வாடகை வீடு.. 4 செட் கதர் வேட்டி சட்டை.. வங்கி இருப்பு ரூ. 110.. இவர் போல் தலைவர் இனி உண்டா?

Oct 02, 2026,06:34 PM IST

- ஈரோடு மாலதி


கர்மவீரர், கல்வித்தந்தை, எளிமையின் சிகரம்! தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும் அணைக்கட்டுகள் பல உருவானதற்கும் வித்திட்டவர் பெருந்தலைவர் காமராசர்.


முன்னாள் முதலமைச்சரான இவர், நேர்மையான நிர்வாகி; துணிச்சலான, திடீர் திருப்பங்களை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவர். யாருக்கும் அஞ்சாத நெஞ்சம் கொண்டவர்; உண்மைக்கும் பண்பிற்கும் இலக்கணம். மனிதநேயம் மிக்கவர், மக்கள் மனதில் என்றும் நிறைந்திருப்பவர். தன் தாயையும் மிக எளிமையாக வாழ வைத்தவர்.


பள்ளிச் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்து ஏழை எளிய மாணவர்களின் படிப்பிற்கு வழிகோலியவர். BHEL (பெல் - திருச்சி), நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மணலி சுத்திகரிப்பு ஆலை, ஐ.ஐ.டி (IIT Madras) போன்ற பல கல்வி நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் தமிழகத்திற்குக் கொண்டுவந்தவர்.


விவசாய வளர்ச்சித் திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அணைக்கட்டுகளைக் கட்டினார்.




கீழ்பவானி அணை (1957)

அமராவதி அணை

மணிமுத்தாறு அணை

ஆரணி அணை (1958)

வைகை அணை (1959)

சாத்தனூர் அணை, குந்தா திட்டம், வீடூர் அணை, பரம்பிகுளம் ஆழியாறு திட்டம், சோலையாறு அணை போன்றவை இவரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை அல்லது மேம்படுத்தப்பட்டவை.


கறுப்பு காந்தி, பெருந்தலைவர் என்று அழைக்கப்படும் காமராசர், வெறும் தொடக்கக் கல்வி மட்டுமே கற்றவர். 1976ம் ஆண்டு மறைவுக்குப் பின்னர் அவருக்குப் பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டது. கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் பொது வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்தவர் காமராஜர். 1954 முதல் 1963 வரை சுமார் 9 ஆண்டுகள் பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் இவர் நடத்தினார்.


காமராஜர் அவர்கள் மறைந்த பிறகு, அதிகாரிகள் அவர் வீட்டிற்குச் சென்று ஆய்வு செய்தபோது கண்ட காட்சி உலகையே வியப்பில் ஆழ்த்தியது.


அவர் வாழ்ந்தது ஒரு வாடகை வீடு. அவரிடம் இருந்தது 4 அல்லது 5 செட் கதர் வேட்டி சட்டை மட்டுமே (கைக்கடிகாரம் கூட இல்லை. அவருடைய வங்கி கணக்கில் இருந்தது வெறும் ரூ 110 மட்டுமே.


இதைக் கண்டு அதிகாரிகள் அனைவரும் கண்ணீர் சிந்தினர். ஒரு தலைவனின் சரித்திரச் சகாப்தம் அத்துடன் நிறைவுற்றது.


இன்றும் அனைவரின் மனதிலும், வீடுகளிலும், அரசு அலுவலகங்களிலும் அவரது புகைப்படங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மனிதப் பிறவிகளில் மாணிக்கம் போன்றவர்; எளிமையான, கம்பீரமான, மகத்துவமிக்க தலைவர்! "இவரைப் போல் ஒரு மனிதர் இனி இந்த உலகத்தில் உண்டோ?" என்று ஆச்சரியப்படும் அளவிற்கு வாழ்ந்து மறைந்தவர் பெருந்தலைவர் காமராஜர்!


(கட்டுரையாளர் மாலதி, நசியனூர், நெசவாளர் காலனி, சிந்தன்கோட்டை, எம்ஜிஆர் ரோடு, ஈரோடு)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்