நம்ப குழந்தைதானே!

Oct 21, 2026,03:44 PM IST

- ராஜஸ்ரீ


இப்பதானே இட்லி சாப்பிட்டாய். அதுக்குள்ள என்ன பசி? சமையலறையிலிருந்து மாதவி அதட்டும்  குரல் கேட்டது.


கணவன் ரவி அங்கு சென்று மாதவியிடம் என்ன ஆச்சு? ஏன் இப்படி கத்தறே? என்று கேட்டான். அதற்கு மாதவி இங்க பாருங்க. இப்பதான் இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு போனான். அதுக்குள்ள பசிக்குது. ஏதாவது குடு என்கிறான்.


ரவி சிரித்தவாறு நம்ப குழந்தைதானே. கொடுத்தா என்னவாம் என்றான். மாதவி நீங்க இப்படி செல்லம் கொடுக்கறதாலதான் அவன் எப்ப பார்த்தாலும் ஏதாவது கேட்டுண்டிருக்கான் என்றாள்.


ரவி பாவம் பசிக்குது போலிருக்கு. இட்லி இன்னும்  இருக்கா? என்று கேட்டான். எங்க இருக்கும்? நான் பண்ணதே  எட்டு இட்லிதான். இவனுக்கு ஒரு இட்லி கொடுத்துட்டு மீதியை நாம சாப்பிட்டு விட்டோமே என்றாள் மாதவி.


ரவி பிஸ்கட் ஏதாவது இருக்கா? என்று கேட்டான்.


அந்த டப்பாவில் இருக்கு என்று ஒரு டப்பாவை காட்டினாள்.




ரவி அதிலிருந்துஒரு பிஸ்கட்டை எடுத்துத் தந்தான். ஆனால் வாங்கிக் கொள்ளவேயில்லை.


பார்த்தீங்களா,  பிடிவாதத்தை. இன்னும் வேற என்ன வேணுமாம்? என்றாள் மாதவி.


ரவி நேற்று முறுக்கு வாங்கினாயே. அதை தரலாமா?  என்று கேட்டான்.


தாங்க என்று ஒரு முறுக்கை எடுத்து தந்தாள். பிறகு அதை அப்படியே தராதீங்க. சின்ன சின்னதா உடைச்சு தாங்க என்றாள்.


அவ்வாறே ரவி தந்தான்.


நான்கு துண்டுகள் சாப்பிட்டதும் அவர்களை நன்றியுடன் பார்த்துவிட்டு கா கா என்று கத்திக் கொண்டு பறந்து சென்றது அவர்கள் வீட்டிற்கு தினமும் வரும் காகம்.


(வி.பி. ஸ்ரீநிவாசன் என்ற இயற் பெயர் கொண்ட ராஜஸ்ரீ, சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார். ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்