புன்னகைப் பூவே.. சிரிப்போம் .. மகிழ்ச்சியைக் கொண்டாடுவோம்!

Oct 02, 2026,12:28 PM IST

-தி. மீரா, ஈரோடு


உலக புன்னகை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. 


இது புன்னகையின் மூலம் மகிழ்ச்சியையும் நல்லெண்ணத்தையும் பரப்புவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு நாளாகும். 


1963-ல் அமெரிக்காவின் மசாசூசெட்ஸைச் சேர்ந்த வணிகக் கலைஞரும் ஓவியருமான ஹார்வே பால் (Harvey Ball) என்பவர் பிரபலமான "ஸ்மைலி முகம்" (Smiley Face) சின்னத்தை உருவாக்கினார்.


1999-ல் இருந்து உலகம் முழுவதும் உலக புன்னகை தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் உலக புன்னகை தின கொண்டாட்டம் வொர்செஸ்டர், மாசசூசெட்ஸில் நடத்தப்பட்டது.


"நல்ல உற்சாகம் மற்றும் நல்ல செயல்களுக்கு" இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாமும் சிரித்து, மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.


அனைத்து எல்லைகளையும் கடந்து, ஒரு உலகளாவிய மொழியாகப் புன்னகை கருதப்படுகிறது. ஸ்மைலி முகம் சின்னத்தின் உண்மையான அர்த்தத்தை மீண்டும் கொண்டு வர இந்த நாள் அறிவிக்கப்பட்டது.


இந்த ஆண்டு (2026), அக்டோபர் 2, வெள்ளிக்கிழமை உலக புன்னகை தினமாக வருகிறது. 2026-ல் அக்டோபர் 1 வியாழக்கிழமை என்பதால், முதல் வெள்ளிக்கிழமை அக்டோபர் 2 ஆகும். 


சரி புன்னகையால் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கின்றன தெரியுமா.. 


மன அழுத்தத்தைக் குறைக்கிறது. தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. மற்றவர்களுடன் நல்ல உறவை வளர்க்கிறது. 

மகிழ்ச்சியான சூழலை உருவாக்குகிறது


"தோல்வி நம்மை சுற்றி சுற்றி வந்தாலும், புன்னகையை என்னும் ஆயுதத்தை கைவசம் வைத்துக் கொண்டால் தன் நம்பிக்கை தானாய் வரும்."


இந்த உலக புன்னகை தினத்தில், நாமும் ஒரு புன்னகையுடன் தொடங்கி, மற்றவர்களின் முகத்திலும் புன்னகையை வரவழைப்போம்!  புன்னகை என்பது இலவசமான இயற்கையான மருந்தாகும். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பல அற்புதமான நன்மைகளை வழங்குகிறது.


1. மன அழுத்தத்தைக் குறைக்கிறது




புன்னகைக்கும்போது மூளையில் எண்டோர்பின், டோபமைன், செரோடோனின் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன. இது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவைக் குறைக்கிறது.

மன உளைச்சலில் இருந்து மீள உதவுகிறது.


2. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது


சிரிக்கும்போது இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதய துடிப்பை சீராக்கி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. புன்னகை இதயத்திற்கான ஒரு ஆரோக்கியமான உடற்பயிற்சியாக செயல்படுகிறது.


3.  இயற்கையான வலி நிவாரணி


சிரிப்பு சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. மனம்விட்டு சிரிக்கும்போது வலியைக் குறைக்கும். ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். உடலில் எண்டோர்பின்களை வெளியிடுவதால் வலியைக் குறைக்க உதவுகிறது.


4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது


சிரிப்பு உங்கள் உடலில் எண்டோர்பின்களை வெளியிடுவதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.

இது உங்களுக்கு நிதானமாகவும், கவலை குறைவாகவும் உணர உதவுகிறது.


5. மனநிலையை மேம்படுத்துகிறது


புன்னகை உங்களை மகிழ்ச்சியாக உணர உதவும். மனச்சோர்வு இருக்கும் போது புன்னகை புரிவது மனநிலையை சிறப்பாக மாற்ற உதவும். புன்னகை நேர்மறையாக இருக்க உதவுகிறது.


6. ஆக்கத்திறனை அதிகரிக்கிறது


புன்னகை ஆக்கத்திறனை அதிகரிக்கிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. புன்னகை மூளையை மாற்றியமைக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.


7. நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வு


புன்னகை என்பது இலவசமாக உங்கள் ஆரோக்கியம், மனநிலை ஆகியவற்றை மேம்படுத்தி, உங்களுக்கு நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வை அளிக்கும் ஒன்றாகும்.


சிரிக்கும்போது மூளையில் சிறிய அளவில் நியூரோபெப்டைடுகள் எனும் ரசாயனங்கள் வெளியாகும்.  இது நரம்பியல் மண்டலத்தில் டோபைமைன், எண்டோர்பின் மற்றும் செரோடோனின் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கிறது.


"வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்" - இது வெறும் பழமொழி மட்டுமல்ல, அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். தினசரி பயன்பாட்டுக்கு தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் சிரிக்கும்படி யாராவது சொன்னால் முட்டாள்தனமான யோசனை என்று சொல்லாதீர்கள். ஏனெனில் இது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.


"புன்னகை எனும் மருந்து" உங்கள் உடலையும் மனத்தையும் ஆரோக்கியமாக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்