- ராஜஸ்ரீ
ஒரு முற்றும் துறந்த துறவி இருந்தார்.
ஒரு சிறிய வீட்டை மடமாக அமைத்துக் கொண்டு அதில் தான் மட்டும் இருந்து பூஜைகள் செய்து கொண்டு அமைதியாக வாழ்ந்து வந்தார்.
அவர் சீடர்கள் என யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் ஒருவன் தானாக சீடனாக வந்து சேர்ந்தான். அவர் வேண்டாம் என்றாலும் அவன் கேட்கவில்லை.
துறவியும் சரி, இருந்துவிட்டு போகட்டும் என விட்டு விட்டார்.
அவன் துறவியிடம் அவ்வப்பொழுது சில ஆன்மிக விஷயங்களைக் கேட்பான். பேச்சின் நடுவே அவருடைய பிறந்த தினத்தை கேட்டு அறிந்து கொண்டு அந்த நாளை விமரிசையாக கொண்டாட விரும்புவதாக தெரிவித்தான்.
துறவி மறுத்து விட்டார். இருந்தாலும் இவன் விடவில்லை.

அவரிடம் நீங்கள் எப்பேர்ப்பட்ட மகான். உங்கள் புகழ் திக்கெட்டும் பரவ வேண்டாமா? அதற்காகவே கொண்டாட வேண்டும் என்றான்.
துறவி அவன் போக்கில் விட்டுத்தான் பிடிக்க வேண்டும் என்று எண்ணி சரி, எதையாவது பண்ணு என்றார்.
துறவியின் பிறந்த நாள் விழாவிற்காக மக்களிடம் நிதி வசூல் செய்ய ஆரம்பித்தான். அவற்றை தன் அறையில் அமர்ந்து கொண்டு எண்ணினான். எண்ணும் பொழுது பாதி தொகையை தனது பைக்குள் வைத்துக் கொண்டு விட்டான்.
அப்பொழுது அங்கு வந்த துறவி அறைக்குள் எட்டிப் பார்த்து எண்ணிப்பார் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
உடனே இவன் ஐய்யய்யோ நாம் பாதி பணத்தை எடுத்துக் கொண்டதை பார்த்து விட்டார் போலிருக்கிறது என்று எண்ணி அதை அப்படியே வைத்து விட்டான்.
பிறகு வசூலான பணத்தில் துறவியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தருவதற்காக புடவை வேட்டிகளை வாங்கினான். அதிலும் பாதியை தனக்கென்று எடுத்து வைத்துக் கொண்டான்.
அந்த சமயம் அங்கு வந்த துறவி அறையில் எட்டிப் பார்த்து எண்ணிப்பார் என்று கூறிவிட்டு சென்று விட்டார். இவன் பயந்து போய் அவைகளை எடுத்துக் கொள்ளாமல் வைத்து விட்டான்.
பிறந்த நாள் விழா நெருங்கி விட்டது. துறவியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்க அரிசி, பருப்பு, காய்கறிகள் ஆகியவற்றை வாங்கினான். வழக்கம் போல் அதிலும் பாதியை எடுக்க துறவியும் அங்கு வந்து எண்ணிப்பார் என்று கூறிச் சென்று விட்டார்.
பார்த்தான் இவன். இதென்னடா வம்பா போயிற்று. துறவிக்கு நாம் பாதி எடுப்பது எப்படியோ தெரிந்து விட்டது போலிருக்கிறது. இனி அவரிடம் மன்னிப்பு கேட்டு விட வேண்டியதுதான் என்று அவர் அறைக்குச் சென்று அவர் காலில் விழுந்தான்.
துறவி எழுந்துகொள். ஏன் திடீரென என் காலில் விழுகிறாய்? என்று கேட்டார். அவன் ஐயா, என்னை மன்னித்து விடுங்கள். நான் அனைத்திலும் பாதி எடுத்துக் கொண்டது தவறுதான். என்றான்.
துறவி அமைதியாக இருந்தார். தொடர்ந்து அவன் நான் ஒவ்வொரு முறையும் எடுக்கும் பொழுது எப்படி சரியாக வந்து எண்ணிப்பார் என்றீர்கள்? என்று கேட்டான்
அதற்கு துறவி நீ எடுத்தது எதுவும் எனக்குத் தெரியாது. முற்றும் துறந்த எனக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் தேவையா? என்பதை எண்ணிப் பார் என்ற பொருளில் அவ்வாறு கூறினேன். இனி நீ இங்கு இருக்கக் கூடாது. உடனே இடத்தை காலி செய் என்று கட்டளையிட்டார்.
அதைக் கேட்ட அவன் துறவியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான். பிறகு மடத்திலிருந்து வெளியேறினான்.
(எழுத்தாளர் ராஜஸ்ரீ இயற்பெயர் வி.பி.ஸ்ரீநிவாசன். சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார். ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)
தென்தமிழ் தலையங்கம்: "ரெட், மஞ்சள், ஆரஞ்சு" - வானிலை அலர்ட்டுகளும், மக்களின் விழிப்புணர்வும்!
இன்று முதல் சென்னையில் மழை தீவிரமடையும் : தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
பணம் எனும் மாயவன்!
நகைப் பெட்டி!
கேஷாவின் சிறகடித்த தருணம்!
சதுர கிணறும் புளிய மரமும் பின்னே அமெரிக்கன் கல்லூரியும்!
எண்ணிப் பார்!
அன்பெனும் அம்பு
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
{{comments.comment}}