Short Story: நுணுக்கம்!

Oct 16, 2026,04:40 PM IST

- கவிஞர் க. யாஸ்மின் சிராஜுதீன்


அனைவருக்கும் பிடித்த பருவம் பள்ளிப்பருவம். மாணவப்பருவம் மகிழ்வானது..  என்றும் அழியாமல் பசுமையாய் பசுமரத்தாணிபோல் மனதில் ஊஞ்சலாடுவது. அதைப்போன்ற ஒரு பசுமைமாறாத நிகழ்வுதான் மீனு வாழ்விலும் நடந்தது. 


மீனுவுக்கு தன்னம்பிக்கையும் ,தனித்துவமும் கொள்ளச் செய்தது அந்நிகழ்வு. மீனு பத்தாம் வகுப்பு படிக்கும் போது நிகழ்ந்தது அந்த நிகழ்வு. மீனு அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவி .. சரி வாங்க என்ன நடந்தது என பார்ப்போம் .. மீனு பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். அப்போது, பள்ளியில் பலவகையான போட்டிகள் (கலைநிகழ்ச்சிகள்) நடைபெற்றது.


அதில் மீனு பாட்டு பாடுதல்  (கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா) , தனிநடிப்பு (கண்ணகி -பாண்டியன் நெடுஞ்செழியன்) என இரண்டு போட்டிகளில் கலந்து கொண்டாள். ஆனால் அவள் இதுவரை எந்தவிதமான போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். ஆனால் மீனு பயிற்சி அளிக்கும் இடத்திற்கு செல்வதற்கு முன்னரே தனி நடிப்புக்கான பயிற்சி அளித்து முடித்துவிட்டனர்.


மீனுவுக்கு ஒன்றுமே புரியவில்லை ..சரி மற்ற மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என உன்னிப்பாக  கவனித்தாள்..   பின்னர் கண்ணகி தன் கணவன் கள்வன் அல்ல  என பாண்டிய மன்னனிடம் வாதிடும் காட்சியை, அதாவது  




"நீர்வார்கண்ணை எம்முன் வந்தோய்!

யாரையோ நீ? மடக்கொடியோய்!" என தொடங்கி

தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன்,

பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட

யானோ அரசன்? யானே கள்வன்!

மன்பதை காக்கும் தென்புலங் காவல்

என்முதற் பிழைத்தது; கெடுகஎன் ஆயுள்!"


வரை மனப்பாடம் செய்தாள் மீனு.. மீனுவுக்கு தமிழ்மீது ஆர்வம் அதிகம். தமிழை விரும்பி படிப்பாள். அவளே கட்டுரைகள் கூட எழுதும் திறனுடையவள். அவள் வீட்டில்  செய்யுளை சொல்லிக்கொண்டே கண்ணகியாகவும், மன்னனாகவும் தனி நடிப்பு  நடித்துப் பார்த்தாள் .. 


கலை நிகழ்ச்சி நடைபெறும் நாளும்  வந்தது  . கலைநிகழ்ச்சியும் ஆரம்பமானது. மீனு பாடலும் , தனிநடிப்பும் பயிற்சி செய்திருந்தாள். பள்ளி அளவில்  முதலிடம் பிடித்தாள். மீனுவால் நம்பவே முடியவில்லை. ஆனால் பாட்டுபாடும் போட்டியில் முதலிடம் பெறவில்லை . சரி..சரி...நமக்கு  பாட்டு வரவில்லை என சமாதானம் அடைந்தாள்.


போட்டிகள் அடுத்த கட்டத்திற்கு சென்றது வட்டார அளவிலும் வெற்றி பெற்று மாவட்ட அளவிற்கான போட்டிக்கு தேர்வானாள்.. மாவட்ட அளவிலும் வெற்றி பெற முயற்சி செய்தாள்.. மாவட்ட அளவில் நிறைய பள்ளிமாணவர்கள்  போட்டியிடுவார்களே என்ன செய்வது .சரி .. நம்மால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செய்வோம்... பார்ப்போம் என மனதிற்குள் நம்பிக்கை கொண்டாள். 


மாவட்ட அளவில் போட்டிகள் தொடங்கியது. ஓவ்வொருவராக, தனி நடிப்பு நடித்தனர்.. மீனாவும் தன் பெயர் அழைக்கும்வரை திக் ...திக்... நொடிகளுடன் காத்திருந்தாள்..  மீனுவின் பெயர் மைக்கில் ஒலித்தது. மீனுவும் சென்றாள். அனைவருக்கும்  வணக்கம் என ஆரம்பித்து இவ்விடம் பாண்டிய மன்னன், இவ்விடம் தன் கணவன் கள்வன் அல்ல என வாதிட வந்திருக்கும் கண்ணகி என தொடங்கி  செய்யுளை உரிய உச்சரிப்புடனும் அதற்கேற்ப நடிப்புடனும் நடித்தாள்  .. கடைசியில் தரையில் மன்னனைப்  போல தத்ரூபமாக மயங்கி விழுந்தாள் ...அதிகப்படியான கைதட்டல்களைப் பெற்றாள்  மீனு.


பங்கு கொண்ட அனைத்து பள்ளிகளும் நடித்தாயிற்று. மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தனர். மீனுவும் ,மீனுவின் ஆசிரியர்களும், சக மாணவர்களும் மதிய உணவு உண்டனர். அப்போது ஒலிபெருக்கியில் தனிநடிப்பு முதலிடம் மீனு என குரல் ஒலித்தது . மீனுவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அங்கு வந்திருந்த அனைத்து ஆசியர்களும் மீனுவை பாராட்டினர்.. சிலர் இவள் எப்படி வெற்றி பெற்றிருப்பாள் என பேசிக்கொண்டனர். 


மீனுவுக்கு கைகடிகாரம், திருக்குறள் புத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்... பள்ளி முதல்  மாவட்ட அளவு வரை  இத்தனை பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் எப்படி வென்றாள்  என்று நினைக்கிறீர்களா,,அது ஒன்றுமில்லைங்க,, ஒரு சின்ன நுணுக்கம்தாங்க. மீனு அதை சரியாக பயன்படுத்தினாள் வென்றாள். இதுதாங்க ஹைலைட்.


"பகர்தல் வேண்டி" என்பதற்கான action னும்  "மயங்கி விழுவதற்கான" action னும் மற்றும்  "உரிய வசன உச்சரிப்புடன்  கூடிய action னும் தாங்க .. இந்த தனிநடிப்பு பள்ளி அளவில் மட்டுமல்ல மீனு படித்த கல்லூரி கலைநிகழ்ச்சிகளிலும் வெற்றி பெற்றது.. முதல் பரிசு வென்றது.   காலங்கள் உருண்டோடின மீனு படித்து ஆசிரியர் ஆனார். இவரது வகுப்பறையிலும் கண்ணகி ,பாண்டிய மன்னன் பாடம் தனிநடிப்பு மூலம் நடித்து காட்டி கற்பிப்பார்..


கலைத்திருவிழாவில் மாணவர்கள் பங்கேற்க இந்நிகழ்வை கூறி ஊக்கமளிப்பார். மீனுவின் மாணவர்கள் மாவட்ட அளவுவரை பங்கேற்றும் உள்ளனர். மீனுவுக்கு தன் மாணவர்களை  மாநில  அளவில் பங்கு பெறச்செய்யவேண்டும் என்ற ஆர்வமும்  உள்ளது. அதற்கான பயிற்சியும் அளித்து வருகிறார்.


மீனு அடிக்கடி மாணவர்களிடம் சொல்வது, வெற்றிக்கும் தோல்விக்கு இடையே ஒரு சிறிய நூலிழை போன்ற "நுணுக்கம்"தான் உள்ளது இதுதான் வெற்றியை தீர்மானிக்கிறது.. அனைவரும் போட்டியிடலாம். ஆனால் சில நுணுக்கங்கள் அதாவது தனிச்சிறப்பான  சிந்தனையும் , சிறப்பான செயல்பாடும் , மற்றவர்களைப் பின்பற்றாமல் நமக்கான தனிச் சிறப்புடன் செயல்படுவது இவைதான் வெற்றியைத் தரும். 


இன்றளவும் மீனு இச் செய்யுளை மறக்கவே இல்லை. கடகடவென வாசிப்பார் .. விரும்பி படிப்பது  ஏற்றத்தை தரும். மாற்றி யோசிப்பது வெற்றியைத் தரும்... மீனு பிறரின் சாயலை விரும்பாத மாணவியாக வளர்ந்தாள். ஒரு ஆசிரியராகவும் தனிப்பட்ட தனக்கே உரிய பாதையில் பயணிக்கிறாள்.. இல்லை இல்லை இப்போது ஆசிரியர் ஆயிற்றே  பயணிக்கிறார்..!


மீனு தன் மாணவர்களிடம் அடிக்கடி   சொல்வார்  “Your uniqueness is your strength, and it can lead you to success. உங்களுடைய தனித்துவமே உங்களுடைய பலம்,அது உங்களை வெற்றிக்கு வழி நடத்தும் மற்றும் hard work never fails என்பார் ஆசிரியர் மீனு. 


மீனுவின் பயணம் தொடர்கிறது .


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்