H-1B விசா குழப்பம்.. புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்குத்தான் கட்டண உயர்வு.. அமெரிக்க அரசு விளக்கம்
டெல்லி: புதிய H-1B விசா குறித்து எழுந்துள்ள குழப்பத்தைத் தொடர்ந்து அதுகுறித்த விளக்கம் ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அதாவது தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வானது, புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்குத்தான் என்றும் ஏற்கனவே வைத்துள்ளவர்களுக்கு அது பொருந்தாது என்று அமெரிக்க அரசு விளக்கியுள்ளது.
இந்தியர்களையும், இந்தியாவையும் குறி வைத்து அடுத்தடுத்து வேகமாக காய் நகர்த்தி வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். ரஷ்யாவிடம் நாம் கச்சா எண்ணெய் வாங்குவதும், அவரது வழிக்கு நாம் வராமல் இருப்பதுமே இதற்கு முக்கியக் காரணம். ஆனால் இந்தியா இந்த நெருக்கடிகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் டிப்ளமேட்டிக்காக நடந்து வருகிறது. இதுவும் கூட டிரம்ப்பை எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது.
இதனால் இந்தியாவுக்கு நெருக்கடி தர வரி விதிப்பை அறிவித்தார். இந்தியாவுக்கு தற்போது 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக அமெரிக்க நிர்வாகம் பேசி வருகிறது. அதேபோல தற்போது இன்னொரு முக்கிய நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, அதிக அளவில் இந்தியர்களுக்குப் பயன் அளித்து வரும் H-1B விசா விண்ணப்ப கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது அமெரிக்க அரசு. தற்போது விண்ணப்ப கட்டணம் 1000 டாலராக இருந்து வரும் நிலையில் அதை ஒரேயடியாக 1 லட்சம் டாலராக உயர்த்தியுள்ளது.
இதனால் அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் இந்தியர்கள், சாப்ட்வேர் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் உள்ளிட்டவை பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன. இந்த நிறுவனங்களில் அதிக அளவில் பணியாற்றுவோர் இந்தியர்கள்தான். இதனால் இந்த நிறுவனங்கள் அனைத்துமே அதிர்ச்சி அடைந்துள்ளன. இதையடுத்து தற்போது புதிய விளக்கம் ஒன்றை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இதன்படி, $100,000 கட்டணம் என்பது புதிய விசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஒருமுறை செலுத்த வேண்டிய கட்டணம் என்றும், இது ஆண்டுதோறும் வசூலிக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்திச் செயலாளர் கரோலின் லீவிட், புதிய கொள்கை அமலுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, சனிக்கிழமை அன்று ஒரு தெளிவான விளக்கத்தை வெளியிட்டார். அவர் கூறுகையில், இது வருடாந்திர கட்டணம் அல்ல. இது ஒருமுறை மட்டுமே செலுத்த வேண்டிய கட்டணம்... இது புதிய விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும், புதுப்பிப்புகளுக்கு அல்ல, ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கும் அல்ல. அவர்கள் புதிய கட்டணம் செலுத்தாமலேயே திரும்ப வரலாம் என்று விளக்கினார்.
எப்படிப் பார்த்தாலும் இது நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த புதிய நடவடிக்கையால் பெருமளவில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் இடம் பெறலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
முன்னதாக புதிய கட்டணக் கொள்கை குறித்து குழப்பம் விளைந்ததால், பல நாடுகளும் தங்களது ஊழியர்களை இப்போதைக்கு அமெரிக்காவிலிருந்து வர வேண்டாம் என கேட்டுக் கொண்டன. அமெரிக்காவிலிருந்து வெளியேறினால் மீண்டும் வர பெருமளவில் கட்டணம் செலுத்த வேண்டுமே என்ற குழப்பமே இதற்குக் காரணம். இதன் காரணமாக, வெள்ளிக்கிழமை அன்று வெளிநாடுகளுக்குச் செல்ல விமானத்தில் ஏறிய சிலர், அமெரிக்காவுக்கு மீண்டும் நுழைய அனுமதி கிடைக்காது என்ற அச்சத்தில் விமானத்தில் இருந்து இறங்கிவிட்டனர் என சான் பிரான்சிஸ்கோ குரோனிகல் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
H-1B விசா என்பது, விஞ்ஞானிகள், பொறியாளர்கள், கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் போன்ற சிறப்புத் திறமை வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்காவில் வேலை செய்ய நிறுவனங்கள் அனுமதிக்கும் விசா வகையாகும். இந்த விசா ஆரம்பத்தில் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும், அதை ஆறு ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்.
இந்த விசாக்கள் தொழில்நுட்பத் துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குலுக்கல் முறையில் வழங்கப்படும் இந்த விசாக்களில் கிட்டத்தட்ட முக்கால் பங்கு இந்தியர்களுக்குக் கிடைக்கிறது. 2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா சுமார் 400,000 H-1B விசாக்களை அனுமதித்தது. இதில் மூன்றில் இரண்டு பங்கு விசாக்கள் புதுப்பிப்புகளாகும்.