70 வயதிற்கு மேற்பட்ட நிர்வாகிகளுக்கு பதவி கிடையாது: திமுக தலைமை அதிரடி

Aug 22, 2026,01:32 PM IST
சென்னை : கட்சி நிர்வாகிகளின் அதிகபட்ச வயது வரம்பு 70 மட்டுமே என திமுக தலைமை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை அறிவாலயத்தில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களின் விபரம் :

1. திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்த்த முடிவு.
2. மாவட்ட செயலாளர்கள் - 70, பேரூர் செயலாளர் - 60, மாநகர, நகர, பேரூர் வட்ட செயலர் - 50, கிளைச் செயலர் - 45 என வயது நிர்ணயிக்கப்படுகிறது.
3. அதிகபட்சமாக ஒரு பதவியில் ஒருவர் 3 முறை மட்டுமே இருக்க முடியும்.





இந்த கூட்டத்தில் பேசிய தலைவர் மு.க.ஸ்டாலின், நாம் பார்க்காத வெற்றியும் இல்லை. நாம் பார்க்காத தோல்வியும் இல்லை. தேர்தலில் தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர நிரந்தரமாக இல்லை. நாம் தோல்வியடைய பல காரணங்கள் இருப்பினும் நிர்வாகிகளின் செயல்பாடுகளும் ஒன்று. அதையும் நாம் மறைக்கத் தேடையில்லை. நம் தவறுகளை முதலில் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.

ஊருக்கே வெளிச்சம் கொடுக்கும் விளக்குக்கு, தனக்கு கீழே இருக்கும் இருட்டு தெரியாது. அப்படித்தான் நம்மிடம் இருந்த தவறுகளை கண்டறியத் தவறிவிட்டோம். comeback கொடுப்பதில் நாம் specialist. சிறப்பாகக் கொடுப்போம் என தெரிவித்துள்ளார். ஸ்டாலினின் இந்த பேச்சு திமுக மாவட்ட செயலாளர்கள் மட்டுமின்றி கட்சி தொண்டர்களையும் உற்சாகமடைய செய்துள்ளது.

அதோடு திமுக செயல்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் படி 70 வயதிற்கு மேற்பட்ட நிர்வாகிகளுக்கு பதவி கிடையாது என சொல்லப்பட்டுள்ளது. திமுக.,வின் முக்கிய பொறுப்புக்களில் இருக்கும் துரைமுருகன், எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான், ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 13 நிர்வாகிகள் 70 வயதை கடந்தவர்கள். இதனால் இவர்கள் அனைவரின் கட்சி பதவிகளும் பறிக்கப்பட உள்ளதா அல்லது இவர்களுக்கு வேறு ஏதாவது பொறுப்புக்கள் கட்சியின் வழங்கப்பட உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.இது குறித்த அறிவிப்பு, விளக்கம் எதுவும் இதுவரை திமுக சார்பில் வெளியிடப்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்