- சு.தா.அறிவழகன்
"ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்" என்பது நமது மூதாதையர்கள் நமக்குச் சொல்லிச் சென்ற ஆழமான எச்சரிக்கை. இந்த முதுமொழியின் நிதர்சனமான அர்த்தத்தை இன்று உலகிற்கு உணர்த்தியுள்ளது இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞர் அனோஜன் சிவராசாவின் விவகாரம்.
அறியாமையில், உணர்ச்சிவசப்பட்டு எழுதப்பட்ட ஒரு சிறு கமெண்ட், ஒரு இளைஞனை சாவின் விளிம்பு வரை கொண்டு சென்று நிறுத்தி விட்டது. ஆனால், ஒட்டுமொத்த சமுதாயத்தின் கூட்டு முயற்சியால் அவருக்குக் கிடைத்திருக்கும் மறுவாழ்வு, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் ஒரு பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது.
என்ன நடந்தது?
இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 24 வயதான தொழில்நுட்பப் பொறியாளர் அனோஜன் சிவராசா, சவுதி அரேபியாவில் உள்ள பேட்டரி தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், இலங்கையில் நடந்த சம்பவம் தொடர்பாக, இணையத்தில் பரவிய ஒரு காணொளியைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூக வலைதள சண்டையில், மத நம்பிக்கைகள் குறித்து தமிழில் அவதூறான கருத்து ஒன்றை அவர் பதிவிட்டார்.

பின்னர் தன் தவறை உணர்ந்து அந்தக் கமெண்டை நீக்கி மன்னிப்பும் கோரியிருந்தார். ஆனால், அதன் ஸ்கிரீன்ஷாட் சவுதி அதிகாரிகளுக்கும் அவரது நிறுவனத்திற்கும் அனுப்பப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் வழக்கு ஷரியா சட்டத்திற்கு மாற்றப்பட்டு சவுதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதனால் இலங்கையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இளைஞர் அனோஜனின் குடும்பத்தினர் பெரும் கவலையில் மூழ்கினர். இதைத் தொடர்ந்து அனோஜனை காப்பாற்றும் முயற்சியில் இலங்கை அரசு களம் இறங்கியது.
அனோஜனின் குடும்பத்தினரின் கண்ணீரும், இலங்கையின் அரசியல் மற்றும் மதத் தலைவர்களின் கோரிக்கைகளும், இலங்கை அரசின் தீவிர ராஜதந்திர முயற்சிகளும், மனித உரிமை அமைப்புகளின் குரல்களும் இணைந்து சவுதி அரேபிய அரசிற்குத் தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தனர்.
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவிகளையும் இலங்கை அரசு கோரியது. சர்வதேச அளவில் தமிழர்களும் ஒருங்கிணைந்து அனஜோனுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரி சமூக வலைதளங்களில் தீவிர பிரச்சாரம் செய்தும் வந்தனர். இலங்கையில்அனைத்து மதத்தினரும் இணைந்து அனோஜனை விடுவிக்கக் கோரி பல்வேறு அமைதிவழிப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தின் கோரிக்கை மற்றும் அழுத்தத்தால் தற்போது சவுதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்துள்ளது. இந்தச் செய்தி உலகத் தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெரிய பாடத்தைக் கற்றுத் தருகிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சமூக வலைதளங்கள் நம் கைகளில் இருக்கும் ஒரு வலிமையான ஆயுதம். ஆனால், அதே சமயம் அது மிக ஆபத்தானதாகவும் மாறக்கூடும்.
நாம் எதைப் பேசுகிறோம், எதை எழுதுகிறோம் என்பதில் எப்போதும் மிக மிக விழிப்புடன் இருக்க வேண்டும். கோபத்திலோ அல்லது அவசரத்திலோ அடிக்கும் ஒரு வரி கமெண்ட், நம் ஒட்டுமொத்த எதிர்காலத்தையுமே கேள்விக்குறியாக்கிவிடும்.
சமூக வலைதளங்களில் நாம் இடும் 'லைக்', செய்யும் 'ஷேர்' மற்றும் போடும் 'கமெண்ட்' ஆகிய அனைத்தும் என்றென்றும் இணையத்தில் பதிவாகி இருக்கக்கூடியவை. ஒருவேளை தவறுதலாகப் பதிவிட்டுவிட்டு அதை நாம் அழித்தாலும், அதன் நிழல் நம்மைப் பின்தொடரக்கூடும். எனவே கவனமாக எதையும் செய்ய வேண்டும்.
பிறர் மனதைப் புண்படுத்தும் வகையிலோ, மத மற்றும் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலோ எதையும் பகிராமல் இருப்பது நமது சமூகக் கடமையாகும். யார் மனதையும் காயப்படுத்தாத வார்த்தைகளே ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும்.
வாழ்வின் விளிம்பு வரை சென்று திரும்பிய அனோஜனின் அனுபவம், வார்த்தைகள் குறித்த கூடுதல் பொறுப்புணர்வையும், விழிப்புணர்வையும் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. இணையத்தை விவேகத்துடன் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அழுத்தமாக நமக்குக் கற்பித்துள்ளது.
அனோஜன் சிவராசாவின் விடுதலைக்காக குரல் கொடுத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்வோம்.. அனோஜன், விரைவில் தாயகம் திரும்ப வாழ்த்துவோம்.
ஓடும் நதிகள் எல்லாம் உன் முகவரி தேடித்தானோ?
வேலை ஒன்று தான் ஆனால்.. வேறுபாடு!
நிலையற்ற உலகம்.. நிலைநிறுத்த முயல்கிறோம்.. ஆனால் நாம் மட்டும் எப்படி?
நீ...ண்...ட!
A man's world
எஸ்.வி.ரங்காராவ்.. படிக்காத மேதை.. மறக்க முடியுமா!
தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!
வடகிழக்கு பருவமழை 2026 இன்று முதல் துவக்கம்: சென்னைக்கு மழை வருமா?
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
{{comments.comment}}