- சு.மலர்விழி
ஒரு பெரிய நகரத்தில் உள்ள பிரபலமான தனியார் நிறுவனத்தில் அபிஷேக் வேலை செய்து வந்தான். அவனுக்கு வேலைப்பளு அதிகம்; ஆனால் கிடைக்கும் சம்பளமோ குறைவு. எனினும், அவனது அன்பான மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் அவனது குடும்பம் அழகாக நகர்ந்துகொண்டிருந்தது.
அலுவலகக் கூட்டங்கள், தொலைபேசி அழைப்புகள், வேலைப் பொறுப்புகள் என அபிஷேக் எப்போதும் அவசரமாகவே இயங்கிக்கொண்டிருந்தான். மனைவி முக்கியமான விஷயம் என்று குடும்ப விஷயங்களை கூற வந்தால் கூட எனக்கு நேரமில்லை பிறகு பார்க்கலாம் என்று கூறி விடுவான். காலையில் மனைவி சமைத்துக் கொடுக்கும் உணவை எடுத்துக்கொண்டு அவசரமாக வேலைக்குச் செல்வான். இரவு வீடு திரும்பியதும் உணவருந்திவிட்டு அப்படியே உறங்கிவிடுவான். குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவதற்குக்கூட அவனுக்கு நேரமிருக்கவில்லை.
ஒரு நாள் மாலை, வழக்கம்போல் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது, வீட்டிற்கு அருகிலிருந்த பூங்காவில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம் என்று அபிஷேக் நினைத்தான். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது சிறிது தொலைவில் ஒரு முதியவர் தனியாக அமர்ந்திருப்பதை கண்டான். முந்தைய வாரமும் அவரை அதே இடத்தில் தனியாக அமர்ந்திருக்கக் கண்டது அவனுக்கு நினைவுக்கு வந்தது. எனவே, அவரிடம் சென்று நலt விசாரிப்பு செய்ய விரும்பினான்.
“ஐயா, நலமாக இருக்கிறீர்களா? உங்களைப் பலமுறை இங்கே தனியாகப் பார்த்திருக்கிறேன். ஏதாவது கவலையா?” என்று அன்புடன் கேட்டான்.

அந்த முதியவர் பெருமூச்சுவிட்டு, “தம்பி, என் மனைவி இறந்துவிட்டாள். அவள் என்னைவிட்டுப் பிரிந்த நாளிலிருந்து என் வாழ்க்கையே வெறுமையாகிவிட்டது” என்றார்.
அபிஷேக் வருத்தத்துடன், “ஐயா, உங்களுக்கு மகன்களோ அல்லது வேறு உறவினர்களோ இல்லையா?” என்று கேட்டான்.
“எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவரும் வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள். அவர்கள் வெளிநாடு சென்ற பிறகு நானும் என் மனைவியும் மட்டுமே வீட்டில் இருந்தோம். எங்கள் வீடு இந்தப் பூங்காவிற்கு அருகில்தான் இருக்கிறது. நாங்கள் அடிக்கடி இங்கு வந்து அமர்ந்து மனம் விட்டுப் பேசுவோம். இன்று அவள் இல்லாததால், இந்தப் பூங்காவே எனக்கு அவளது பிரிவையும் தனிமையையும் நினைவூட்டுகிறது” என்றார்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த முதியவர் மீண்டும் பேசத் தொடங்கினார்:
“நானும் உன்னைப் போலத்தான் முன்பு ‘வேலை, வேலை’ என்று ஓடிக்கொண்டிருந்தேன். காலையில் என் மனைவி சமைத்துக் கொடுக்கும் உணவை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்குச் செல்வேன். இரவு வீடு திரும்பியதும் சாப்பிட்டுவிட்டு உறங்கிவிடுவேன். அவள் என்னிடம் பேச விரும்பினாலும், ‘எனக்கு நிறைய வேலை இருக்கிறது, பிறகு பேசலாம்’ என்று கூறித் தட்டிக் கழித்துவிடுவேன். அவளுடைய உணர்வுகளையும், நாள் முழுவதும் அவள் அனுபவித்த சிரமங்களையும் புரிந்துகொள்ள நான் முயற்சியே செய்யவில்லை.
பணி ஓய்வு பெற்ற பிறகுதான் வீட்டில் பொழுதைக் கழிப்பது எவ்வளவு கடினம் என்பதையும், நாள் முழுவதும் வீட்டையும் குடும்பத்தையும் கவனித்துக்கொள்வதில் என் மனைவி எவ்வளவு சிரமப்பட்டிருப்பாள் என்பதையும் உணர்ந்தேன். அதன்பிறகுதான் அவளுடன் அதிக நேரம் செலவிடத் தொடங்கினேன். தினமும் அவளை இந்தப் பூங்காவிற்கு அழைத்து வந்து, அவளுடன் அமர்ந்து பேசிவிட்டுத்தான் வீட்டிற்குச் செல்வேன்.
ஆனால், இப்போது அவளுடன் பேசுவதற்கு நான் எவ்வளவு ஏங்குகிறேன் தெரியுமா, தம்பி? அவள் அருகில் இருந்தபோது அவளுடைய அருமையை முழுமையாக உணரவில்லை. இப்போது அவள் இல்லாதபோதுதான் அவளுடைய அன்பும் துணையும் எவ்வளவு பெரிய செல்வம் என்பதை உணர்கிறேன்” என்று கண்கலங்கினார்.

அந்த முதியவரின் வார்த்தைகள் அபிஷேக்கின் மனதை ஆழமாகத் தொட்டன. அவனுக்குத் தன் மனைவியின் நினைவு வந்தது. தன்னுடைய சிரமங்களை மட்டும் பெரிதாக நினைத்துக்கொண்டு, காலையில் சீக்கிரம் எழுந்து அனைவருக்கும் உணவு தயாரித்து, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி, கணவனுக்குத் தேவையானவற்றை எடுத்துவைத்து, நாள் முழுவதும் ஓய்வின்றி வீட்டு வேலைகளைச் செய்து முடிக்கும் தன் மனைவியின் முகம் அவன் கண்முன்னே தோன்றியது.
தான் அலுவலகத்தில் வேலை செய்வதைப் போலவே, தன் மனைவியும் வீட்டில் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் அப்போதுதான் முழுமையாக உணர்ந்தான். அவளுடைய உழைப்பையும் அன்பையும் இதுவரை போதுமான அளவு மதிக்காமல் இருந்துவிட்டோமே என்று மனம் வருந்தினான்.
“என் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக உழைக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு, அவர்களோடு வாழ்வதையே மறந்துவிட்டேனே!” என்று தனக்குள் உணர்ந்தான்.
உடனே அந்த முதியவருக்கு நன்றி கூறிவிட்டு, மனைவிக்குப் பிடித்தமான சிற்றுண்டிகளை வாங்கிக்கொண்டு வீட்டை நோக்கி மகிழ்ச்சியுடன் நடந்தான். வீட்டிற்குச் சென்றதும் மனைவியுடன் அமர்ந்து மனம் விட்டுப் பேசவும், அவளது அன்றாட அனுபவங்களைக் கேட்டறியவும், வீட்டு வேலைகளில் அவளுக்குத் துணையாக இருக்கவும் முடிவு செய்தான்.
அன்று முதல் அபிஷேக் தனது வேலையையும் குடும்பத்தையும் சமநிலைப்படுத்தக் கற்றுக்கொண்டான்.
மனைவியின் உழைப்பைப் பாராட்டினான்; குழந்தைகளுடன் விளையாடினான்; குடும்பத்தினருடன் தினமும் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட்டான்.
(சு.மலர்விழி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, தி.புதுப்பட்டி.திருமங்கலம் ஒன்றியம், மதுரை மாவட்டம்)
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Short Story: மனைவியின் அருமை
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
பனிக்குப் போர்வையாகவும்.. வெயிலுக்கு நிழலாகவும்!
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆயுதத்தை விட்டெறிந்து அன்பை காணிக்கையாக்குங்கள்
நானிருக்கிறேன் உனக்கு
தேர்வு.. ஒரு நிமிடக் கதை (35)
{{comments.comment}}