வைத்தியம் - ஒரு நிமிடக் கதை (39)

Oct 18, 2026,12:21 PM IST

- பூரணவள்ளி சேகர்


நகரி என்னும் சிற்றூரில் இருந்த ஒரு ஆங்கில வழிப் பள்ளிக்கு தலைமை விருந்தினராக அழைப்பின் பேரில் வந்திருந்தார் அனுஷா.


காரிலிருந்து அனுஷா இறங்கும் போதே அந்த கிராம மக்கள் புடை சூழ்ந்து அன்பாக வரவேற்றனர். விழா மேடை நன்கு அலங்கரிக்கப் பட்டிருந்தது. விழா மேடையில் பள்ளி தாளாளர் ஊர்த் தலைவர் முக்கியப் பிரமுகர்கள் உடன் அனுஷா அமர்ந்திருந்தார்.


விருந்தினர் அனைவரும் பள்ளி தாளாளர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை நன்கு பாராட்டிப் பேசினார்கள். அனுஷாவும் மாணவர்களின் திறமையை மெச்சிப் பேசினார். தலைவர் மற்றும் அனுஷா இருவரும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.


நிகழ்ச்சி முடிந்து மேடையை விட்டுக் கீழே இறங்கும் போது அனுஷா கொஞ்சம் தடுமாறி விழப்போனார். காலில் லேசாக வலி இருப்பதாக உணர்ந்தார். பெற்றோர் பலர் அனுஷாவுக்கு மருந்து தடவும் படியும் வெந்நீர் ஊற்றும்படியும் ஒத்தடம் கொடுக்கும்  படியும் பல மருத்துவ குறிப்புகள் கொடுத்தனர்.




அனுஷா அவற்றை சிரித்த முகத்துடன் கேட்டுக் கொண்டார். அதில் அவர்களின் உள்ளார்ந்த அன்பு  அனுஷாவிற்குத் தெரிந்தது. விழா முடிந்து தன் இருப்பிடம் வந்த அனுஷா தன் மேசையில் இருந்த ஒரு களிம்பை எடுத்துத் தடவினார்.


மருந்தைத்  தடவும் போது கிராமத்தினர் கூறிய மருத்துவ குறிப்புகள் நினைவுக்கு வந்தன. சிரித்துக்கொண்டே  வெளியில் காத்திருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கினர் மிகவும் கைராசி மருத்துவர் என்று புகழ் பெற்ற நரம்பியல் நிபுணர் மருத்துவர் அனுஷா.


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்