காலம் நேரம் பாராமல் உழைப்பவர்கள் இவர்கள்!

Oct 21, 2026,02:29 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


காலம் நேரம் பாராமல் 

உழைப்பவர்கள் இவர்கள்.

பொதுமக்கள் நலம் வேண்டி 

காவல் தெய்வம் அய்யனாராய்

வலம் வருபவர்கள் இவர்கள்.


இந்தக் கால பைரவர் மட்டும்

இங்கு  பிறந்து இருக்காவிட்டால்

மக்கள் மனங்களில்

அச்சமே அனுதினமும்

குடி கொண்டு இருந்திருக்கும்.


காக்கிச் சட்டைக்குச்

சொந்தக்காரராக

இருந்தாலும்

ஆழ்மனதில் இவர்கள் ஒரு

ஆணாகப் பிறந்து விட்ட

அன்னை தெரசா.




இந்த நல்ல வீரர்கள்

களம் புகுந்த

காரணத்தால்

மக்கள் மனங்களில்

மகிழ்ச்சி வெள்ளம்

நிலைபெற்று நிற்கிறது.


இவர்கள் மட்டும்

காவல் தேர் ஓட்டி இராவிட்டால்

இங்குள்ள ஏழை அர்ஜுனர்கள்

நிம்மதி  காண்டீபம் ஏந்தி

இருக்க முடியாது.


காலை வேளையில்

நமது தேசத்தின் வீதிகளில்

இவர்கள் மட்டும் 

பூபாளமாய் 

வலம் வந்திருக்காவிட்டால்

நாம் அத்தனை பேருமே

முழுநேரமும் முஹாரி மட்டுமே

வாசிக்க நேர்ந்திருக்கும்.


இவர்கள் கடமையாற்றுவது

நாட்டுக்குப் பெருமை.

இவர்களை வாழ்த்துவது

நமக்கு பெருமை.


இமயமலை உள்ளவரை

இந்து மகா சமுத்திரம் துள்ளும் வரை

சந்திரன் பூமி இருக்கும் வரை

இவர்கள் பெருமை நிலைத்திருக்கட்டும்!


எமைக் காக்கும் காவல் தெய்வங்களே!

வாழ்த்துகிறோம் உங்களை!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்