சென்னை: சிறுபான்மை அரசு என்ற பெயரை இன்று தவெக பெற்றுள்ளது. குறிப்பாக திமுகவிடமிருந்தே அந்தப் புகார் பலமாக வந்துள்ளது. ஆனால் அதே திமுக ஒரு முறை இதேபோல சிறுபான்மை பலத்துடன் கூடிய அரசை அமைத்தது.
அதுகுறித்த ஒரு கட்டுரையை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எழுதியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் அவரே எழுதிய கட்டுரை இது. காரணம், இதே பாமகவின் உதவியுடன் கருணாநிதியின் சிறுபான்மை பலத்துடன் கூடிய அரசு 5 ஆண்டு பதவிக்காலத்தையும் சிறப்பாக நிறைவு செய்து முடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் ராமதாஸின் முகநூல் பதிவின் விவரம்:
2006-11 காலத்தில் தமிழகத்தில் மிகவும் பிரபலமான சொற்றொடர் மைனாரிட்டி ஆட்சி என்பதாகும். திமுக அரசு பற்றி அப்போதைய அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா பேசும் போதெல்லாம் மைனாரிட்டி அரசு என்றே விளிப்பார். இது திமுக தலைவரும், முதலமைச்சருமான கலைஞருக்கு பெரும் தலைவலியாக இருந்தது. ஆனாலும், அவரது அரசு ஐந்தாண்டுகள் தாக்குபிடித்தது. அதற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிபந்தனையற்ற ஆதரவு தான்.

2006-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 96 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற்றது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் திமுகவுக்கு 22 இடங்கள் தேவைப்பட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 34 இடங்களிலும், பா.ம.க. 18 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. காங்கிரஸ் ஆதரவளித்தால் தான் திமுக ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை. ஆனால், மத்திய அரசில் திமுகவுக்கு நாங்கள் அமைச்சர் பதவி கொடுத்ததைப் போல நீங்களும் அமைச்சர் பதவி கொடுத்தால் தான் அரசுக்கு ஆதரவளிக்க முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறிவிட்டனர்.
ஆனால், அமைச்சரவையில் யாருக்கும் பங்கு தர திமுக தயாராக இல்லை. அந்த நேரத்தில் தான் திமுகவுக்கு பா.ம.க. கை கொடுத்தது. 2006 தேர்தலில் கலைஞரை முதலமைச்சராக்குவோம் என்று கூறி தான் கூட்டணிக்கு வாக்கு கேட்டோம், எனவே திமுகவை ஆட்சியில் அமர்த்துவது தான் சரி என்ற எண்ணத்துடன் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தேன். அதற்கான ஆதரவு கடிதத்தையும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்கள் ஆளுனரிடம் அளித்தனர். அதனால் வேறு வழியின்றி காங்கிரசும் நிபந்தனையின்றி திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டியிருந்தது.
ஐந்தாண்டு கால ஆட்சியில் திமுகவுக்கும், பா.மகவுக்கும் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக அணியிலிருந்து பா.ம.க. விலகிய போதிலும் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளவில்லை.
திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவளித்ததால் பா.ம.க. மீது காங்கிரஸ் கட்சிக்கு உள்ளூர கோபம் ஏற்பட்டது. ‘‘நீங்கள் மட்டும் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் எங்களுக்கு சில அமைச்சர் பதவிகள் கிடைத்திருக்கும். ஆனால், நீங்கள் தான் அதை கெடுத்து விட்டீர்கள். உங்களுக்கு அமைச்சர் பதவி தேவையில்லாமல் இருக்கலாம். எங்களுக்கு கிடைப்பதையும் தடுத்து விட்டீர்களே நியாயமா?’’ என சில காங்கிரஸ் தலைவர்கள் என்னிடம் உரிமையுடன் கோபித்துக் கொண்டனர். ஆனாலும் பா.ம.க. அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.
திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்த போதிலும், அதன் தவறுகளை சுட்டிக்காட்ட பாட்டாளி மக்கள் கட்சி தயங்கியதே இல்லை. அந்தக் காலத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டது பா.ம.க. தான். அந்தக் காலத்தில் திமுக அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து போராடி வெற்றி பெற்றது பாட்டாளி மக்கள் கட்சி தான்.
ஆக.... கூட்டணி தர்மத்தை பாதுகாப்பதாக இருந்தாலும், மக்கள் பிரச்சினைகளுக்காக உண்மையாக போராடுவதாக இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணை பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை பதிவு செய்கிறேன் என்ற அந்தப் பதிவில் கூறியிருப்பார் டாக்டர் ராமதாஸ்.
இந்தக் கட்டுரையை 2019ம் ஆண்டு ஜூன் 18ம் ஆண்டு பதிவிட்டிருந்தார் டாக்டர் ராமதாஸ்.
திமுக.,வுடன் 100% பேச்சுவார்த்தை நடத்தவில்லை.. அடித்துச் சொன்ன இபிஎஸ்
ரதன் பண்டிட் நியமனம் .. கொஞ்சம் கூட ஈகோ பார்க்காமல் ரத்து செய்த முதல்வர் விஜய்!
ரீல்ஸ் ஆட்சி நடத்தாம ரியல் ஆட்சி நடத்துங்க... சட்டசபையில் அதிரடி காட்டிய உதயநிதி
திமுகவுக்குப் பதிலடியாக.. கருணாநிதியின் ஆயுதத்தைக் கையில் எடுத்த முதல்வர் விஜய்!
பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவில் தப்பித்த மைனாரிட்டி திமுக அரசு.. டாக்டர் ராமதாஸ் அன்று எழுதியது!
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க - மு.க.ஸ்டாலின்
முதல் வாய்ப்பிலேயே சுற்றி வளைத்த உதயநிதி ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த்!
Vote of Confidence: 144 பேரின் ஆதரவோடு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது தவெக அரசு!
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்.. சட்டசபையில் முதல்வர் விஜய் கன்னிப் பேச்சு
{{comments.comment}}