புதிய கல்வியாண்டு.. அனைவரும் இணைந்து அறிவுச் சுடரை உயர்த்திப் பிடிப்போம்!

Jun 04, 2026,03:19 PM IST
- புரட்சிப் பாவை தே. ஜெனிட்டா ரீனா

புதிய கல்வி ஆண்டில் 2026- 27 காலடி எடுத்து வைக்கும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்!

கல்வி கரையில்; கற்பவர் நாள் சில — நாலடியார். கற்கை நன்றே; 
கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே — அதிவீரராம பாண்டியர். 

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். 
கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி — கொன்றை வேந்தன். 

இளமையில் கல் — ஆத்திச்சூடி. 

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு; 
மாடல்ல மற்றை யவை — திருக்குறள்.



கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்டு. கல்வி என்பது மதிப்பெண்களைப் பெறுவதற்காக மட்டும் அல்ல; மனிதனின் சிந்தனையையும், பண்பையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதற்காகும். புத்தகங்கள் அறிவை வழங்குகின்றன; அனுபவங்கள் அதற்கு ஆழத்தைச் சேர்க்கின்றன. கற்றல் என்பது பள்ளி, கல்லூரியோடு முடிவதல்ல; வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு பயணம்.

நீங்கள் எப்படி பயணம் செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. ஓட முடிந்தால் ஓடுங்கள்; ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள்; நடக்க முடியாவிட்டால் தவழ்ந்தாவது செல்லுங்கள். ஆனால், உங்கள் இலக்கை நோக்கிய பயணத்தை மட்டும் நிறுத்திவிடாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்பவர்களுக்கு தோல்வி என்பது முடிவல்ல; வெற்றிக்கான மற்றொரு படிக்கட்டு மட்டுமே.

நீ எதைத் தேடுகிறாயோ, அது உன்னையும் தேடிக் கொண்டிருக்கிறது — ரூமி.

அறிவை விட கற்பனைத் திறன் மேன்மையானது — ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி; மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு — திருக்குறள்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் — திருக்குறள்.



இன்றைய உலகில் செல்வம் குறையலாம், பதவி மாறலாம், புகழ் மறையலாம்; ஆனால் கற்ற கல்வியும் பெற்ற அறிவும் என்றும் நம்மோடு பயணிக்கும். எனவே தினமும் புதிதாக ஒன்றைக் கற்போம், அறிந்ததைப் பகிர்வோம், அறிவால் உயர்வோம். கல்வி என்பது வாழ்க்கையை மாற்றும் திறவுகோல் மட்டுமல்ல; மனிதனை மனிதனாக அடையாளம் காட்டும் ஒளிவிளக்கும் ஆகும்.

புதிய கல்வியாண்டு.. இன்னும் ஒரு புதிய வாய்ப்பு.. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும். கற்றல் சுகமானது என்றால் கற்பிப்பது அதை விட பொறுப்பானது. அனைவரும் இணைந்து அறிவுச் சுடரை உயர்த்திப் பிடிப்போம்.

(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்