அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக

Nov 02, 2025,02:09 PM IST

சென்னை: தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவிருக்கும் சார்  திட்டமானது, மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.


சார் பணிகளை தவெகவும் எதிர்க்கிறது. இதுதொடர்பாக இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை:


தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே, பீகார் மாநிலத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதைக் கடுமையாக எதிர்த்து, அதன் உள்நோக்கம் குறித்து எச்சரித்தோம். அப்போது எச்சரித்தது போலவே பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. 


குறிப்பாக இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் மூலம் மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறிவைத்து நீக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.


முதல் கட்டச் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படாத நிலையில், இரண்டாம் கட்டத் திருத்தத்தை மேற்கொள்வது எந்த வகையில் சரியான நகர்வாய் இருக்க முடியும்?


தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் பெயரையும் வெறும் 30 நாட்களில் எப்படிச் சரிபார்க்க முடியும்?




இந்த வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் வாயிலாக, பீகாரில் நடைபெற்றதைப் போல் தமிழ்நாட்டிலும் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறி வைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றன. அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? 


தேசியக் குடிமக்கள் பதிவேட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் அசாமில் மட்டும் தனியாகச் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்கிற அறிவிப்பும் இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே உள்ளது. எனவே சிறப்புத் தீவிரத் திருத்தம் என்கிற குழப்பமான நடைமுறையை விடுத்து, ஏற்கெனவே இருக்கும் நடைமுறையே தொடர வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.


மேலும் தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தப்படும் நிலையில், இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சில ஆலோசனைகளை முன்வைக்கிறது.


1. வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தவறுகள் இருப்பின், முறையான படிவத்தின்படி பட்டியல் திருத்த நடைமுறை வாயிலாக, அதனைச் சரிசெய்து முறையான, சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்.


2. இந்த நடைமுறை வாயிலாகப் புதிய வாக்காளர்களைச் சேர்க்க வேண்டும். இறந்தவர்களின் பெயர்களையும் போலியான பெயர்களையும் நிரந்தரமாக நீக்க வேண்டும்.


3. புதிய வாக்காளர்களுக்கான அடையாளம் மற்றும் வயது ஆதாரத்திற்கு ஆதார் அட்டையை ஓர் ஆவணமாக ஏற்க வேண்டும்.


4. திருத்தம் செய்து இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகளின் பாக முகவர்கள் சரிபார்க்கும் வகையில் அவர்களுக்கு வழங்க வேண்டும்.


5. வேட்புமனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்குப் பிறகு புதிய வாக்காளர்களைச் சேர்க்கக் கூடாது.


6. வாக்காளர் திருத்த நடைமுறை முடிவடைந்து, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் அரசியல் கட்சிகளுக்கு டிஜிட்டல் இயந்திரத்தில் வாசிக்கக்கூடிய வடிவில் அப்பட்டியல் வழங்கப்பட வேண்டும்.


7. இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை இணையத்தில், எளிதில் தேடும் வசதியுடன் வெளியிட வேண்டும்.


அரசியல் லாபம் பார்க்க நினைக்கும் திமுக


நம் மண்ணின், மக்களின் உரிமையைக் காக்க, அரசியல் வேற்றுமைகளைப் புறந்தள்ளி இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனும் நிலைப்பாட்டில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக இருக்கிறது. அதே சமயம், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை வெறும் வாக்கு அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் தி.மு.க.வின் சூழ்ச்சியையும் அறிந்தே இருக்கிறோம்.


அண்டை மாநிலமான கேரள அரசு, சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கை, அம்மக்களின் உரிமை மீதான அக்கறையைக் காட்டுகிறது. ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்தத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்ளும் தி.மு.க., இதுகுறித்துச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்?


தொகுதி மறுவரையறையை எதிர்க்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு, அரசு சார்பில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே அதில் கலந்துகொண்டு, மக்கள் உரிமைகளுக்காகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாட்டினைத் தெரிவித்தோம். ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான தி.மு.க.வின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான நோக்கத்தையும் பின்னணியையும் மக்கள் அறியாமல் இல்லை.


தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க.வின் இத்தகைய முன்னெடுப்பின் நோக்கம், தி.மு.க. அரசு மீது வரிசை கட்டி வரும் ஊழல் புகார்களில் இருந்து மக்களைத் திசை திருப்பும் கபட நாடக அரசியலே ஆகும்.


முதலில் குரல் கொடுத்தது தவெகதான்


சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக ஏற்கெனவே தமிழ்நாட்டில் முதல் குரலாக ஓங்கி ஒலித்தது, தமிழக வெற்றிக் கழகத்தின் குரல்தான். இதை நாடும் நாட்டு மக்களும் நன்றாகவே அறிவர். நாம் முதன்முதலாகக் குரல் எழுப்பிய அந்த நேரத்தில் தி.மு.க. தூங்கிக்கொண்டிருந்ததா? ஒன்றிய பா.ஜ.க.வுடன் மறைமுக உறவுக்காரராக இருந்ததால் மறதி மயக்கத்தில் இருந்ததா? ஏதோ இப்போது மட்டும் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக முதன்முதலாக விழித்துக்கொண்டது போலவும், தான் மட்டுமே ஜனநாயக உரிமையின் ஒற்றைப் பாதுகாவலன் போலவும் கபட நாடக வேடத்தைப் பூண்டுள்ளது, அப்பட்டமான ஏமாற்று வேலை. இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றுவதைப் போல எல்லோரையும் ஏமாற்றி விடலாம் என்று தி.மு.க. நினைக்கிறதா?


இந்தக் கேள்விகள் மக்கள் மனத்திலும் எழுந்துள்ளன. எனவே, தி.மு.க.வின் கபட நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை. ஜனநாயகத்திற்காகவும் மக்கள் உரிமைகளுக்காகவும் காத்திரமாகக் குரல் கொடுப்பதில் தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் முதல் இயக்கமாக இருக்கிறது. இதைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர். ஜனநாயக மற்றும் மக்கள் உரிமைகளுக்கு எதிராகச் செயல்பட்டால், அது ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும், சமரசமின்றி எதிர்ப்பதில்  த.வெ.க. எப்போதும் போல் தீர்க்கமாக இருக்கும்.


ஆகவே, சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்படும். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, வட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் என அனைவரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை விழிப்போடு கண்காணிப்பர்.

மக்கள் நலன், ஜனநாயகம் மற்றும் உரிமைகள் சார்ந்த அனைத்திலும் மக்களுடன் மக்களாக, மக்கள் பக்கம் மட்டுமே தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Women's world cup Finals: ஷெபாலி அதிவேகம்.. தீப்தி சரவெடி.. ரிச்சாவின் மின்னலாட்டம்.. இந்தியா 298!

news

SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

news

SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்