குழந்தைகள் காலத்தின் கண்ணாடிகள்!
- பா. சுமதி மோகன், நெய்வேலி
குழல் இனிது யாழ் இனிது என்பர்தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்!
என்பது வள்ளுவர் வாக்கு.
இயற்கை தந்த இனிய பொக்கிஷம் தான் குழந்தைகள். அந்தக் காலத்தில் ஒரு தாய் ஏழு, எட்டு என்று பிள்ளைகள் பெற்று வளர்த்து ஆளாக்கினார். அன்று அது ஒரு பெரிய விஷயமாகவே இருந்ததில்லை. ஆனால் இன்று ஒரு பிள்ளையைப் பெற்று வளர்ப்பதே பெரும் சவாலாக இருக்கிறது என்கிறார்கள் சில தாய்மார்கள். உண்மைதான் இந்தக் காலத்து குழந்தைகளின் அறிவு, திறமை, அவர்களின் குறும்புகள், விளையாட்டுகள் எல்லாமே நம்மை மெய்மறக்கச் செய்கிறதோ இல்லையோ நிச்சயமாக பிரமிக்கச் செய்கிறது.
பிறந்து சில மாதங்களில் அது தன் பொக்கை வாய் திறந்து அம்மா, அப்பா என்று பேசும் அழகு இருக்கிறதே அடடா அந்த மகிழ்ச்சிக்குத்தான் ஈடுஇணை ஏது?
அவர்கள் தவழ்ந்து, தத்தித்தத்தி நடை பழகி கண்ணில் காண்பதை எல்லாம் எடுத்து தூக்கி எறிந்து, நொறுக்குவதைப் பார்த்து கோபம் வரும் தான். ஆனாலும் அவர்கள் குழந்தைகள். அவர்களுக்கு என்ன தெரியும்., அந்தப் பொருளை, அதன் மதிப்பைப்பற்றி சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாத மழலை மொட்டுக்கள்., இறைவன் தந்த வரம் குழந்தைகள்.
இந்நாளில் குழந்தைகள் மிக சாதுர்யமாக அறிவியல் சாதனங்களைக் கையாள்வது ஆச்சர்யம் அளித்தாலும் கூட, தெரிந்தே படுகுழியில் விழுந்து விடுமோ என்று மனதில் சிறு கலக்கமும் ஏற்படத்தான் செய்கிறது. ஆம். ஒரு வயதுக்குழந்தை கூட மாதங்கள், ஆண்டுகள், மாவட்டங்கள், பழங்கள், விலங்குகள் என்று அந்தச் சிறு வயதிலேயே நிறையக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனாலும் பெரியவர்களைப் பார்த்து அவர்களும் அலைபேசியை விளையாட்டுப் பொருளாகக் கொண்டு எந்நேரமும் அதில் அதிக கவனம் வைத்து விளையாடுவதைப் பார்க்கும் போது மனம் கனக்கிறது.
ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்றார் பாரதி.
நாம் என்ன செய்கிறோம்., பிள்ளையைச் சமாளிக்கிறேன் என்ற பெயரில் அவர்களிடம் ஒரு செல்பேசியைக் கொடுத்துவிட்டு நாமும் அதையே ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம்.
தாய், தந்தை இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில் வளரும் குழந்தைகளின் பரிதாபங்கள் சொல்லில் அடங்காது. நம்மால் இந்த உலகிற்கு வந்த குழந்தைகளை, அவர்கள் குறும்புகளை, மழலையை ரசிக்கவும் நேரமின்றி பணத்தைத்தேடி ஓடுகிறார்கள் பல பெற்றோர்கள். குழந்தைப் பருவத்தில் நாம் அவர்களிடம் காட்டும் அன்பு, அரவணைப்பு, நேரம் செலவிடுதல் அக்கறை தான் நாளை அவர்கள் ஊர் உலகு போற்ற வாழவைக்கும். கண் கெட்ட பிறகு சூர்யநமஸ்காரம் என்பது போல் காலம் கடந்து வருந்தி பயன் இல்லை என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்வதோடு ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு மட்டும் அலைபேசியைக் குழந்தைகள் பயன் படுத்த கற்றுக்கொடுக்க வேண்டும்.
அடுத்ததாக கண்ட கண்ட உணவையும் குழந்தைக்குத் தருவதை விட்டு நல்ல ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை, காய்கறிகள், பழங்களை குழந்தைகளுக்குத் தந்து பழக்கப்படுத்த வேண்டும்.
சென்னை போன்ற ஊரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் குழந்தைகள் குறைந்த பட்சம் அவர்கள் வீட்டின் மொட்டை மாடியிலோ, அல்லது அருகில் உள்ள பூங்காக்களில் பாதுகாப்புடன் ஓடியாடி விளையாடப் பெற்றோர் வழி செய்தால் நல்லது.
பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் இன்னும் கவனமாக இருப்பதும் மிகமுக்கியம்.
பாலியல் வன்கொடுமை தலைவிரித்தாடும் இந்தக் காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் போன்ற விஷயங்களை அவர்கள் புரிந்து கொள்ளும் விதமாகப் பொறுமையுடன் சொல்லித்தருவதோடு பெண் குழந்தைகளின் உடை விஷயத்திலும் பெற்றோர் மிகவும் அக்கறை செலுத்தினால் தேவையற்ற பிரச்சனைகளிலிருந்து பெண் குழந்தைகள் தப்பித்துக்கொள்ளலாம். அடுத்ததாக மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள். வயதுக்கேற்ற மனவளர்ச்சி இல்லாமல் பிறந்த இந்தக் குழந்தைகளைப் பெற்றவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள், போராட்டங்கள், மனவேதனைகள் சொல்லில் அடங்காதவை. வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் மிகவும் சிரத்தையோடு மனவளர்ச்சி குறைந்த தங்கள் குழந்தைகளுக்கும் இந்த சமூகத்தில் ஒரு சிறு அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் காரணமாக வாழ்க்கையோடு போராடிக்கொண்டு தான் வாழ்கிறார்கள் என்பது கண்கூடு.
அடுத்ததாகக் கல்வி. இன்றைய காலகட்டத்தில் வசதிபடைத்த குழந்தைகள் சிறப்பான கல்வி வசதி பெறுகிறார்கள். வசதி வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் ஒரு வேளைப் பசியைப் போக்கிக்கொள்ள, சத்துணவு உட்கொள்வதற்காகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். எது எப்படி இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் குழந்தைகள் குழந்தைகள் தான். அவர்கள் சிரிப்பு, மழலை, சேட்டைகள், விளையாட்டுகள், வீட்டின் சுவரெங்கும் அவர்கள் வரையும் கிறுக்கல்கள் எல்லாமே... எல்லாமே அழகு தான்.
குழந்தை வரம் கிடைக்காதா என்று பலரும் காத்துக்கிடக்கும் அவலங்கள் நிறைந்த இந்த உலகில் நம்மை மட்டுமே நம்பி வந்த நடமாடும் தெய்வங்கள் நம் குழந்தைச்செல்வங்கள்.அன்போடு நல்ல பண்போடு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்து அவர்கள் எதிர்காலம் சிறக்கவைப்பது பெற்றொர்களாகிய நம் கடமை.
இன்றைய குழந்தைகள் தான் நாளைய எதிர் காலத்தின் தூண்கள். குழந்தைகள் மனதில் நல்ல எண்ணங்களை விதைப்போம்... அவர்கள் எதிர்காலம் சிறக்க தோள் கொடுப்போம்.
நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெடப் புழுதியில் எரிவதுண்டோ சொல்லடி சிவசக்தி எனைச்சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்! என்ற பாரதியின் கவிதையை நனவாக்குவோம்.....
(பா. சுமதி மோகன் திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர். தடம் பதிக்கும் தளிர்கள் மையமும், தென்தமிழ் இணையதளமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி வகுப்பிலும் கலந்து கொண்டிருப்பவர்)