நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?

Oct 15, 2026,01:00 PM IST

- ஜெயபாரதி மதிவாணன்


ஒரு கால் சிலம்பால் சரித்திரத்தையே. புரட்டிப் போட்ட கண்ணகி! தங்கம், வைரம், முத்து, மரகதம் என விதவிதமான அணிகலன்களை அணிந்து அழகு பார்த்த மாதவி! பழந்தமிழர்கள் பயன்படுத்திய நகைகளின் வகைகளையும், அவற்றின் நுணுக்கமான வேலைப்பாடுகளையும் அறிந்துகொள்ள வேண்டுமா? வாருங்கள், சிலப்பதிகாரத்திற்குள் ஒரு நகைப் பயணம் செல்வோம்!


இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் வாயிலாகப் பழங்காலத்தில் அணியப்பட்ட பல்வேறு வகையான நகைகளை நாம் அறிந்துகொள்ளலாம்.


கண்ணகியின் கால் சிலம்பை மையமாகக் கொண்டுதானே சிலப்பதிகாரத்தின் கதை அமைகிறது! எனவே, முதலில் கண்ணகியின் சிலம்பைப் பார்ப்போம்.


கண்ணகியின் கால் சிலம்பு சாதாரணமானதல்ல. அதன் உள்ளீட்டில் சிறந்த மாணிக்கப் பரல்கள் இடம்பெற்றிருந்தன. வைரங்கள் பதிக்கப்பட்ட கேவண வரிசையும், பசும்பொன்னால் புடைப்பாகச் செய்யப்பட்டு விளங்கிய உட்கருவும் கொண்ட அந்தச் சித்திரச் சிலம்பு, உயர்ந்த தொழில்நுட்பத்தையும் நுணுக்கமான கைவினைத் திறனையும் வெளிப்படுத்தியது.


அடுத்து, மாதவி அணிந்திருந்த நகைகளை இளங்கோவடிகள் அழகாக வரிசைப்படுத்துகிறார். அவற்றைப் படிக்கும்போதே அந்தக் காலத்து அணிகலன்களின் செழுமையை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.


மாதவி அணிந்திருந்த நகைகள்




விரல்களுக்கும் கால்களுக்கும்: கை விரல்களில் கணையாழி; கால்களில் பாதசரம், நூபுரம், பாடகம், சதங்கை, அரியகம் ஆகிய அணிகலன்கள்.


தொடைக்கும் இடுப்புக்கும்: தொடையில் குறங்குச் செறி; ஆடையின் மேல் மேகலையாக, பெரிய முத்துகளைக் கோவையாகக் கோத்து முப்பத்திரண்டு வரிசைகளால் அமைக்கப்பட்ட விரிசிகை என்னும் அணி.


தோள்களுக்கும் கைகளுக்கும்:

தோள்களுக்கு அழகான கண்டிகை; தூய மணிகள் செறிக்கப்பட்ட தோள்வளை; மாணிக்க மணிகளும் வைரங்களும் பதிக்கப்பட்ட சித்திர வேலைப்பாடுகள் கொண்ட சூடகம்; செம்பொன்னால் செய்யப்பட்ட கைவளை; நலமணி வளை; சங்கினால் செய்யப்பட்ட வளை; பலவகையான பவள வளைகள்.


விரல்களுக்கு அணியும் மோதிரங்கள்:

வாளை மீனின் திறந்த வாயைப் போன்று வளைந்த முடக்கு மோதிரம்; ஒளிமிக்க செந்நிற மாணிக்க மோதிரம்; பக்கங்களில் வளைந்து ஒளி வீசும் மரகதத் தாள் செறி என்னும் அணி.


கழுத்துக்கு அணியும் அணிகலன்கள்:

வீர சங்கிலி, நுண்ணிய சங்கிலி, பூணப்படும் சரம், நுட்பமான வேலைப்பாடுகளுடன் அமைந்த முத்து ஆரம்.


காதுகளுக்கும் தலைக்கும்:

காதின் உட்புறத்தில் இந்திர நீலக்கற்களும் இடையிடையே திரண்ட வைரங்களும் பதிக்கப்பட்ட அழகிய குதம்பை என்னும் அணி. தலைக்கு செழுநீர், வலம்புரி, தொய்யகம், புல்லகம் ஆகிய அணிகலன்கள்.


இதுமட்டுமல்லாமல், பவள வடமாகிய மேகலாபரணம், முத்தாரம், முத்துவடம், குண்டலம், மங்கல அணி, முத்தாலான பூண், பொன்னாலான அரிச்சிலம்பு, பவள மணிமாலை, வைர ஆரம், மாணிக்கப் பரல்கள் கொண்ட சிலம்பு, முத்துப் பரல்கள் கொண்ட சிலம்பு, மரகத மோதிரம் எனப் பலவகையான நகைகளும் குறிப்பிடப்படுகின்றன.


இப்போது சொல்லுங்கள்... நகைக் கடைக்குப் புறப்பட்டுவிட்டீர்களா?


எவ்வளவு அழகான நகைகள்! இவற்றையெல்லாம் படித்ததும், ஒரு பெரிய பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு நகைக் கடைக்குச் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறதா?


அப்படிப் புறப்படுவதாக இருந்தால், மறக்காமல் ஏ.கே. 47 துப்பாக்கி ஏந்திய நான்கு பாதுகாவலர்களையும் உடன் அழைத்துச் செல்லுங்கள்!


ஆனால் ஒரு சந்தேகம்!


இத்தனை கிலோ கணக்கிலான தங்கம், வைரம், முத்து போன்ற நகைகளை அணிந்துகொண்டு ஆடிய மாதவிக்குப் பாதுகாவலர்கள் இருந்தார்களா என்பது தெரியவில்லை!


நல்லவேளை, அப்போது மோடி பிரதமராக இல்லை!


அவர் அப்போது பிரதமராக இருந்திருந்தால், மாதவி அணிந்திருந்த இத்தனை நகைகளில் எத்தனை நகைகள் அரசாங்கத்தின் கணக்கில் சேர்ந்திருக்குமோ என்று நகைச்சுவையாக எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது!


பழந்தமிழர்களின் நகை நாகரிகத்தைப் படித்துப் பெருமைப்படுவதா, அல்லது மாதவியின் நகைச் செழிப்பைப் பார்த்து வியப்பதா?


நீங்களே சொல்லுங்கள்!


(நான் ஜெயபாரதி மதிவாணன் விருதுநகர்.  கர்மவீரர் காமராஜர் பிறந்த ஊரில் பிறந்து வாழ்வதில் பெருமையடைகிறேன். இல்லத்தரசி. 2000லிருந்து கொரானா வந்த 2019 வரை 10 நாட்களுக்கு ஒருமுறை நூலகத்திற்குச் சென்று சங்க இலக்கியங்களை எடுத்து வந்து ரசித்துப் படிப்பேன். 2016, 17, 18, ஆகிய மூன்று ஆண்டுகளில் இலக்கிய மன்றம் வீட்டிலேயே வைத்து நடத்தினேன். வருடத்திற்கு மூன்று முறை நடனம், நாடகம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தினேன். வீட்டில் இருமுறை மிகப் பழைய பொருட்களைக் காட்சிப்படுத்தி அருங்காட்சியகம் அமைத்தேன். 35 பேர் வந்து பார்த்து ரசித்தார்கள். தாங்களும் பழைய பொருட்களைப் பத்திரமாக வைக்கப் போவதாக உற்சாகமாகக் கூறினார்கள். புத்தகங்கள் படிப்பதுதான் என் பொழுதுபோக்கு. பழமை - புதுமை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!

news

இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு

news

“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!

news

நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?

news

இட்லிக்கடை.. ஒரு நிமிடக் கதை (36)

news

தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை இன்று சந்திக்கிறார் முதல்வர் விஜய்: காரணம் இது தானா?

news

ஞானத்தின் தெளிவு!

news

காலம் மறைத்தாலும் என்றும் நம் மனதில் இருந்து மறையாத கலாம்!

news

North East Monsoon: மக்களே குட் நியூஸ்.. தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை.. வானிலை மையம் அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்