தப்பாப் பேசலையே.. "அப்பன்" என்ற வார்த்தை கெட்ட வார்த்தையா.. உதயநிதி ஸ்டாலின் கேள்வி

Dec 23, 2023,05:45 PM IST

சென்னை: அப்பன் வீடு என்று சொல்வது என்ன கெட்ட வார்த்தையா.. ஒரு வார்த்தை கூட நான் மரியாதைக் குறைவாக யாரையும் பேசவில்லை. இப்போதும் கூட சொல்கிறேன்.. தமிழ்நாட்டின் உரிமையைத்தான் நாங்கள் கேட்கிறோம் என்று தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.


தென் தமிழ்நாட்டு வெள்ளம் தற்போது பரபரப்பான பேசு பொருளாகியுள்ளது. மத்திய அரசு வெள்ள நிவாரணப் பணிகளுக்கு கேட்ட நிதியை ஒதுக்கவில்லை என்று திமுக அரசும், அதன்  தலைவர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 900 கோடியை ஏற்கனவே ஒதுக்கி விட்டோம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


இது பேரிடர் ஏற்படுவதற்கு முன்பு, மத்திய அரசு வழக்கமாக ஒதுக்கும் நிதி. ஆனால் நாங்கள்  கேட்பது இப்போது ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கான நிவாரணப் பணிகளுக்கான நிதி என்று திமுக அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சும் பேசு பொருளாகியுள்ளது.




ஆனால் தான் ஒரு வார்த்தை கூட தவறாகப் பேசவில்லை என்றும், யாருடைய அப்பா வீட்டுப் பணத்தையும் நாங்கள் கேட்கவில்லை, மக்களின் உரிமையைத்தான் கேட்கிறோம் என்றும் கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதுதொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதும் நான் களத்திற்குப் போய் விட்டேன். பிற அமைச்சர்களும் போய் விட்டார்கள். முதல்வரும்  களத்தில் இருந்தார்.


தென் மாவட்ட வெள்ளத்தின்போதும் கூட நானும் போயிருந்தேன். பிற அமைச்சர்களும் அங்கு முகாமிட்டிருந்தனர். முதல்வரும் கூட ஒரு நாள்தான் டெல்லியில் இருந்தார். இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்கப் போனவர், பிரதமரையும் பார்த்தார். அந்த இரண்டுமே முக்கியமானதுதான். பிறகு அவரும் நெல்லை தூத்துக்குடி சென்றார்.  இப்போது நான் மீண்டும் அங்கு போகவிருக்கிறேன். 


நான் யாரையும் மரியாதைக் குறைவாக பேசவில்லை. யாருடைய அப்பா வீட்டுப் பணத்தையும் நாங்கள் கேட்கவில்லை என்றுதான் மரியாதையாகத்தான் நான் கேட்டேன். அப்பா வீடு என்று சொல்வது கெட்ட வார்த்தையா என்று கேட்டார் உதயநிதி ஸ்டாலின்.


முன்னதாக உதயநிதி ஸ்டாலின் நேற்று விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:


யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். 


சிலரிடம் அண்ணாவைப் போல -  சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது.


வெள்ள பாதிப்புக்காக கழக அரசு நிவாரண நிதி கேட்டால்,  "நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ" என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்" என்று கூறினேன்.


என் பேச்சில் மரியாதை சவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். ஆனாலும், மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள்.


மீண்டும் சொல்கிறேன் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாரமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம்.


வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம். 


நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும்  ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் – தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்