- தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச் செல்வி
விடியற்காலை நான்கு மணி. உலகம் இன்னும் போர்வையை இழுத்து மூடி கொண்டு உறங்கிக் கொண்டிருந்தது. ஆனால், காமாட்சியின் கண்கள் உறக்கத்தை மறந்து பல காலம் ஆகிவிட்டன.
பழங்காலக் கதைகளில் வரும் ‘நல்லதங்காள்’ தன் வறுமையின் கொடுமை தாங்காமல், பெற்ற பிள்ளைகளைக் கிணற்றில் தள்ளிவிட்டு, தானும் குதித்து மாண்டாள் என்று காமாட்சி சிறுவயதில் படித்திருக்கிறாள்.
ஆனால், இந்த இருபத்தியோராம் நூற்றாண்டின் நவீன நல்லதங்காளான காமாட்சிக்கு, கிணற்றைத் தேடிப் போவதை விட, வாழ்க்கையை எதிர்த்து நீந்துவதே பிடித்திருந்தது.
மூன்று வருடங்களுக்கு முன்பு, குடிப்பழக்கத்தால் கணவன் இறந்துபோன போது, காமாட்சியின் கைகளில் மிஞ்சியது இரண்டு பிஞ்சுக் குழந்தைகளும், மலையளவு கடனும் மட்டும்தான். சுற்றத்தாரும், சொந்த பந்தங்களும் அவளைப் பரிதாபமாகப் பார்த்தார்களே தவிர, ஒருவேளை சோற்றுக்கு வழி காட்டவில்லை.
"ஒரு பொம்பள தனியா ரெண்டு புள்ளைங்களை வெச்சிகிட்டு என்ன பண்ணப் போறா? பேசாம ஏதாவது கிணறு குட்டையில..." என்று பின்னால் பேசியவர்களின் சொற்கள் அவளது காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல் இருந்தது.

"அன்று நல்லதங்காள் பிள்ளைகளைக் கிணற்றில் போட்டாள். ஆனால் நான், என் பிள்ளைகளின் வறுமையை அல்லவா அந்த கிணற்றில் போட வேண்டும் " - இதுதான் அன்று காமாட்சி எடுத்த சபதம்.
காமாட்சி அதற்காக அழுதுகொண்டே உட்காரவில்லை. அவளுக்கு நன்றாக சமைக்கத் தெரியும். அதுதான் அவளது ஆயுதம். குழந்தைகளின் அரைஞான் கொடியில் நீண்ட கயிற்றைக் கட்டி , அதை வீட்டில் தூணோடு கட்டிவிட்டு, இருவரையும் விளையாடிக் கொண்டிருக்குமாறு சொல்லிவிட்டு இவள் புறப்பட்டு விடுவாள். குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்வதை விட , இது பெரிய பாவம் இல்லை என தன் மனதில் சமாதானப்படுத்திக் கொண்டாள்.
காலை 5:00 மணி: அக்கம்பக்கத்து வீட்டு வாசல்களில் கோலமிட்டு, வீடுகளைப் பெருக்கித் துடைக்கும் வேலை.
காலை 8:00 மணி: வீடுகளுக்குச் சென்று சுடச்சுட இட்லியும், தக்காளித் தொக்கும் செய்து கொடுக்கும் 'கேட்டரிங்' வேலை.
மதியம் 1:00 மணி: தையல் மெஷினில் அமர்ந்து உடைகள் தைக்கும் வேலை. கைக்குழந்தையைத் தோளில் கட்டிக்கொண்டு, மூத்த மகனைப் பள்ளியில் விட்டுவிட்டு அவள் ஓடிய ஓட்டம், அவளது வறுமையையும் ஓட வைத்தது.
ஆரம்பத்தில் இரண்டு வீடுகளில் சமைக்கத் தொடங்கியவள், தன் கைமணத்தாலும், சுத்தத்தாலும் மெல்ல மெல்ல 'காமாட்சி ஹோம் ஃபுட்ஸ்' என்ற பெயரில் ஒரு சிறிய மெஸ் வீட்டிலிருந்தே தொடங்கினாள்.
நாட்கள் செல்லச் செல்ல. காமாட்சி யின் கடின உழைப்பு வீண் போகவில்லை. மெயின் ரோட்டில் ஒரு கட்டிடத்தை வாடகைக்குப் பிடித்து , அதில் காலை, மாலை, இரவு என சிற்றுண்டி தயாரித்து வழங்கினாள். வேலைக்கு செல்பவர்கள், வேலையில் இருந்து திரும்புவார்கள் - என காமாட்சி மெஸ்ஸில் அப்படி ஒரு கூட்டம் அலைமோதியது . இன்று அவளது உணவகத்தில் மேலும் நான்கு ஆதரவற்ற பெண்களுக்கு வேலை கொடுத்திருக்கிறாள். காலங்கள் கடந்தன.
ஒரு மாலைப் பொழுது. அவளது மூத்த மகன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்று, அந்தப் பதக்கத்தை மீனாட்சியின் கழுத்தில் மாட்டினான்.
இளைய மகள் அவளது மடியில் அமர்ந்து, "அம்மா... நீங்கதான் உலகத்திலேயே பெஸ்ட் அம்மா!" என்று கன்னத்தில் முத்தமிட்டாள்.
ஜன்னல் வழியே வெளியே தெரிந்த கிணற்றை காமாட்சி பார்த்தாள். அந்தக் கிணறு இன்று வறண்டு போயிருந்தது. ஆனால், அவளது உழைப்பால் அவளது குடும்பத்தின் எதிர்காலம் , தெளிந்த நீரோடையாக ஓடிக்கொண்டிருந்தது.
பண்டைய நல்லதங்காள் வறுமைக்கு அஞ்சி உயிரை விட்டாள். ஆனால் இந்த நவீன நல்லதங்காளோ, தன் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, வறுமையைக் கொன்று, தன் குழந்தைகளையும் காத்து, சமுதாயத்தில் தலைநிமிர்ந்த பெண்ணாக இன்று திகழ்கிறாள்.
(சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். சாதனைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா போன்ற 30 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்)
அழகு தமிழ் ராகத்திலே ஆனந்தமாய் மெட்டு எடு அன்பாக மாமன் நெஞ்சம் அடியே நீ தொட்டுவிடு!
நான் நிரந்தரமானவன்.. திருச்சியில் அரங்கேறிய மரபுப் பா கவியரங்கம்!
கணினிக் கல்யாணி.. A Science சிறுகதை!
நவீன நல்லதங்காள்!
சப்த கன்னியர், சப்த மாதர்கள் இரண்டும் ஒன்றா?
Dorothy Quick Review: திருநங்கைகளை இனி பார்த்தால் வணங்க வேண்டும்..!
நல் வாழ்வியல் சிந்தனைகள்.. பாராட்டினால் மகிழ்ச்சி.. அறிவுரை என்றால் கசக்குது!
Tuesday Thoughts: அவர்களை விடுங்கள்! நிம்மதியாகப் போகட்டும்!
புரட்டாசி மாதம் விரதம் இருப்பதெல்லாம் சரி.. என்னெல்லாம் சாப்பிடலாம்.. இந்தா பிடிங்க லிஸ்ட்!
{{comments.comment}}