தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??

Oct 16, 2026,10:09 AM IST

- சு.தா.அறிவழகன்


இயற்கை அன்னையின் கொடைகளில் மிக உன்னதமானது மழை. "நீரின்றி அமையாது உலகு" என்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். ஆனால், இன்றோ மழைக்காலம் வந்தாலே தமிழ்நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக சென்னையில், மகிழ்ச்சிக்கு பதிலாக ஒருவிதமான அச்ச உணர்வே மேலோங்குகிறது. வானத்தில் மேகம் கறுத்தால் மனிதர்களின் நெஞ்சம் பதறுகிறது; கனமழை பெய்தால் வெள்ளம் சூழும் என்ற பயம் தொற்றிக் கொள்கிறது.


அதிலும் வட கிழக்குப் பருவ மழை ஆரம்பித்து விட்டாலே போதும், பயந்து நடுங்கும் அளவுக்கு மக்களின் மனதை மாற்றி வைத்துள்ளார்கள். தினசரி செய்தி அப்டேட்டுகளைப் பார்த்தால் அதை விட பீதியாக இருக்கிறது. வச்சு செய்யப் போகும் வங்கக் கடல், வெளுத்து வாங்கப் போகும் புயல்.. என்றெல்லாம் கொத்துப் புரோட்டோ போட்டுக் கொண்டிருப்பார்கள் செய்தி சேனல்கள். சாதாரண கன மழை பெய்தாலே போதும் லைவ் மோடுக்கு டிவி சானல்கள் மாறி விடும்.. உலகப் பரபரப்புக்கு மாறிப் போய் விடுவார்கள் அனைவரும்.


ஆனால், மகிழ்ச்சியாக ரசிக்க வேண்டிய மழையை, பார்த்தாலே பயப்படும் நிலைக்கு மாற்றியது யார்? இயற்கையா.. நிச்சயம் அல்ல.. சாட்சாத் நாமதான் நமது பயத்திற்கும், அச்சத்திற்கும் முழுக் காரணம்.  மனிதன் செய்த தவறுகளே இந்த நிலைக்கெல்லாம் காரணம்.


ஒரு காலத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் ஏரிகள், குளங்கள், தாங்கல்கள் மற்றும் கால்வாய்கள் நிறைந்த செழிப்பான நீர்நிலைப் அமைப்பைக் கொண்டிருந்தன. மழைக்காலத்தில் உபரி நீர் ஓடிச்செல்ல இயற்கை உருவாக்கிய பாதைகள் அவை.




ஆனால், மக்கள் தொகை பெருக்கம் மற்றும் திட்டமிடப்படாத நகரமயமாக்கல் காரணமாக நீர் நிலைகளையும், அவற்றின் நீர் பிடிப்புப் பகுதிகளையும் ஆக்கிரமித்து குடியிருப்புப் பகுதிகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாற்றினோம்.


மழை நீர் கடலுக்குச் செல்ல வேண்டிய இயற்கை வடிகால்களையும், ஆறுகளையும் அடைத்து கட்டடங்களை எழுப்பினோம். "குடியிருக்க வீடு மட்டும் போதும், நீர் நிலைகள் தேவையில்லை" என்ற மனிதனின் சுயநல சிந்தனையே இன்றைக்குச் சிறு மழைக்கே ஊருக்குள் வெள்ளம் புகக் காரணமாகிவிட்டது.


நமக்குத் தாகம் தீர்க்கும் நீர்நிலைகளை நாம் பாதுகாத்தோமா என்றால் நிச்சயமாக இல்லை.


கூவம், அடையாறு, பாக்கிங்காம் கால்வாய் போன்ற முக்கியமான நீர்வழிப்பாதைகளில் தொழிற்சாலைக் கழிவுகளையும், வீட்டுக்கழிவு நீரையும்தான் கொட்டினோம். அடைத்துக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் மழைநீர் சீராக ஓட முடியாமல் வீதிகளிலேயே தேங்கி நிற்கிறது.


ஏரிகளையும் குளங்களையும் ஏனோதானோ என்று பராமரித்து, அவை தங்களின் நீரைச் சேமிக்கும் கொள்ளளவை இழக்கச் செய்தோம். இயற்கையின் சமநிலையைச் சிதைத்த மனிதனின் இந்த அலட்சியப் போக்கே, இன்றைக்கு மழையை ஒரு பெரும் அச்சுறுத்தலாக மாற்றியிருக்கிறது.


நீர்நிலை ஆக்கிரமிப்புகளை இரும்புக் கரம் கொண்டு தடுக்கும் Political will எந்த ஆட்சியாளர்களிடமும் இல்லாததால் சென்னை இன்னும் கூட ஆக்கிரமிப்புகளில்தான் மூழ்கிக் கிடக்கிறது என்பது துயரமான உண்மையாகும். 


மழை என்பது பயிர்களைச் செழிக்க வைக்கும் உழவனின் நண்பன்; தாகம் தீர்க்கும் உயிரமுதம்; குழந்தைகள் காகிதக் கப்பல் விட்டு விளையாடும் பேரானந்தம். ஆனால், மனிதன் செய்த தவறு என்ற சுயநலத்தால் மழையின் அழகையும், மண் வாசனையையும் ரசிக்க வேண்டிய மனிதன்,"வெள்ளம் வந்து விடுமோ, மின்சாரம் துண்டிக்கப்படுமோ, உடைமைகள் பாழாகுமோ" என்ற கவலையிலேயே நாட்களைக் கழிக்கும் நிலை உருவாகிவிட்டது.


தன்னை மனிதன் காயப்படுத்தியபோது மௌனமாக இருந்த இயற்கை, மழைக்காலத்தில் வெள்ளமாக மாறித் தன் பாதையைத் மீட்டெடுக்க முயலும் போது மனிதன் அஞ்சுகிறான். இதை வடிவேலு பாணியில் சொல்வாதானால், எனக்கு வந்தா தக்காளிச் சட்னி.. உனக்கு வந்தா ரத்தம்..!


இனிமேலும் இயற்கையைக் குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை. தவறு நம்மிடம் தான் உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது. ஒரு பக்கம் கிளைமேட் சேஞ்ச் மனிதர்களின் இருப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இன்னொரு பக்கம் எல் நினோ போன்ற இயற்கைக் கோபங்கள் மனிதர்களை மிரட்டி வருகிறது. இனியும் மனிதன் சுதாரிக்காமல் இருந்தால் ஆபத்துதான்.


மீதமிருக்கும் ஏரிகளையும் குளங்களையும் பாதுகாத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மழைக்காலத்திற்கு முன்பே நீர்நிலைகளையும் வடிகால்களையும் ஆழப்படுத்தி தூர்வார வேண்டும்.


ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேமிப்பு அமைப்பை முறையாகப் பராமரித்து, மழைநீரை பூமிக்குள் அனுப்ப வேண்டும். நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்து, நீர்நிலைகளின் கரைகளில் அதிக மரங்களை நட வேண்டும்.


மழை என்பது இயற்கையின் சாபம் அல்ல; அது பூமிக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.. உயிர் அமுதம். மனிதன் தனது சுயநலப் போக்கை மாற்றி, நீர்நிலைகளை மதித்து, இயற்கையோடு இயைந்து வாழக் கற்றுக்கொண்டால் மட்டுமே... மழைக்காலம் அச்சம் தரும் காலமாகக் மாறாமல், மீண்டும் நாம் மனமார ரசிக்கும் வசந்த காலமாகக் மாறும்!


"வெளியே மழை

வேடிக்கை பார்க்க ஜன்னல்

ஒற்றை நாற்காலி

அதில் நீயும் நானும்

இதுபோதும் எனக்கு"


(கவிஞர் வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும் மழை கவிதைத் தொகுப்பிலிருந்து)


முந்தைய தலையங்கங்கள் 

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)

news

டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !

news

எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?

news

தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??

news

பிரியாணிக் காதல்!

news

வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை

news

தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!

news

இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு

news

Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்