கரூர்: கரூரில் தவெக கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுப்பதில் அரசும், காவல்துறையும் கடமையிலிருந்து தவறி விட்டதால்தான் இவ்வளவு பெரிய துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோரை நேரில் பார்த்து நலம் விசாரிக்க கரூர் அரசு மருத்துவமனைக்கு எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் வந்திருந்தார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் தெரிவித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இங்கு பல அரசியல் கட்சிகள் உள்ளன. அதிமுக போல பல கட்சிகள் உள்ளன. பொதுக் கூட்டங்களை நடத்திய அனுபவம் வாய்ந்த கட்சிகள் இவை. ஒரு கூட்டத்திற்கு கூட்டம் எப்படி வரும், எப்படி சமாளிப்பது, ஒழுங்குபடுத்துவது எப்படி என்ற அனுபம் உள்ளது. அதன் அடிப்படையில்தான் நாங்கள் நடத்துகிறோம். அதை மற்றவர்களும் கடைப்பிடிக்க வேண்டும். புதிய கட்சிகளும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாநில அரசும், காவல்துறையும் முழுக் கவனம் செலுத்த வேண்டும். மெரீனா கடற்கரையில் ஏர்ஷோ நடந்தது. சரியான பாதுகாப்பு கொடுக்கப்படாத காரணத்தால் 5 பேர் பலியானார்கள். அப்படிப்பட்ட சம்பவம் நடைபெற்றபோது கற்றுக் கொண்ட பாடம் என்ன. இப்படி ஒரு
அரசியல் தலைவரின் பொதுக் கூட்டம் நடக்கிறபோது, என்ன பிரச்சினை வரும் என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப பாதுகாப்பு வழங்கியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.
ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்று இருக்கக் கூடாது. ஆளுங்கட்சிக் கூட்டத்திற்கு, கூட்டமே இல்லாமல் ஆயிரக்கணக்கான காவலர்களை நிறுத்தி பாதுகாப்பு தருகிறார்கள். அதேபோல நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை. காவல்துறை கடமை. கடமையிலிருந்து தவறி விட்டார்கள்.
வேகமாக துரிதமாக ஒரு நபர் கமிஷனை அனுப்பியதன் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே இடையில் ஆம்புலன்ஸ் வருகிறது. கட்சிக் கொடி கட்டி வந்தது. அதையே விஜய்யும் கேட்டுள்ளார். இதெல்லாம் சந்தேகம் எழுப்புகிறது. முன்கூட்டியே பல ஆம்புலன்ஸ்கள் வந்தபோது எதற்கு வருகிறது என்று கூட்டத்திலேயே அவர் கேட்டதைப் பார்த்தோம். இதெல்லாம் சந்தேகம் இருக்கிறது. முழுமையாக இதை விசாரிக்கப்பட வேண்டும்.
இதே தலைவர் நான்கு மாவட்டத்தில் நடத்தியுள்ளார். எத்தனை பேர் வந்தார்கள் என்று
காவல்துறைக்குத் தெரியாதா.. அரசுக்குத் தெரியாதா.. அவர்களுடைய கடமையிலிருந்து தட்டிக் கழிக்க முயற்சிக்கிறார்கள்.
விஜய்யை கைது செய்வார்களா என்பது கற்பனையான கேள்வி. இவ்வளவு பெரிய துயரம் நடந்துள்ளது. குடும்பத்தில் ஒருவரை இழந்தால் எவ்வளவு வேதனை இருக்கும். எனவே அரசியலுக்கு அப்பாற்பட்டு பேசுங்க. காரணம் என்ன என்பதை ஆராய்ந்த பிறகே நடவடிக்கை குறித்தெல்லாம் பேச வேண்டும். கைது குறித்தெல்லாம் பேசுவதற்கு இப்போது நேரம் அல்ல.
விஜய் ஏன் நேரில் வரவில்லை என்று கேட்காதீர்கள். ஒரு பெரும் துயரம் நடந்துள்ளது. இதுவரை நடந்திராத பெரும் துயரம் இது. அனைவரும் துயர மன நிலையில் உள்ளனர். எனவே அதையெல்லாம் பேசக் கூடாது என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
{{comments.comment}}