- முனைவர் கோ.லதா
அலைகடல் போலே எழுந்திடு மனமே
ஆழத்தில் புதைந்த கடலலையைப் போலே
மண்ணில் மறைந்தும் மாண்புடன் வாழ்வாய்
மழையும் வெயிலும் மாறிடனும் தாங்கி
எளியவன் கையில் எள்ளளவு விதை
இன்னல் பட்டும் இனிதாய் முளைக்கும்
நிலத்தை நம்பி நேர்மையாய் வாழ்
நீரும் கிடைக்காது நின்றாலும் வளர்
கடலைச் செடியாய் காற்றில் ஆடினும்
கனியை மண்ணில் கருணையாய் ஈயும்
தனக்கென வாழாது தரணிக்கு தருவாய்
தளராத உள்ளம் தர்மத்தின் வடிவே

வறுமை வந்தாலும் வாடிட வேண்டாம்
விழுதாய் பரவி விளைச்சல் காண்பாய்
சிறிய வித்தென சிரித்திட வேண்டாம்
சீருடன் வாழ்ந்து சிகரம் தொடுவாய்
உழைப்பே உரமென உயர்ந்திட வேண்டும்
உடைந்து போகாது உறுதியாய் நில்லு
பசியைப் போக்கும் பருப்பென ஆவாய்
பஞ்சம் வந்தாலும் பாரைக் காப்பாய்
அலைகடல் எழுந்து அடங்கிடும் போலே
அழுதிடும் நாளும் அடங்கிப் போகும்
கடலைபோல் வாழ்ந்து கலங்கிட வேண்டாம்
கருத்துடன் எழுந்து காலத்தை வெல்வாய்
--
வாய்மை சொல் தவறிடேல்.
வாய்மை என்னும் விளக்கினை ஏற்றிடு நெஞ்சே
பொய்மை இருளை போக்கிடும் தூய்மையே பேசே
சொல்லின் சுமை தான் செயலின் வித்தென்று உணர்ந்து
நல்லதை நாடி நடந்திடு வாழ்வில்
வாய்மை சொல் தவறிடேல் வானோரும் மெச்சுவர்
தீமை வரினும் திண்மையாய் நில்லென்று செப்புவர்
ஒருசொல் கொண்டே உலகம் போற்றிடும் புகழே
பொருளும் புகழும் பொய்யினால் வாராது
கள்ளம் கபடம் கருதாது வாழ்வாய்
உள்ளம் தெளிந்து உரைத்திடும் வார்த்தை
அன்னை சொன்ன அறநெறி கேளாய்
முன்னோர் வழியில் முழுமையாய் நடப்பாய்
வாய்மையே வெல்லும் வையத்து நீதி
தாய்மையாய் தழைக்கும் தர்மத்தின் வேதி
நாவினில் நன்மை நாட்டிடு மகனே
பாவினை வெல்லும் பண்பினை ஏற்றே
--
மண்ணின் மைந்தன்
மண்ணில் பிறந்த மைந்தனே நீயே
விண்ணின் வரம்போல் விளைச்சல் தந்தாய்
உழுது விதைத்து உயிரைக் கொடுத்து
பழுதில்லா பயிரைப் பாதுகாத்தாய்
வியர்வை சிந்தி விளைவித்த நெல்லே
அவிர்வாய் வாழும் அகிலத்தின் நம்பிக்கை
வெயிலும் மழையும் வேதனை எனினும்
பயிரைப் போல பண்புடன் வாழ்வாய்
மண்ணின் மணத்தை மறவாத நெஞ்சே
உன்னதம் நாடி உழைத்திடு தினமே
தன்னலம் வென்று தர்மத்தில் நின்றால்
என்றும் நிலைக்கும் இவ்வுலகின் புகழே
--
விதை நிலம் காத்திடு.
விதையெடுத்து நிலமுழுதும் தூவிடுவோம் தோழா
வேரூன்றி வளர்ந்திடவே வான்மழை வேண்டும்
களைகட்டி கல்லெடுத்து மண்ணினைத் திருத்தி
காத்திடுவோம் உழைப்பினால் கருணையின் வித்தை
நீர்ப்பாய்ச்சி நிழல் தந்து நோயினை விரட்டி
நெஞ்சுரமாய் காவலிருப்போம் நாளும் நாளும்
புழு பூச்சி வராமல் புனிதமாய் காப்போம்
பொறுமையோடு காத்திருந்தால் பொன்னறுவை வரும்
விதைநிலம் தாய்மடிபோல் வாழ்வளிக்கும் செல்வம்
வீணாக்கி அழித்திடின் வீழ்ந்திடுமே ஊரும்
மண்ணின் மடி காத்திடில் மழைபோல் செழிக்கும்
மானுடமும் வாழ்ந்திடுமே மகிழ்ச்சியின் நாட்டில்
உழுதவன் வியர்வையிது உண்மையின் சாட்சி
உணவளிக்கும் கரமிதுவே உயர்ந்திடும் பேறு
விதைத்தவன் தூங்கிடும் விளைச்சல் கருதிடுவோம்
விழித்திருந்து காத்திடுவோம் விதியினை மாற்ற
செழிப்பெனும் பயிர்வளர சேர்த்திடுவோம் நேசம்
சிறுபிள்ளை போலவே சீராட்டி வளர்ப்போம்
நிலமெனும் நம்பிக்கை நெஞ்சினில் வைத்து
நாளைக்கு நல்லறுவை நாட்டிடுவோம் நாமே
விதைநிலம் காத்திடில் வாழ்வெலாம் வாழும்
வறுமையின் நிழல்கூட வாசலில் தங்காது
கரம்கோர்த்து உழைத்திடுவோம் காலத்தின் காவல்
காத்திடுவோம் விதை நிலத்தை கண்ணின் மணிபோல்
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)
RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா
RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது
இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!
இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!
பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு
சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?
பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்
Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!
{{comments.comment}}