டில்லி : பிரதமர் நரேந்திர மோடி மீது நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டதால் அவரை லோக்சபாவிற்கு வரவேண்டாம் என கேட்டுக் கொண்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பார்லிமென்டில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஜனவரி 28ம் தேதியன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கியது. பிப்ரவரி 01ம் தேதியன்று மத்திய நிதியமைச்சர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் மசோதா மீதான விவாதம் நடைபெற்று வந்தது. பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போதே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு, காகிதங்களை கிழித்து போராட்டம் நடத்தியதால் சமீபத்தில் 8 காங்கிரஸ் எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் முழக்கங்களையும், குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்து வந்தன. இந்நிலையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மசோதா மீதான பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணிக்கு உரை நிகழ்த்துவார் என சொல்லப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நேற்று அவர் உரை நிகழ்த்தவில்லை.
இதனால் இன்று மாலை பிரதமர் மோடி பார்லிமென்ட்டில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து உரை நிகழ்த்துவார் என எதிர்பார்ப்பட்டது. ஆனால் பார்லிமென்ட்டில் பிரதமர் உரை நிகழ்த்தாமல், பிரதமர் அவையில் இல்லாமலேயே ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. பதிலளிக்க பயந்து பிரதமர் அவைக்கு வரவில்லை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். அதற்கு லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அதிர்ச்சி அளிக்கும் வகையில் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிலவிய குழப்பமான சூழ்நிலையைக் குறிப்பிட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏதேனும் 'எதிர்பாராத அசம்பாவிதம்'நேரிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே, அவரை சபைக்கு வர வேண்டாம் என்று தான் அறிவுறுத்தியதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். பிரதமர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
2004-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக, குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் பிரதமரின் பதில் உரை இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி மற்றும் நாடாளுமன்ற விதிகளை மதிக்காத போக்கு குறித்து ஓம் பிர்லா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார். தமிழக எம்.பி.,க்களான ஜோதிமணி, சுதா உள்ளிட்டோர் பிரதமரின் இருக்கை அருகே சென்று கோஷமிடவும் திட்டமிட்டிருந்ததாக சபாநாயகர் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். அவையின் கண்ணியம் (Decorum) முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் கோஷங்களுக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் குடியரசுத் தலைவர் உரைக்கான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. கடந்த சில நாட்களாக முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவணேவின் புத்தகம் மற்றும் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் போன்ற விவகாரங்களால் நாடாளுமன்றத்தில் கடும் மோதல் போக்கு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி
பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா
சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்
பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்
"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு
தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்
பிள்ளையார்பட்டி குடவரை கோயில் – தல வரலாறு!
கனவு
{{comments.comment}}