எது தான் உண்மை..? .. சற்று யோசிப்போம்.. நிதானமாய் வாசிப்போம் .. Happy Housewife Day!
Nov 03, 2025,01:20 PM IST
- அ. வென்சி ராஜ்
"அப்பாடா... இன்று ஞாயிற்றுக்கிழமை.... துவைக்கணும்... துணி மடிக்கனும்... வீடு சுத்தம் செய்யணும்.. குழந்தைகளுக்குப் பிடித்ததை இன்றாவது சமைத்துக்கொடுக்கனும்... அடுத்த வாரத்திற்கான பாட குறிப்பு எழுதனும்.... துணைக் கருவிகள் தயார் செய்யணும்...ம்ம்ம்... எங்கிருந்து ஓய்வு எடுப்பது..?" இது ஒவ்வொரு ஆசிரியர்களின் மனதிற்குள்ளும் ஞாயிறன்று எழும்பும் வார்த்தைகள்... "
"அவங்களுக்கு என்ன..? சனி ஞாயிறு ஆனால் லீவு... மழை பெஞ்சா லீவு... வெயில் அடிச்சா லீவு... எல்லா விசேஷத்துக்கும் லீவு... பத்தாததுக்கு கை நிறைய சம்பளம் வேற. .. டீச்சர்ங்க பாடு கொண்டாட்டம்தான்.." இது ஆசிரியர்களை பார்த்து அடுத்தவர்களின் மனக்குமுறல்....
எது தான் உண்மை..?
சற்று யோசிப்போம்..
நிதானமாய் வாசிப்போம் ..
திங்கட்கிழமை காலையிலிருந்து சனிக்கிழமை பள்ளி இல்லை என்றால் வெள்ளிக்கிழமை காலை வரை அதிகாலையில் எழுந்து, காலை உணவும் மதிய உணவும் தயார் செய்து 8 மணிக்குள் தன் கணவன், தன் குழந்தைகள், மற்றும் தனக்கு தேவையானது எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு தான் குளித்து கிளம்பி 8.15 க்கு வீட்டை பூட்டினால் தான் 8.45 க்குள் பள்ளிக்குள் இருக்க முடியும்... சிலர் ஓட்டமும் நடையுமாக... சிலர் பேருந்து பிடிக்க ஏழு முப்பதுக்கே பேருந்து நிலையத்தில்... இன்னும் சிலர் இப்பொழுது இருக்கும் போக்குவரத்து நெரிசலில் உயிரை கண்முன் பிடித்துக் கொண்டு வாகனத்தை இயக்கி வேகமாக பள்ளிகளுக்கு பறக்கின்றனர்.
இப்படியாகத்தான் போகிறது எல்லா நாள் காலையும்... பெண் ஆசிரியர்களாக இருந்தால் அடுக்களை வேலையோடு போராடி கிளம்பனும்.. ஆண் ஆசிரியர்களாக இருந்தால் வெளி வேலைகளை முடித்துக் கொண்டு ஓடித்தான் ஆக வேண்டும்...
இத்தோடு முடிந்தா விடுகிறது.,?
பகல் முழுவதும் ஒரு குழந்தையை அல்லது இரு குழந்தைகளை சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் வீட்டில் வைத்து சமாளிக்க முடியாமல் திணறும் பெற்றோர்களுக்கு மத்தியில்... 40 குழந்தைகள் 40 விதம்.. அதில் அமைதி என்று யாரையுமே சொல்லி விட முடியாது. பள்ளிக்கு வந்த குழந்தைகள் அனைவருமே இறக்கைகளை கட்டிக்கொண்டு பறக்க நினைக்கும் பறவைகள் தான்...
கூட்டில் இருந்து வெளிவந்த வண்ணத்துப்பூச்சிகள் தான். ...
அவர்களுக்கு
ஒழுக்கம் சொல்லிக் கொடுக்கணும்..
படிக்க சொல்லி கொடுக்கணும்..
எழுத சொல்லிக் கொடுக்கணும்..
பாடத்திட்டத்தின் படி பாடம் நடத்தியே ஆகணும்..
அன்பா பாத்துக்கணும்...
அவங்கள சிரிக்க வைக்கணும்..
விளையாட வைக்கணும்...
வரைய வைக்கணும்..
ஆட வைக்கணும்...
பாட வைக்கணும் ....
இது எல்லாத்துக்கும் மேல குழந்தைகளோட மனசுக்கு பிடிச்ச டீச்சரா இருக்கணும். கூடவே அலுவலகம் கேட்கிற தகவல்களை எல்லாம் கொடுக்கணும்... ஆன்லைன்ல போட வேண்டிய எல்லா பதிவுகளையும் போடுகிறோம்... ஒவ்வொரு ஆசிரியரும் அத்தனையையும் பாத்துக்கிறாங்க மாலை 4.30 மணி வரை..
அப்பாடா என அசந்து வீட்டுக்கு வந்தா...
காலையில போட்டது போட்டபடி கிடக்கும். அத்தனை வேலையையும் முடிக்கணும். வீட்ல இருக்குற தன் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கணும்.
திருப்பி சமைக்கணும்.
சுத்தம் செய்யணும்.
நாளைக்கு பாடத்துக்கு தேவையானதெல்லாம் தயாராக இருக்கான்னு பாத்துட்டு, எங்க அறிவையும் வளர்த்துக்கொள்ள ஏதாவது நல்ல புத்தகங்களை சற்று நேரம் படிக்கிறோம். . அப்பாடா என்று படுக்க போலாம்னு மணிய பாத்தா 12 தாண்டிடுது... அசந்து வந்து படுத்தா ஓடி வந்து நிக்குது காலைல 5.30 ...
மீண்டும் அதே வேலைகள். .. இப்படித்தான் போகுது ஒவ்வொரு ஆசிரியரின் வீட்டிலும்... பெண் ஆசிரியர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். எல்லா நாளும் ஒரே நாள் போல இருப்பதில்லை . உடல் நலமில்லா நாட்களையும் அவர்கள் கடந்து தான் ஆக வேண்டும். ..
ஆண் ஆசிரியர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா...? அவர்களுக்கு மட்டும் உடல்நிலை ஒரே போலவா இருக்கிறது..? தலைவலி, ஜுரம், கால் வலி, மூட்டு வலி என எது வந்தாலும் இந்த கால அட்டவணையில் எதையும் மாற்ற முடியாது. .
அதிகபட்சமாக இருக்கக்கூடிய தற்செயல் விடுப்பையும் மத விடுப்பையும் தவிர அதிகபட்சமான விடுப்புக்களை எல்லாம் அவர்கள் எடுக்க முடியாது. . .
பள்ளியில் கேட்கவே வேண்டாம்.. பாடத்தோடு.. கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், மாணவர்களின் தனித் திறமைகளை வெளிக்கொணர்தல், மன்ற செயல்பாடுகள், நூலக செயல்பாடு, வாசிப்புத் திறன் பயிற்சி, அலகுத் தேர்வுகள், NMMS பயிற்சி, வாரத் தேர்வுகள், வினாடி வினா , அறிவியல் கண்காட்சி இப்படி எத்தனையோ போய்க்கிட்டே இருக்கு.. காலை உணவு திட்டத்தையும் சத்துணவு திட்டத்தையும் பாத்துக்குறோம்..
இது மட்டுமா எத்தனை கிளப் ஆக்டிவிட்டீஸ் இருக்கு தெரியுமா.?
இது இல்லாம இந்த குழந்தைகளுக்கு நல்ல தொடுகை எது, கெட்ட தொடுகை எது..? எப்படி உடை உடுத்தனும், யாரிடம் எப்படி பழகனும், பாலுணர்வுனா என்ன. ..? அது தொடர்பாக அவர்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்த்து வைத்தல்... பள்ளியிலிருந்து வீட்டிற்கும் வீட்டிலிருந்து பள்ளிக்கும் வரும் வழியில் எப்படி நடந்துக்கணும்... வீட்டில எப்படி இருக்கணும்... வீட்டில அவங்களுடைய பாதுகாப்பு என்ன..? இத்தனை தகவல்களையும் ஆசிரியர்கள் தான் கத்து கொடுக்கிறோம். . இது தெரியுமா இந்த சமூகத்துக்கு. ...?
ஒரு ஆசிரியருக்கே இவ்வளவு பணிகள் என்றால் தலைமை ஆசிரியர்களின் நிலைமையை சொல்லவா வேண்டும். ..?
குழந்தைகளுக்காகவே குழந்தைகளோடு குழந்தைகளாக வாழும் ஆசிரியர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என உங்களுக்கு தெரியுமா. ..? தன் வகுப்பில் இருக்கக்கூடிய 40 குழந்தைகளையுமே தன் இல்லத்தில் இருக்கும் தன் குழந்தைகள் போலவே பாவிக்கும் ஆசிரியர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்பது இந்த சமூகத்திற்கு தெரியுமா...?
இவைகள் இல்லாமல் எத்தனை ஆய்வுகள். . . ?
அத்தனையும் கடந்து தான் மகிழ்வோடு பணி செய்கிறோம்.
இப்படி நடக்கிற எதைப்பற்றியுமே தெரியாம எதைப்பற்றியும் அறிந்தும் கொள்ளாமல் பொதுவாக ஆசிரியர்களுக்கு கொடுக்கிற சம்பளம் எல்லாம் வீண்... அவங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு லீவு அப்படின்னு கேக்குறவங்க கொஞ்சம் நின்னு நிதானித்து யோசிங்க. .
மழைக்காகவும் வெயிலுக்காகவும் லீவு விடுவது ஆசிரியர்களுக்காக இல்ல.. குழந்தைகளுக்காக தான். குழந்தைகளின் பாதுகாப்புக்காக தான். குழந்தைகள் இல்லாத பள்ளியில ஆசிரியர்கள் போய் நாங்கள் எதையும் சாதிக்க முடியாது. . ஏன்னா ஆசிரியர்கள் அனைவருமே அப்பள்ளியில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்காக தான். . .
எல்லா வேலைகளையும் செய்பவர்களும் உழைக்கிறாங்க..இல்லன்னு சொல்லல .. ஆனா ஆசிரியர்களாக இருக்கக்கூடிய நாங்கள் எப்படி உழைக்கிறோம்? காலையிலிருந்து மாலை வரை உடம்பில் உள்ள அத்தனை வலுவினையும் ஒன்று கூட்டி கத்தி பாடம் நடத்தி அந்த குழந்தைகளோடு பேசி மகிழ்ந்து விளையாடி எங்களுடைய ஆற்றல் எல்லாம் செலவு செய்து உங்க குழந்தைகளை அன்பா பார்த்துக்கிறோம்.. நாங்கள் இழப்பது எங்களுடைய ஜீவனை.. ஆனா குழந்தைகளுக்காக அதை மகிழ்ச்சியாக தான் நாங்கள் செய்கிறோம்.
ஒவ்வொரு ஆசிரியரின் எண்ணமும் நம்மிடம் இருக்கும் குழந்தைகளை மிகச்சிறந்த மனிதனாக இந்த சமூகத்திற்கு அளித்திட வேண்டும் என்பதே. ஒரு நல்ல சமூகம் கட்டமைக்கத்தான் ஒவ்வொரு ஆசிரியரும் பாடுபடுகிறார்கள். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையிடம் இருக்கும் தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து அவனை அவனுக்கு பிடித்த நல்ல பாதையில் வழி நடத்திட தான் ஒவ்வொரு ஆசிரியரும் போராடுகிறார்கள்.. இந்த சமூகம் எங்களை பார்த்து இப்படி பேசுவது மட்டுமே எங்களை வருத்தம் கொள்ள செய்கிறது. எங்கோ யாரோ ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் தவறுக்காக மொத்த ஆசிரிய இனத்தையே இந்த சமூகம் குறையாக பேசுவதை ஏற்றுக்கொள்ள இயலாது .
அதற்காக உங்கள் குழந்தைகளை நாங்கள் வீணடிக்க மாட்டோம். எங்களிடம் கொடுத்திருப்பது ஒவ்வொன்றும் எங்களுக்கு சொத்துகள். மழலைச் செல்வங்கள். . அவர்களை மிகச் சிறப்பான முத்துக்களாக மாற்றுவது எங்களது கடமை என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் நாங்கள் உணர்ந்து தான் இருக்கின்றோம். ஆசிரியர்கள் ஆசிரியர்களாகவும் இல்லத்தரசிகளாகவும் சமூக சிந்தனை மிக்க சமூக சிற்பிகளாகவும் மிளிக்கின்றார்கள். ஆசிரியர்களின் வலியையும் உழைப்பையும் வேதனையையும் புரிந்துகொண்டு அதன் பிறகு ஆசிரியர்களை பற்றி பேசுங்கள். .. நீண்ட நாள் சிந்தனையில் வலியோடு எழுதுகிறேன்.
யாரையும் புண்படுத்துவதற்காக இதைக் கொட்டித் தீர்க்கவில்லை.. சமூகத்தைப் பண்படுத்தும் ஆசிரியர்களை புண்படுத்தாதீர்கள் என கூறவே!
அப்புறம் அனைத்துப் பெண்மணிகளுக்கும், இனிய இல்லத்தரசிகள் தின நல்வாழ்த்துகள்..!