வானில் பறக்கும் அறிவியல்

Apr 04, 2026,03:50 PM IST

- ஜோபிரபா, திருவாரூர்


வெகு நாட்களாக தினமும் என் வீட்டு மொட்டை மாடியில் இருந்து வானத்தை பார்ப்பது எனக்கு ஒரு  பழக்கமாகிவிட்டது. அந்த அமைதியான இரவுகளில், நட்சத்திரங்களுக்கிடையில் ஒரு விமானம் மெதுவாக நகர்ந்து செல்லும் காட்சி,சிறு குழந்தைப் போல எப்போதும் என் கவனத்தை கவரும். குறிப்பாக இரவு 9:30 மணியளவில் அந்த விமானம் தவறாமல் தோன்றும்.


ஒரு நாள் ஆர்வம் அதிகமாக, Flightradar24 என்ற செயலியை திறந்து பார்த்தேன். அப்போது தான் புரிந்தது—அது Kuala Lumpur நகரத்திலிருந்து புறப்பட்டு Tiruchirappalli International Airport நோக்கி வரும் ஒரு விமானம் என்று.

அதன் பிறகு, அந்த விமானத்தை வெறும் பார்வையால் ரசிப்பதற்குப் பதிலாக, அதன் பின்னால் இருக்கும் அறிவியல் உலகை ஆராய ஆரம்பித்தேன்.


மனிதன் வானில் பறக்க வேண்டும் என்ற கனவு புதியதல்ல. 1903-ல் Orville Wright மற்றும் Wilbur Wright ஆகியோரின் முதல் இயந்திர விமானப் பறப்பு, உலகத்தை மாற்றிய ஒரு தொடக்கமாக இருந்தது. அந்த ஒரு சிறிய முயற்சி, இன்று ஆயிரக்கணக்கான விமானங்கள் வானில் ஒரே நேரத்தில் பறக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது.


இப்போது நான் தினமும் பார்க்கும் அந்த விமானம், வெறும் ஒரு போக்குவரத்து சாதனம் மட்டும் இல்லை. அது இயற்பியலின் பல அடிப்படை விதிகளை தன்னுள் கொண்டு பறக்கிறது. விமானம் வானில் நிலைத்திருப்பதற்கு முக்கிய காரணம் “லிப்ட்” (Lift) எனப்படும் உயர்த்தும் விசை. இறக்கைகளின் வடிவமைப்பு காரணமாக, மேல்புற காற்றின் வேகம் அதிகமாகி, கீழ்புறத்தில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் விளைவாக விமானம் மேலே தூக்கப்படுகிறது.




அதோடு, முன்னே செல்ல “த்ரஸ்ட்” (Thrust), அதை எதிர்க்கும் “டிராக்” (Drag), கீழே இழுக்கும் “கிராவிட்டி” (Gravity)—இந்த நான்கு விசைகளின் சமநிலையில்தான் ஒரு விமானம் பறக்கிறது. வானின் நடுப்பகுதியில் இருக்கும்போது, அந்த விமானம் சுமார் 30,000 முதல் 40,000 அடி உயரத்தில் பறக்கிறது. அந்த உயரத்தில் காற்று மெல்லியதாக இருப்பதால் எதிர்ப்பு குறையும்; அதனால் வேகம் அதிகரித்து எரிபொருள் சிக்கனமாக பயன்படும்.


ஆனால், திருச்சியை நெருங்க நெருங்க, அதன் பயணம் ஒரு புதிய கட்டத்திற்குள் செல்கிறது. மெதுவாக அதன் உயரமும் வேகமும் குறைகிறது. இது சாதாரணமாக நடப்பது அல்ல—மிகத் துல்லியமாக கணக்கிடப்பட்ட இறக்குமுறை. தரைத்தள கட்டுப்பாட்டு மையமும் (Air Traffic Control), விமானியும் இணைந்து, எந்த கோணத்தில் இறங்க வேண்டும், எப்போது வேகம் குறைக்க வேண்டும் என்பதனை கணக்கிட்டு வழிநடத்துகின்றனர்.


இப்போது தினமும் அந்த விமானத்தை பார்க்கும் போது, அது ஒரு சாதாரண காட்சி மாதிரி தெரியவே தெரியவில்லை. மனித வரலாறும் அறிவியலும் சேர்ந்து வானில் ஓடும் ஒரு கதை போல தான் தோன்றுகிறது. மொட்டை மாடியில் நின்று மேலே பார்க்கும் அந்த சில நிமிடங்கள்—என்னுள் சின்ன சின்ன கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கின்றன.


நாமெல்லாம் வானத்தை பார்க்கிறோம்… ஆனால் உண்மையில் அதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறோமா? அந்த ஒளி புள்ளி ஒரு விமானம் மட்டும் இல்ல. காற்றை வென்று மேலே தூக்கும் “லிப்ட்”, முன்னே தள்ளும் “த்ரஸ்ட்”, அதை தடுக்க முயலும் “டிராக்”, கீழே இழுக்கும் “கிராவிட்டி”—இந்த எல்லா விசைகளும் சமநிலையில்தான் அது அமைதியாக பறக்கிறது.




அடுத்த முறை நீங்கள் வானத்தை பார்த்தால், “ஒரு விமானம் போகுது”ன்னு மட்டும் நினைக்காதீங்க… “இதுக்கு பின்னாடி என்ன எல்லாம் நடக்குது?”ன்னு ஒருமுறை யோசிச்சுப் பாருங்க. அப்போ தான் அந்த ஒரு ஒளி புள்ளி கூட, ஒரு பெரிய அறிவியல் அதிசயமா தோன்றும்.


(திருவாரூர் அரசுப் பள்ளி ஆசிரியர் ஜோபிரபா என்கிற ச.பிரபாகரன், திருவாரூர் புத்தகத் திருவிழா இலச்சினையை வடிவமைத்தவர். தேனி புத்தகத் திருவிழா ஸ்லோகன் போட்டி மற்றும் 'விஞ்ஞான துளிர்' இதழின் கட்டுரையாளர். மேலும், தமிழ்நாடு அரசின் 'போதையில்லா தமிழ்நாடு', 'சமத்துவம் காண்போம்', 'என் பள்ளி என் பெருமை' போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தேர்தலில் போட்டியிடாதது ஏன்?.. இதுதாங்கண்ணா காரணம்.. வேற ஒன்னும் இல்லை.. அண்ணாமலை விளக்கம்

news

புதுச்சேரியில் ரோடுஷோ...ரசிகர்களின் அல்ட்ராசிட்டியால் பதறி போன விஜய்

news

தமிழகத்தில் ஏப்ரல் 7 வரை மழைக்கு வாய்ப்பு...சென்னைக்கு மட்டும் கிடையாதாம்

news

தமிழக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்கள்...தேர்தலுக்கு 18 நாட்கள்

news

மதுரை Rapido ஆட்டோ சேவையில் கட்டண குழப்பம்.. ஆப் காட்டிய கட்டணம் ஒன்று.. டிரைவர் கேட்பது வேறு!

news

ஏப்ரல் 6 ல்.. புதுச்சேரியில்.. காங். தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

news

ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்

news

குலாப் ஜாமுன்.. கேட்டதுமே எச்சில் ஊறும்.. இது ராஸ் அல் கைமா ஸ்டைல்!

news

விதையில்லாமல் விளையும் பொருள் தெரியுமா?.. அட.. இது இல்லாம சாப்பிடவே முடியாதே!

அதிகம் பார்க்கும் செய்திகள்