SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தேர்தல் ஆணையம் நடத்தத் திட்டமிட்டுள்ள SIR பணிகளுக்கு எதிராக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது கடமை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக சார்பில் இன்று சார் பணிகளுக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்தத் திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு பதிவை தனது எக்ஸ் தளத்தில் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் SIR-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!
வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் குழப்பங்கள் - ஐயங்கள் இல்லாமல் போதிய கால அவகாசத்துடன், 2026 பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையை தேர்தல் ஆணையம்ஏற்காததால், உச்சநீதிமன்றத்தை நாட இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுத் தங்களுடைய உணர்வைப் பதிவு செய்த 49 கட்சிகளின் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் பங்கேற்காதவர்களும் தங்களுடைய கட்சிகளில் SIR குறித்து விவாதித்து, ஜனநாயகத்தைக் காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.