இராஜராஜன் என்றால் சும்மாவா...!?

Oct 22, 2026,04:14 PM IST

- முனைவர் தி.தங்கலட்சுமி


வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த தமிழன், வரலாறாக வாழும் தமிழன், பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்து, பத்து நூற்றாண்டுகள் கடந்தும் வாழ்ந்து வரும் தமிழன்.


சரித்திர பிரசித்தி பெற்ற பெருவுடையார் கோவிலை ஸ்தாபித்த தமிழன்,  இனிவரும் நூற்றாண்டுகளிலும் நிலைத்த புகழுடன் வாழப்போகும் தமிழனாக, "தோன்றின் புகழொடு தோன்றுக" எனும் வள்ளுவப் பெருந்தகையின் வாக்கை மெய்ப்பிக்கும் ஆளுமை கொண்ட தமிழன். 


யார் அந்தத் தமிழன்?


"திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந்....... .... .... 

தேசுகொள் கோராச கேசரி வர்மரான 

உடையார் ஸ்ரீராசதேவர்க்குயாண்டு" 


என்னும் மெய்க்கீர்த்தி கொண்ட தமிழன். 




'சதய விழா நாயகன்' முதலாம் இராஜராஜ சோழன். இவனது கீர்த்திகள் செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் மட்டும் நின்று நிலைக்கவில்லை. நூற்றாண்டுகள் கடந்தும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களிலும் சைவத் திருமுறைகளின் வழி  சிவனடியார்களின் உள்ளங்களிலும் நிறைந்து நிற்கும் தமிழன். "திருமுறை கண்ட சோழன்" என்ற சிறப்புப் பெயர் கொண்ட சோழப் பெருவேந்தன். 


இராஜராஜன் என்றால் சும்மாவா...!? 


நம்பியாண்டார் நம்பி என்ற சிவநேசர், சிவபெருமான் மீது சமயக் குரவர்களும் மற்றைய சிவநேயச் செல்வர்களும் பாடியருளிய பக்திப் பனுவல்களைப் பாமாலைகளைத் தொகுக்கும் எண்ணம் கொண்டு தேடியலைந்தார். 


அப்பெருமகனாருக்குத் திருமுறைப் பனுவல்கள் இருக்கும் இடம் தெரியவந்தது. ஆனால், கைகளுக்குக் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது.  சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட நம் சதய நாயகனிடம் சென்று முறையிட்டு நின்றார் நம்பியாண்டார் நம்பி. 


தில்லை எனும் சிதம்பரம் கோவிலில் ஓர் அறையில் பக்திப் பனுவல்கள் அடங்கிய ஓலைச்சுவடிகள் கறையானுக்கு இரையாகிக் கொண்டு  கிடப்பதை அறிந்த நம்பியம்பெருமான், தன்னிடம் அவற்றைத் தர வேண்டுகிறார். ஆனால், தில்லைவாழ் அந்தணர்கள் தர மறுக்கின்றனர்.


"திருமுறைப் பதிகங்கள் எழுதியவர்கள் நேரில் வந்து கேட்டால், தருவோம். மூன்றாம் மனிதராகிய உம்மிடம் தரமாட்டோம்"  என்று விதண்டாவாதம் செய்கிறார்கள். 


மன்னவன் செவிகளுக்குச் செய்தி சென்றது. மதிநுட்பத்திலும் ராஜதத்திரத்திலும் அதிநுட்பனான இராஜராஜன் உடனடியாக ஓர் உபாயம் கண்டான். 


சமயக்குரவர் நால்வரின் திருவுருவத்தை செப்புத் திருமேனியாக வடித்தெடுக்கச் செய்து சப்பரமேற்றி, ஊர்வலமாய் தில்லைத் திருக்கோவிலை வந்தடையச் செய்து, தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரமவர்களின் வாயினையும் 

அடைத்துப் போகச் செய்தான். 


தன்னை நம்பி வந்த நம்பியாண்டார் நம்பியின் நம்பிக்கையைக் காப்பாற்றியதோடு திருமுறைகளையும் கறையானிடமிருந்து காப்பாற்றி, "திருமுறை கண்ட சோழன்" என்னும் சிறப்புப் பெயரையும் பெற்றுக் கொண்டான். 


இத்தகைய சிறப்பான ஆளுமை கொண்ட நாயகனின் சதய விழா, ஆண்டாண்டுகள் கடந்து சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதில் வியப்பொன்றும் இல்லையே! 


நாமும் அப்பெருவேந்தனான இராஜராஜனின் பல்வேறு பராக்கிரமங்களையும் விவேகமான சிந்தனைகளையும் எண்ணி மகிழ்ந்து போற்றிக் கொண்டாடுவோம்! 


(முனைவர் தி.தங்கலட்சுமி, எங்கும் நீக்கமற நிறை ஈசனின் திருவருளால் கல்விக்கண் தந்த பெருந்தலைவர் அவதரித்த விருதை மண்ணில் வசிக்கும் பாக்கியம் பெற்றவர். பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி!  அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் ஆனந்தப் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும்  தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்