விஜய்யிடம் கேள்வி கேளுங்கள்.. கூட்டத்துக்கு டைமுக்கு அவர் வர வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின்
கரூர்: கூட்டத்துக்கு தாமதமாக வந்தது, அதிக அளவில் கூட்டம் கூடும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல்துறை சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தது. எனவே கட்சித் தலைவர்கள் சரியான நேரத்துக்கு கூட்டங்களுக்கு வர வேண்டும். வாரா வாரம் வரும் விஜய்யிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்று காலை கரூர் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கிக் காயமடைந்தோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்த சிலரின் உடல்களுக்கும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலின் பேட்டியிலிருந்து:
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 17 பேர் பெண்கள், 9 பேர் குழந்தைகள். மற்றவர்கள் ஆண்கள். இறந்தவர்களில் கரூரைச் சேர்ந்தவர்கள் 32 பேர். ஈரோடு, திருப்பூர், திண்டுக்கலைச் சேர்ந்த தலா 2 பேரும், சேலத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை 30 பேரின் உடல்களுக்குப் பிரதேப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் தவிர்க்க முடியாத, இழப்பை ஈடு செய்ய முடியாது. அரசு சார்பில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துள்ளோம். இனியும் இழப்பு ஏற்படாத வகையில் தீவிரமாக சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம். இதுபோன்ற விபத்துகள் இனியும் நடக்கக் கூடாது. அதற்கேற்ப அரசு நடவடிக்கை எடுக்கும்.
ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனக்குக் கிடைத்த தகவலின்படி நீதியரசர் அருணா ஜெகதீசன் இன்று பிற்பகல் 1 மணியளவில் கரூர் வரவுள்ளதாக தெரிகிறது. பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து அவர் தவகல்களைப் பெறவுள்ளார். கூட்டம் நடந்த இடத்திற்கும் அவர் சென்று விசாரணை நடத்தவுள்ளார். அவர் கொடுக்கும் விசாரணை அறிக்கையின்படி சட்டப்படியான நடவடிக்கைகளை முதல்வர் எடுப்பார்.
பத்திரிகையாளர்கள் மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும். அனைவருக்கும் ஆறுதலாக துணையாக இருக்க வேண்டும். கூட்டத்துக்கு எவ்வளவு பாதுகாப்பு தரப்பட்டது, எவ்வளவு கூட்டம் வந்தது, ஒவ்வொரு கூட்டமும் எப்படி தாமதமாக நடத்தப்பட்டது என்பது குறித்து டிஜிபி நீண்ட விளக்கம் அளித்துள்ளார். நீதி விசாரணைக்குப் பிறகே உண்மை தெரியும்.
மக்களை சந்திப்பது கட்சித் தலைவர்களின் உரிமை. அதை நாங்கள் மறுக்கவும் முடியாது. அதேசமயம், கூட்டம் அதிகமாக வருகிறது, இதையெல்லாம் கடைப்பிடியுங்கள், இதைச் செய்யாதீர்கள் என்றெல்லாம் காவல்துறை மூலம் வேண்டுகோள் வைக்கிறோம். அதையும் தாண்டி சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்கள்தான் தங்களது தொண்டர்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
நான் யாரையும் குறை சொல்லவில்லை. அவர் டைமுக்கு கூட்டங்களுக்கு வர வேண்டும். நீங்க இதை அவரிடமும் கேட்க வேண்டும். வாரா வாரம் வரும்போது உங்களைச் சந்திக்கும்போது 2, 3 கேள்விகள் அவரிடம் கேளுங்கள் என்றார் உதயநிதி ஸ்டாலின்.