- சு.தா.அறிவழகன்
பேச்சுக்குப் பிரபலமானது தமிழ்நாடு. பேசிப் பேசியே வளர்ந்த தலைவர்கள்தான் இங்கு அதிகம். அப்படிப்பட்ட தமிழ்நாட்டு அரசியல் மேடைகள் இன்று ஆபாச வசவு மேடைகளாக மாறி வருவது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டு மேடைகளில் அண்ணாவும், நாவலரும், கலைஞரும், ஜீவானந்தமும், வைகோவும் இன்னும் பல தலைவர்களும் செந்தமிழிலும், அடுக்குமொழி நடையிலும், ஆழமான கொள்கை விளக்கங்களோடும் உரையாற்றிய காலம் ஒன்று உண்டு. மாற்றுக் கட்சியினரைக் கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்தியபோதும், அதில் கண்ணியமும், நகைச்சுவையும், எள்ளலும் நிறைந்திருந்ததே தவிர, தனிநபர் தாக்குதலோ அசிங்கமான வசவுகளோ இருந்ததில்லை. ஆனால், இன்றைய அரசியல் மேடைகளும், சமூக வலைதளங்களும், தேர்தல் பிரச்சாரங்களும் அந்த உன்னதமான மரபை முற்றிலுமாகச் சிதைத்து அழித்து விட்டன.
இந்தக் கட்சி அந்தக் கட்சி என்று இல்லாமல் கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளுமே ஆபாச அநாகரீக வசவுகளை அதிகாரப்பூர்வ பேச்சு மொழியாக மாற்றி விட்டன. கட்சி எல்லைகளைத் தாண்டி, அனைத்து தரப்பு தலைவர்களும், பேச்சாளர்களும் பிற கட்சித் தலைவர்களை ஆபாசமாகவும், அநாகரிகமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் விமர்சிப்பது இன்றைக்கு வாடிக்கையாகிவிட்டது.
"நீ 2 வார்த்தை ஆபாசமாக திட்டினால் நான் நாலு வார்த்தை அதை விட கேவலமாக பேசுவேன்" என்ற அளவுக்கு அரசியல் கட்சியினரின் பேச்சு போய் விட்டது. "இவர்களெல்லாம் மக்களுக்கான தலைவர்களா?" என்று சாமானிய பொதுமக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு அரசியல் தரம் தாழ்ந்து போயிருப்பது பெருங்கவலையை அளிக்கிறது. இதில் எல்லாக் கட்சிகளையுமேதான் நாம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியாக வேண்டும்.
இந்த பேச்சுப் பண்பாட்டு வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

இன்றைய அரசியல், சமூக வலைதளங்களின் "அல்காரிதம்" (Algorithm) வழியேதான் இயக்கப்படுகிறது. அமைதியான, நாகரிகமான உரையாடல்களை விட, கொச்சையான, ஆக்ரோஷமான பேச்சுக்களே அதிக கவனத்தைப் பெறுகின்றன அவதூறுகளே அதி முக்கியத்துவம் பெறுகிறது. "ரீல்ஸ்" மற்றும் "ஷார்ட்ஸ்" கலாச்சாரத்தில் உடனடியாக கவனம் ஈர்க்க வேண்டும் என்ற எண்ணமே பேச்சாளர்களை ஆபாச வார்த்தைகளை வீசத் தூண்டுகிறது.
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், பொருளாதாரக் கொள்கைகள், கல்வி, சுகாதாரம், மாநில உரிமை போன்ற ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பேசி வாக்குகளைப் பெற முடியாத சூழலில், எதிர்தரப்பினரின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கொச்சைப்படுத்தி, உணர்ச்சியைத் தூண்டி வாக்குகளைப் பெற முனையும் மலிவான அரசியல் உத்தி இது.
இந்த இடத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்களைத்தான் முதல் குற்றவாளியாக நாம் பார்க்க வேண்டியுள்ளது. காரணம், கீழ்மட்டப் பேச்சாளர்கள் அல்லது தொண்டர்கள் ஆபாசமாகப் பேசும்போது, கட்சித் தலைமைகள் அதை உடனடியாகக் கண்டித்துத் தண்டிப்பதில்லை. கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக, அத்தகைய பேச்சுகள் கைதட்டல்களோடும், "உலுக்கிட்டார்ல, கலக்கிட்டார்ல, நொறுக்கிட்டார்ல" என்ற போலிப் பெருமையோடும் ரசிக்கப்படுகின்றன. இந்த மறைமுக ஆதரவே தவறு செய்பவர்களுக்குத் துணிச்சலைத் தருகிறது.
எல்லாக் கட்சித் தலைவர்களுமே இப்படிப்பட்ட மோசமான பேச்சாளர்களை மறைமுகமாக ஆதரிக்கிறார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இப்படிப்பட்ட வசவாளர்களை கட்சித் தலைவர்கள் கடுமையாக கண்டிப்பதோடு உடனடியாக நிரந்தரமாக அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் சரி, ஈவு இரக்கமே இல்லாமல் நீக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கட்சிக்கு இனி தமிழ்நாட்டு பெண்களின் மதிப்பும் மரியாதையும் ஆதரவும் கிடைக்கும்.
இந்த பண்பாட்டு வீழ்ச்சியில் மிகவும் கவலையளிக்கும் பகுதி — பெண் அரசியல்வாதிகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள்.
பெண் தலைவர்களையோ, அல்லது ஆண் தலைவர்களின் வீட்டுப் பெண்களையோ அரசியல் களம் நோக்கி இழுத்து வந்து, அவர்களின் உடலமைப்பு, நடத்தை, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பரப்புவதும் ஆபாசமாகப் பேசுவதும் வாடிக்கையாகிவிட்டது. சமூக வலைதளங்களில் 'ட்ரோல்' என்ற பெயரில் பெண்களின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் அவதூறுகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
இது ஏதோ ஒரு குறிப்பிட்ட பெண் தலைவருக்கான பாதிப்பு மட்டுமல்ல; அரசியலுக்கு வர விரும்பும் ஒட்டுமொத்த பெண்களின் துணிச்சலையும், ஜனநாயகத்தில் பெண்களின் பங்களிப்பையும் முடக்கும் மிக மோசமான வன்முறை ஆகும். பெண் தலைவர்களை ஒருமையில் பேசுவது, மோசமாக விமர்சிப்பது போன்றவை இப்போது வழக்கமான பேச்சுக்களில் ஒன்றாக மாறியிருப்பது பெரும் அதிர்ச்சி தருகிறது.
அரசியல் மேடைகளின் தூய்மையை மீட்டெடுக்க உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளில் அனைத்துக் கட்சிகலுமே இறங்க வேண்டும்.
முதலில் அந்தந்த கட்சித் தலைவர்கள் பகிரங்கமாக அறிக்கை வெளியிட வேண்டும். தேவைப்பட்டால் கட்சி விதியில் ஒன்றாக இதை சேர்க்கலாம் - யாரையும் ஆபாசமாக, அநாகரீகமாக, கேவலமாக, ஒருமையில் பேச மாட்டோம் என்ற உறுதிமொழியை கட்சியினர் எடுக்க வேண்டும். அப்படிச் செய்வோர் மின்னல் வேகத்தில் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும்.
தேர்தல் ஆணையமும் இதில் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எந்தக் கட்சியினர் அதிக அளவில் அநாகரீகமாக பேசுகிறார்களோ, நடந்து கொள்கிறார்களோ பாரபட்சமே பார்க்காமல் அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். வெறும் எச்சரிக்கைக் கடிதங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், அநாகரிகமாகப் பேசும் வேட்பாளர்கள் அல்லது பேச்சாளர்களை சார்பில் அந்தக் கட்சியின் சார்பாக பேசுவதற்கும், செயல்படுவதற்கும், பிரச்சாரத்தில் பங்கேற்பதற்கும் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகளில் தனிநபர் கண்ணியம் மற்றும் ஆபாசப் பேச்சு தடுப்பு குறித்த விதிகளை மேலும் கடுமையாக்க வேண்டும். தேவைப்படும் கடுமையான சட்டங்களை மத்திய அரசும் நிறைவேற்ற வேண்டும்.
சமூக வலைதளங்கள் மற்றும் பொதுமேடைகளில் பெண்களை மையப்படுத்தி ஆபாசப் பிரசாரம் செய்வோர் மீது உடனடியாக ஜாமீனில் வர முடியாத சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். அவர்களை பாரபட்சமே இல்லாமல் உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்களுக்கு எந்த நீதிமன்றமும் ஜாமின் தரக் கூடாது. இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கச் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைத்து, குறுகிய காலத்தில் தண்டனை பெற்றுத் தர வேண்டும். தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்.
சமூக வலைதள நிறுவனங்கள் குறிப்பாக எக்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவை, போலி கணக்குகள் மூலம் அநாகரிகப் பரப்புரை செய்வோரின் கணக்குகளை உடனடியாக முடக்க வேண்டும். இந்திய சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, காவல்துறையின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அரசியல் என்பது கொள்கை மோதலாக இருக்க வேண்டுமே தவிர, கொச்சை வார்த்தைகளின் களமாக மாறக்கூடாது. நாகரிகமற்ற பேச்சுக்கள் தற்காலிகமாகச் சில கைதட்டல்களையும், சமூக வலைதளப் பார்வைகளையும் பெற்றுத் தரலாம்; ஆனால், அவை நமது சமூகத்தின் ஜனநாயக அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கின்றன.
ஓட்டு கேட்க வரும் தலைவர்கள் தங்களின் தகுதியையும், சொல்லாட்சியையும் உயர்த்திக் கொள்ளாவிட்டால், ஜனநாயகத்தின் உண்மையான நீதிபதிகளான பொதுமக்கள், தேர்தல் களத்தில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை!
ஜனநாயகத்தைக் காக்க சில நேரங்களில் சர்வாதிகாரத்தைக் கையில் எடுப்பதில் தவறில்லை!
இதுவும் கடந்து போகும்- ரம்யாவின் கவிதைத் தோட்டம் (5)
கண்டிக்கா பிள்ளை கெடும் கடன்பட்டால் வாழ்வு கெடும் - ஔவையின் பொன்மொழி 60 (6)
வியாழக்கிழமை வந்தா மறக்க முடியாத சோலாபூரி.. மறக்க முடியாத கல்லூரி நினைவுகள் (2)!
தென்தமிழ் தலையங்கம்: பேச்சு நாகரிகத்தின் வீழ்ச்சியும் - "அல்காரிதம்" அரசியலும் - பரிதாப தமிழ்நாடு!
சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்: 10 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் வானிலை மையம் எச்சரிக்கை!
இன்று முதல் சென்னையில் மழை தீவிரமடையும் : தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
தென்தமிழ் தலையங்கம்: "ரெட், மஞ்சள், ஆரஞ்சு" - வானிலை அலர்ட்டுகளும், மக்களின் விழிப்புணர்வும்!
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
கைபேசி இல்லாத காலத்து கல்லூரி நினைவுகள்.. ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே (1)!
{{comments.comment}}