கடலும் கரையும் - ஒரு காவியப் பிணைப்பு!

Jun 11, 2026,04:41 PM IST

- ஆனந்தி சத்தியராஜ்


சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தகிப்பு, நாள் முழுவதும் அனைவரையும் பாடாய்ப்படுத்தி எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. மாலையிலாவது சற்று இதமான காற்று வீசாதா என்று கடலோரத்திற்குச் சென்றபோதும், அங்கும் காற்று சூடாகவே வீசியது. விடுமுறையின் வெறுப்பை நீக்க, அலைகளின் ஓசையையாவது சிறிது நேரம் ரசிப்போம் என்று அமர்ந்திருந்தோம்.


ஆழமான பெருங்கடல் அமைதியாகக் கரையைச் சந்தித்துச் செல்வதைப் பார்த்து, எனக்குள் எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருந்தன. எங்கே தொடங்கி எங்கே முடிகிறது என் சிந்தனைகள் என்று எனக்கே தெரியவில்லை! ஆனாலும், அதைப் பதிவிட எண்ணினேன். 


விண்மீன்களின் துகள்களால் கோடிக்கணக்கான அண்டங்களை உள்ளடக்கிய இந்தப் பிரபஞ்சம், ஒரு பேரமைதியோடு இயங்கிக்கொண்டிருக்கிறது. அதன் ஒரு சிறு பகுதியான இந்தப் பூமியில், முக்கால் பங்கு நீரால் சூழப்பட்ட ஆழமான கடல், தனது முடிவற்ற மர்மங்களையும் பிரம்மாண்டத்தையும் சுமந்து நிற்கும் ஆணின் பலத்தையும், ஆளுமையையும் பிரதிபலிக்கிறது. அதேபோல், தன் உயிரினங்களைக் காக்கும் தனித்தன்மை கொண்ட கரை, அலைகளின் வரவிற்காகக் காத்திருந்தாலும் தன் எல்லையை மீறாமல், அழகும், பொறுமையும், உறுதியும் நிறைந்த பெண்ணின் இயல்பை வெளிப்படுத்துகிறது.




இயற்கையின் இந்தச் சீரான இயக்கம், சூரிய உதயத்திலும் மறைவிலும் மனிதர்கள் மட்டுமன்றி, எல்லா உயிரினங்களும் பார்த்து மகிழும் ஒரு கலைநயமிக்கக் காட்சியாகப் பரிணமிக்கிறது. கடலின் ஆழத்தில் நீந்தும் மீன்கள் முதல், கரையின் மென்மையான மணல் துகள்கள் வரை, அனைத்தும் ஒன்றையொன்று ஆக்கிரமிக்காமல் தத்தமது தனித்துவத்தைப் பாதுகாத்து, வாழ்வின் உண்மையான பாடத்தை நமக்கு உணர்த்துகின்றன.


கடலுக்குள் மீன்கள் சுதந்திரமாக நீந்தினாலும், அவை கடலின் ஆழத்தை மாற்ற முற்படுவதில்லை; கரையில் வசிக்கும் உயிரினங்களும் அலைகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைப்பதில்லை. சில நேரங்களில் நிகழும் அலைகளின் சிதறல்களோ அல்லது எதிர்பாராத மாற்றங்களோ, வெறும் புரிதல் எனும் கால மாற்றத்தின் குறைபாடே தவிர வேறில்லை. இத்தகைய கண்ணியமான, சுதந்திரமான இயற்கையின் அழகியல் பயணம் எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மனிதர்களும் அப்படித்தான் வாழ வேண்டும் என்று இயற்கையே கூறுவது போல் எனக்குத் தோன்றுகிறது.


இந்த அணுகுமுறைக்குச் சான்றாகப் புறநானூற்றின் வரிகள்:




"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே"


இதன் பொருள்: ஒருவருக்கொருவர் துணையாக இருந்து, வளர்ச்சியில் அக்கறை கொண்டு, ஒருவரை ஒருவர் மதிப்பதன் மேன்மையை இது எடுத்துரைக்கின்றது. கவிஞர் தாமரையின் நவீன கவிதை மொழியில், "பிறருடைய சுதந்திரத்தில் குறுக்கிடாமல், எல்லையிடும் அன்பில் மட்டுமே ஆழமுண்டு; மௌனங்கள் பேசும் மொழியில் தான் உயிரின் உன்னதமான உறவு துளிர்க்கிறது" என்ற வரிகள், இயற்கையின் இந்த மௌனப் பாடத்தை இன்னும் மெருகேற்றுகின்றன.


தந்தை - மகள், அண்ணன் - தங்கை, கணவன் - மனைவி, ஆண் - பெண் நண்பர்கள் என எந்தவொரு உறவாக இருந்தாலும் சரி, இயற்கை உணர்த்தும் வாழ்வின் பேருண்மை இதுதான்:




"தனித்துவமே மனித வாழ்க்கையின் அழகு; எல்லைகளே அதன் பாதுகாப்பு! அலைகளைத் தழுவிச் செல்லும் கரையின் அமைதியைப் போல, இருதிறமும் மதித்து, குறை காணாமல், இருப்பதை வைத்து கொண்டாடி வாழும் உறவின் மேன்மையே வாழ்வின் முழுமையான வரம்!"


கடலையும் கரையையும் ரசிக்க வந்தவள், அலைகளின் ஓட்டத்தோடு என் எண்ணங்களின் ஓட்டமும் அதிகரிப்பதை உணர்ந்து, சிந்தனைகளைக் கட்டுப்படுத்த முயன்றேன். இந்தச் சுட்டெரிக்கும் வெயில் மண்டையைப் பிளப்பதால்தான் என்னவோ, இப்படித் தத்துவப் பித்தாக யோசிக்கத் தோன்றுகிறது!


(கட்டுரையாளர் ஆனந்தி சத்தியராஜ், MBA, B.A., B.Ed. PG Montessori, இளம் மனங்களை நற்பண்பால் செதுக்குவதில் அர்ப்பணிப்புடன்..தன்னார்வ தமிழ் பணி ஆசான், தனியார் பள்ளி ஆங்கில ஆசிரியர்)


புகைப்படங்கள்: ராகவ் கிருஷ்டப்பராஜ் சத்தியராஜ்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ் பட்டிமன்ற உலகின் ஆளுமை சாலமன் பாப்பையா.. அரசு மரியாதையுடன் இன்று உடல் தகனம்

news

போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!

news

RIP Solomon Pappaiah: என்றும் நினைவோடு!

news

Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!

news

Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!

news

கொந்தளித்த திருமாவளவன்.. கோபம் திமுக மீதா.. முதல்வர் விஜய் மீதா?.. இது தான் காரணமா?

news

தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு: தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல்!

news

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்

news

"தலஜோ".. சாலமன் பாப்பையா ஐயாவின் மறக்க முடியாத வகுப்பறை நினைவுகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்