தன்னுள்ளம் உவப்பவரே ஆசிரியர்!

Oct 24, 2025,03:32 PM IST

- இரா. பிருந்துமாலினி


சித்திரை மாதத்தின் உக்கிரமான மதிய வெயில் வேளையில் அந்த வங்கியின் முன்பு தனது சைக்கிளை நிறுத்தினார் அந்த முதியவர். சைக்கிளின் இருபுறமும் சந்தையில் வாங்கிய காய்கறிகளைச் சுமந்தபடி இரண்டு பைகள் ஹேண்டில் பாரில்  தொங்கிக் கொண்டிருந்தன. சைக்கிளின் கேரியரில் அந்த முதியவர் தனது பேத்திக்காக வாங்கிய கோனார் தமிழுரையும், இரண்டு நோட்டுகளும் இருந்தன. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்திருந்த அந்த முதியவரின் கையில் ஒரு கைப்பை இருந்தது. 


முகத்தில் வடிந்த வியர்வையை துடைத்துக்கொண்டு வங்கியின் உள்ளே சென்றவரைப் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த உதவியாளர் கடந்து சென்றார். "ஏம்பா !மேனேஜரைப் பார்க்க முடியுமா?" என்று அவரிடம் கேட்டார் அந்த முதியவர். சிறிது யோசித்தவாரே "அப்படி உட்காருங்கள்" என்று சொன்ன உதவியாளர், மேனேஜரின் அறைக்குள் சென்றார். சென்ற வேகத்தில் திரும்பி வந்தவர்," ஐயா ,மேனேஜர் ரொம்ப பிசியா இருக்காரு. நேத்து தானே இந்த பிராஞ்சுக்கு பிரமோஷன்ல வந்திருக்காரு.அதான்.. வேலை கொஞ்சம் அதிகம்.நீங்க ஏதாவது கேக்கணும்னா டெல்லர் கிட்ட கேட்டுக்கோங்க" என்று சொன்னார். 


"அப்படியாப்பா! நான் மேனேஜரைத் தான் பார்க்கனும்னு வந்தேன் " என்று அந்த முதியவர் கூற,"இன்னிக்கு முடியாதுங்களே ஐயா! நாளைக்கு வந்துருங்க "என்றுசொன்னார் உதவியாளர். இதைக் கேட்டவுடன் கொஞ்சம் முகம் வாடிப் போனாலும் தனது பையில் இருந்த ஒரு துண்டுக் காகிதத்தில் எதையோ எழுதி அந்த உதவியாளிடம் கொடுத்துவிட்டு" இத உங்க மேனேஜர் கிட்ட கொடுத்துடுப்பா"என்று சொல்லிவிட்டு இருக்கையில் இருந்து எழுந்தார் .வங்கியின் வராண்டாவைக் கடந்து கொண்டிருந்தவரின் காதில் "சார்!!" என்ற மகிழ்ச்சியும் மரியாதையும் கலந்த அந்தக் கூக்குரல் கேட்டது. அவர் திரும்பிப் பார்ப்பதற்கு முன்பு அவரது காலைப் பற்றிக்கொள்ள வந்த அந்த மனிதனைத் தடுத்து, ஆரத் தழுவிக் கொண்டார் அந்த முதியவர்.




கண்களில் கண்ணீர் மல்க அந்த முதியவரின் கரங்களைப் பற்றிக் கொண்டிருந்த அந்த மனிதனின் நினைவுகள் முப்பது வருடங்கள் பின்னோக்கிச் சென்றன.


மாட்டுக் கொட்டிலில் அடைப்பட்டிருந்த மாடுகளை அவிழ்த்து விட்டு அவற்றை மேய்ச்சல் நிலத்திற்கு அழைத்துச் செல்லத் தயாரானான் அந்தச் சிறுவன். வாசலில் ஒரு குரல் கேட்டது. "ஏம்பா மாரியப்பா வீட்ல இருக்கியா? "கண்ணன் வாத்தியாரின் குரல் கேட்டு தன் கைகளைக் கட்டிக்கொண்டு அவர் எதிரில் வந்து நின்றார் அந்தச் சிறுவனின் தந்தை மாரியப்பன். "என்னங்க ஐயா இவ்வளவு தூரம்...." என்று கேட்ட மாரியப்பனை ,"ஏம்பா உன் பையன் சிவசங்கரன அஞ்சாங் கிளாஸோட நிறுத்திட்டா எப்படி? "என்று அதட்டினார் . "ஐயா உங்களுக்கே தெரியும். நானே கூலிக்கு மாரடிக்கிறவன்‌. என் பையனைப் படிக்க வச்சு என்னய்யா பண்ணப்போறேன்?


பண்ணை வீட்டு மாடுகளைப் பராமரிச்சா நாலு காசு கிடைக்கும். என் குடும்பமும் பட்டினி இல்லாமல் இருக்கும் "என்று தொடர்ந்து பேசியவனை கையமர்த்திவிட்டு, "இங்க பாரு மாரியப்பா..  இன்னிக்கு நீ கஷ்டப்பட்டு உன் பிள்ளையைப் படிக்க வச்சிட்டா உன்னோட ஏழு தலைமுறையை அவன் காப்பாத்திடுவான்பா. நீ தான் படிக்காம இப்படி கூலி வேலை செய்யற. உன் பையனும் அப்படியே இருக்கலாமா? நாளைக்கு காலைல உன் பையன் என் வகுப்புல இருக்கணும் .சரிதானா? "என்று கேட்டுவிட்டு சரேலெனத் தன் சைக்கிளைத் திருப்பிய கண்ணன்  வாத்தியாரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றான் ஒரு கையில் தனது அரை ட்ரவுசரையும் இன்னொரு கையில் கன்றுக்குட்டியையும் பிடித்துக் கொண்டிருந்த சிவசங்கரன்.


" நல்லா இருக்கியாப்பா" என்ற‌ முதியவரின் குரல் கேட்டுத் தன் பழைய நினைவுகளில் இருந்து மீண்ட அந்த நபர் அந்த முதியவரைத் தன் அறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார். மேசையின் மீது வைத்திருந்த பெயர் ப் பலகையில் மா. சிவசங்கரன்  மேலாளர் என எழுதப்பட்டிருந்தது. ஆம்! அந்த மேலாளர் சிவசங்கரனின் கண்கள் தன் முன்னே அமர்ந்திருந்த கண்ணன் வாத்தியாரை ஆயிரம் நன்றிகளுடன் பார்க்க, கண்ணன் வாத்தியாரின் கண்களில் பெருமைப் பேரொளி வீசியது. 


"வளர்ந்து விட்டானே எனப்

பொறாமை கொள்ளாமல்...

வளர்த்தவன் நான்  என்ற

ஆணவம் இல்லாமல்....

மனிதனாய் உயர்ந்து நிற்கும்

தன் மாணவன்தனைக் கண்டுத்

தானே வென்றது போல்

தன்னுள்ளம் உவப்பவரே ஆசிரியர்!!!


(கதாசிரியர் இரா. பிருந்துமாலினி, திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடை நிலை ஆசிரியராகப் பணியாற்றுகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்