- சுதா திருநாராயணன்
மஹாளய அமாவாசைக்குப் பிறகு நவராத்திரி கொண்டாட்டங்கள் ஆரம்பித்துள்ளன.
நவராத்திரி காலங்கள் வருடத்தில் நான்கு. நவராத்திரி பண்டிகை என்பது பெண்மணிகளுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பிரியமான பண்டிகை. மங்களகரமும் சுபமும் இணைந்த பண்டிகை. அனைத்து பெண்மணிகளுக்கும் மஞ்சள் குங்குமம் பழம் தேங்காய் வெற்றிலை தாம்பூலத்தில் வைத்துக் கொடுப்பது மிகவும் சுபமாக கருதப்படுகிறது.
ஜனவரி பிப்ரவரி குளிர்காலங்களில் கொண்டாடப்படுவது மாக குப்த நவராத்திரி. சுய கட்டுப்பாட்டிற்கும் ஆழமான தியானத்திற்கும் முக்கியத்துவம் தருவது இந்த நவராத்திரி. வசந்த பஞ்சமிக்கு முன்னோடியாக இந்த நவராத்திரி திகழ்கிறது.
வசந்த நவராத்திரி அல்லது சைத்ர நவராத்திரி எனப்படுவது மார்ச் ஏப்ரல் மாதங்களில் கொண்டாடப்படுகிறது.
ஜூன் ஜூலை மாதங்களில் கொண்டாடப்படுவது ஆஷாட குப்த நவராத்திரி. ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடுவதற்கும் கிராமப்புறங்களில் பயிர்கள் செழிப்பதற்கும் ஆஷாட குப்த நவராத்திரி கொண்டாட்டங்கள் வகை செய்கின்றன.
தமிழ் புரட்டாசி மாதம் ஆங்கில செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுவது தான் ஷரத் அல்லது சாரதா நவராத்திரி. ஷரத் காலம் என்றால் குளிர்காலம். குளிர்காலத்தின் தொடக்கத்தில் இந்த நவராத்திரி ஆரம்பிக்கிறது.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் குதூகலமாகவும் பாரம்பரிய முறைப்படியும் கொண்டாடப்படுவது தான் இந்த நவராத்திரி. தீய சக்திகள் அழியவும் நற்பண்புகள் பெருகவும் நவராத்திரி விழா கொண்டாடப் படுகிறது.
ஐந்து ஏழு ஒன்பது பதினொன்று என்று ஒற்றைப்படை எண்ணிக்கையில் கொலு வைப்பவர்கள் படி அமைப்பார்கள். முதல் படியில் கலசமும் மரப்பாச்சி பொம்மைகளும் இடம்பெறும்.
வருடா வருடம் ஒரு புதிய பொம்மை வாங்கி கொலுவில் வைக்க வேண்டும் என்றும் சிலர் சொல்வார்கள். 1960 - 70, 80களில் நவராத்திரி வைபவம் என்பது அக்கம் பக்கத்து மற்றும் அடுத்த தெரு மக்களுடன் சந்தித்து பழகவும் அனைவருக்கும் சுண்டல் இனிப்புகள் கொடுத்து மகிழும் சிறந்த பண்டிகை. அந்நாட்களில் போன் டிவி ஹோட்டலுக்கு செல்வது போன்றவை இல்லாததால் நவராத்திரி கொலு மக்களை இணைக்கும் ஓர் அற்புத பாலமாக விளங்கியது.
மிக்ஸி கிரைண்டர் போன்றவை இல்லாத அந்த காலங்களில் அம்மி ஆட்டுக்கல்லில் அரைத்து பலகாரங்கள் செய்ய பெண்மணிகள் தயங்கவில்லை.
நாங்கள் வசித்த நாக்பூரில் மராட்டிய பெண்மணிகள் இந்தி பெண்மணிகள் அனைவருமே மஞ்சள் குங்குமம் வாங்கிக் கொள்ள வீட்டிற்கு வருவார்கள். தற்காலத்தில் நிறைய பொம்மைகள் வைத்து பார்க் முதலியவை கட்டி நவராத்திரியை மிகவும் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.
(
சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில் பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)
{{comments.comment}}