பாமக.,வின் மாம்பழச் சின்னம்...அன்புமணிக்கு கிடைத்தது எப்படி? வெளியான பகீர் தகவல்

Su.tha Arivalagan
Sep 19, 2025,05:13 PM IST

சென்னை : பாமக.,வின் மாம்பழ சின்னம் அன்புமணி வசமே உள்ளதாக அக்கட்சியின் வழக்கறிஞர் கே.பாலு சமீபத்தில் தெரிவித்தார். இதனால் அன்புமணி தலைமையில் தான் பாமக உள்ளது. மாம்பழ சின்னத்தை வேட்பாளர்களுக்கு ஒதுக்கும் அதிகாரத்தையும் தேர்தல் கமிஷன் அன்புமணிக்கு தான் கொடுத்துள்ளது என அவரது ஆதரவாளர்கள் கடந்த இரண்டு, மூன்று நாட்களாகவே பேசி வருகிறார்கள். இது எப்படி நடந்தது என புரியாமல் பாமக தொண்டர்கள் மட்டுமின்றி தமிழக மக்களும் குழப்பமடைந்துள்ளனர்.


மாம்பழ சின்னம் அன்புமணி வசமானதற்கு பின்னால் ஒரு நடந்த சம்பவங்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உண்மையில் அன்புமணி தரப்பு, மாம்பழ சின்னத்தை கேட்டு பெற்றது 2026ல் தமிழகத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்காக கிடையாதாம். டிசம்பர் மாதம் பீகாரில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தாங்கள் போட்டியிட உள்ளதாகவும், அதில் மாம்பழ சின்னத்தில் போட்டியிடவும், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்கும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தான் அன்புமணி தரப்பில் தேர்தல் கமிஷனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


தேர்தல் கமிஷன் நடைமுறைகளின் படி, சின்னம் ஒதுக்குவதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். அதற்கு அடுத்த படியாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள சின்னங்களை தான் சுயேட்சைகளுக்கு ஒதுக்குவார்கள். தேர்தல் கமிஷன் பட்டியலிட்ட சின்னங்களில், ஏதாவது ஒரு சின்னத்தை மற்ற எந்த கட்சிகளும் கேட்காமல் இருந்தால், எந்த கட்சி அந்த சின்னத்தை கேட்கிறதோ அவர்களுக்கே அந்த சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்து விடுவார்கள்.




இதன் அடிப்படையில் தான் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருக்கும் பாமக, மாம்பழ சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கும் படி தேர்தல் கமிஷனிடம் கேட்டுள்ளது. வேறு யாரும் மாம்பழ சின்னத்தை கேட்காததால் அன்புமணி தலைமையிலான பாமக மாம்பழ சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்துள்ளது. இதை தான் தேர்தல் கமிஷன் அன்புமணிக்கு மாம்பழ சின்னத்தை தமிழக தேர்தலுக்காக ஒதுக்கியது போல் அன்புமணி தரப்பினர் சொல்லி வருகிறார்களாம்.


அது மட்டுமல்ல, வழக்கமாக கட்சி சின்னம், கட்சியில் உரிமை கோருவது தொடர்பான விவகாரங்களில் தேர்தல் கமிஷன் உடனடியாக முடிவு எடுக்க மாட்டார்கள். பாமக.,வில் அதிகார போட்டி நடந்து கொண்டிருக்கையில், அன்புமணி தரப்பிற்கு எப்படி மாம்பழ சின்னத்தை கேட்ட உடனேயே தேர்தல் கமிஷன் ஒதுக்கியது என்ற சந்தேகம் அனைவரை போலவே பாமக நிறுவனர் ராமதாசுக்கும் வந்துள்ளது. இதனால் அவரது தரப்பினர் தேர்தல் கமிஷனை அணுகி விபரம் கேட்டுள்ளனர். பாமக.,வில் நடக்கும் பிரச்சனைகள், தற்போதைய சூழ்நிலைகள், கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது, அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கியது உள்ளிட்ட விவகாரங்களை விளக்கிக் கூறிய பிறகு தான் தேர்தல் கமிஷனுக்கே விபரம் புரிந்துள்ளதாம். அதற்கு முன்பு வரை ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இரண்டு பேருமே ஒருவர் என்று தான் தேர்தல் கமிஷன் நினைத்துக் கொண்டிருந்துள்ளது.


கட்சியின் சட்ட விதிகளில் மாற்றம் செய்து, அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கிய கையோடு அந்த விபரங்களை தேர்தல் கமிஷனிடம் தெரிவித்து, கட்சியின் சின்னம் உள்ளிட்டவற்றை உரிமை கோரி யாராவது அணுகினால் தங்களை கேட்காமல் எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என தேர்தல் கமிஷனிடம் ராமதாஸ் தரப்பு மனு அளிக்க தவற விட்டதன் விளைவு தான், அன்புமணி தரப்பில் வேறு வழியாக யோசித்து மாம்பழ சின்னத்தை தங்கள் வசமாக்கிக் கொண்டுள்ளதாம். தற்போது ராமதாஸ் தரப்பு, நடந்த விஷயங்களை விளக்கமாக குறிப்பிட்டு மனு அளித்துள்ளதால், இது குறித்து பரிசீலிப்பதாக கூறி தேர்தல் கமிஷன் அனுப்பி வைத்துள்ளதாம்.