவான வாக்குகளில் 3.8 சதவீதமாகும். அதேபோல பசவன பேகேவாடி தொகுதியில் போட்டியிட்ட அல்லாபக்ஷ் பீஜப்பூர் வெறும் 1475 வாக்குகளையே பெற்று டெபாசிட் இழந்தார். இந்த இரண்டு தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சியே வென்றது.

கர்நாடகத்தில் கிட்டத்தட்ட 13 சதவீத முஸ்லீம்கள் உள்ளனர் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது. கடந்த பாஜக ஆட்சியின்போது முஸ்லீம்கள் தொடர்பாக ஏராளமான பிரச்சினைகள் எழுந்தன. திப்பு சுல்தானை வைத்து பிரச்சினை எழுந்தது. ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. முஸ்லீம் வர்த்தகர்களுக்குப் பிரச்சினைகள் கொடுக்கப்பட்டன. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக எஸ்டிபிஐ மற்றும் ஓவைசி கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தன. 


இந்த இரு கட்சிகளும் முஸ்லீம்களின் வாக்குகள் முழுமையாக காங்கிரஸுக்கும், மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கும் போகாமல் தடுக்கும் என்ற நம்பிக்கையில் பாஜகவும் இருந்து வந்தது. காரணம், காங்கிரஸின் முக்கியமான வாக்கு வங்கிகளில் ஒன்று முஸ்லீம்கள். அதேபோல பழைய மைசூரு பிராந்தியத்தில்  மதச்சார்பற்ற ஜனதாதளத்தை முஸ்லீம்கள் தூக்கி விடுவார்கள். இந்த இரண்டையும் காலி செய்வதே பாஜகவின் உத்தியாக இருந்தது.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் முஸ்லீம்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் காங்கிரஸுக்கு வந்து விட்டது. கூடுதல் போனஸாக, மதச்சார்பற்ற ஜனதாதளத்தை முஸ்லீம்கள் இந்த முறை கைவிட்டுள்ளனர். அக்கட்சிக்குக் கிடைத்துள்ள சீட்டுகளையும் குறைந்து போன வாக்கு சதவீதத்தையும் பார்த்தாலே அது புரியும். ஆக மொத்தத்தில் கர்நாடக முஸ்லீம்கள் முழுமையாக காங்கிரஸ் பின்னால் அணிவகுத்து நின்றுள்ளனர். எஸ்டிபிஐ, ஓவைசி கட்சிகளை முழுமையாக நிராகரித்துள்ளனர்.

முஸ்லீம் வாக்குகள்  3 பங்காக பிரிந்திருந்தால் அதைப் பயன்படுத்தி நிச்சயம் பாஜக இன்னும் கூடுதல் தொகுதிகளைப் பெற்றிருக்கும், தொங்கு சட்டசபையும் அமைந்திருக்கும். அதை முஸ்லீம்கள் தடுத்து நிறுத்தி விட்டனர். இதனால் கர்நாடகத்தில் தனிப் பெரும்பான்மையுடன்,நிலையான ஆட்சி அமைய முஸ்லீம்கள் உதவியுள்ளனர். ஆனால் இந்த ஆட்சியை சிறப்பாக நடத்துவதும், அதைத் தக்க வைப்பதும், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவதும் காங்கிரஸின் கைகளில்தான் உள்ளது. அதில் அது தவறினால்.. நிச்சயம் மக்கள் உறுதியாக தண்டிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்