வேளாங்கண்ணி கோயிலில் சாதியம்.. அமைச்சர் மரிய வில்சன் அதை மாற்றுவாரா? .. ரவிக்குமார்

Sep 02, 2026,05:08 PM IST

சென்னை: வேளாங்கண்ணி கோயிலில் சாதியம் இருப்பதாகவும், அதை நிதியமைச்சர் மரிய வில்சன் மாற்றுவாரா? என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி.ரவிக்குமார் கேட்டுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் மரிய வில்சன் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு நடை பயணமாகச் செல்வது ஊடகங்களில் செய்தியாகியிருக்கிறது. 


பாண்டிச்சேரியில் இருக்கும் ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட் வேளங்கண்ணி திருவிழா குறித்து ஒரு சிறு நூலை வெளியிட்டிருக்கிறது. ப்ரிஜிட் செபஸ்தியா எழுதியுள்ள அந்த நூல் இந்தத் திருவிழாவின் வரலாற்றையும் அது நடைபெறும் முறைகளையும் அதில் கலந்துள்ள இந்து மதக் கூறுகளையும் விவரிக்கிறது. 


வெளியூர்களிலிருந்து வேண்டுதலின்பேரில் நடந்துவரும் பக்தர்கள் நீலம், பச்சை, காவி என ஏதோ ஒரு நிறத்தில் உடையணிந்துகொள்ளவேண்டும். அவர்கள் நாற்பது நாட்கள் விரதமிருக்கவேண்டும். நடந்துவரும்போது செருப்பு அணியக்கூடாது. மது அருந்தவோ புகை பிடிக்கவோ கூடாது. அசைவ உணவையும் தாம்பத்ய உறவையும்  தவிர்க்கவேண்டும்.வேளாங்கண்ணியை நெருங்கியதும் குளித்து புத்தாடை உடுத்தி அதன்பிறகே தேவாலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். 




இந்த நடைமுறைகள் இந்து மத வழக்கங்களைப்போல இருப்பதால் இதற்கு 18 ஆம் நூற்றாண்டில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இப்படியான வழக்கங்களை மட்டுமின்றி இந்து மதத்தின் சாதிய படிமுறையையும் மதுரை மிஷன் என அழைக்கப்பட்ட ஏசுசபை பாதிரிமார்கள் பின்பற்றினர். மதமாற்றம் தடையின்றி நடக்கவேண்டுமென்றால் இந்து மத நம்பிக்கைகளைத் தொந்தரவு செய்யக்கூடாது என அவர்கள் நினைத்தனர். அதை பாண்டிச்சேரியிலிருந்த கப்பூச்சியன் சபையினர் கடுமையாக எதிர்த்தனர். கிறித்தவ வரலாற்றில் ‘ Querelle des Rites Malabar’ எனக் குறிக்கப்படும் அந்தக் கலகம இந்தியா முழுவதும் பரவியது. கடைசியில் போப்பாண்டவர் தலையிட்டு அதில் சமரசம் செய்துவைக்கும் நிலை ஏற்பட்டது. 


“இந்து மதத்தில் கோயிலுக்குப் போவதற்குமுன் குளித்து சுத்தம் செய்துகொள்வது வெறுமனே உடல் தூய்மை தொடர்பானதல்ல. அது , தீய சக்திகளின் திருஷ்டியிலிருந்து விடுபடுவது. இதை மூட நம்பிக்கையாகக் கருதிய பாதிரியார்கள் வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் நீராடுவதைத் தடுப்பதற்கு மாதா கோயில் குளத்தை சிமெண்ட் பலகைகளால் மூடிப்பார்த்தனர். ஆனால் மக்களோ கடலில் நீராடிவிட்டு வர ஆரம்பித்துவிட்டனர்” என குறிப்பிடுகிறார் ப்ரிஜிட். 


இந்துக் கோயில்களில் நடக்கும் மண்டகப்படிகளைப்போலவே இங்கும் நடக்கிறது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி துவங்கும் மண்டகப்படி செப்டம்பர் 10 ஆம் தேதி வரை நடக்கிறது. 


மண்டகப்படி பின்வரும் முறைப்படி நடப்பதாக ப்ரிஜிட் கூறுகிறார் ( பக்கம் 32-33) : 


ஆகஸ்ட் 29 - ஆர்ய நாட்டு செட்டியார்

ஆகஸ்ட் 30 - அகமுடையார், தேவர்

ஆகஸ்ட் 31- பனைமர நாடார் 

செப்டம்பர் 1- தென்னைமர நாடார்

செப்டம்பர் 2- கருங்கண்ணி திருச்சபை

செப்டம்பர் 3- உடையார்

செப்டம்பர் 4- ஆங்கிலோ இந்திய குடும்பம்

செப்டம்பர் 5- திருச்சி எஸ்.எம்.அந்தோணி குடும்பம்

செப்டம்பர் 6- வேளாங்கண்ணி ஆர்ய நாட்டு செட்டியார் 

செப்டம்பர் 7-  நாகை  ஆர்ய நாட்டு செட்டியார் 

செப்டம்பர் 8,9,10- இரவு ஊர்வலம்- மரியஜோசப் குடும்பம், ஆசாரி, தச்சர் உள்ளிட்டோர் 


ப்ரிஜிட்டின் நூலைப் படிக்கும்போதும், கிழக்குக் கடற்கரை சாலை நெடுகிலும் அணி அணியாக நடந்துபோகும் பக்தர்களைப் பார்க்கும்போதும் தமிழ்நாட்டில் ஆரோக்கிய மாதா வழிபாட்டை பரவச் செய்வதில்

உள்ளூர் வழிபாட்டு முறைகளும், நம்பிக்கைகளும் கலந்து புனையப்பட்ட நடைமுறைக்கு இருக்கும் முக்கியத்துவம் புரிகிறது. 


இந்து மதத்தின் சடங்குகளை உள்வாங்கியதோடு நின்றிருந்தால் சிக்கலில்லை,  சாதியப் படிநிலையையும் உள்வாங்கியதுதான் சாதியால் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் பெருமளவில் கிறித்தவத்தைத்  தழுவாமல் இருப்பதற்குக்  காரணமோ என்ற ஐயமும் எழுகிறது. 


அமைச்சர் மரிய வில்சன் வேளாங்கண்ணி மாதா கோயிலில் கிறித்தவத்துக்குப் புறம்பான இந்த சாதிய வழக்கங்கள் இப்போதும் கடைபிடிக்கப்படுகிறதா? என ஆராய்ந்து அவ்வாறிருந்தால் அதை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமையும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்