"மீரா... நீ என்னைத் தேடுவியா?".. (நீ மழை - 7)
மழையின் குளிரோடும், அர்ஜூனின் மகரந்தக் குரலோடும், மனசு ரம்யமாக, பஸ்ஸுக்குள் வந்து இருக்கையில் அமர்ந்தாள் மீரா. இப்போது மீரா அருகில் வந்து அமர்ந்து கொண்டான் அர்ஜூன்.
பேருந்து மீண்டும் அந்த வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் நகரத் தொடங்கியது. ஜன்னல் வழியே சில்லிட்ட காற்று உள்ளே புகுந்து அவர்களை வருடியது.
பேருந்துக்குள் இருந்த மற்றவர்கள் மழையின் அழகில் மயங்கியிருக்க, மீராவோ அர்ஜுனின் அருகாமையில் மயங்கியிருந்தாள். அர்ஜுன் அவளுக்கு மிக அருகில் அமர்ந்து, தன் தோளோடு அவளைச் சாய்த்துக்கொண்டான்.
"ஏய் மீரா... இப்போ ஒரு பாட்டுப் பாடட்டுமா?" என்று அவன் மெல்லக் கேட்க, மீரா பட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.
"அச்சச்சோ பாட்டு வேணாம் அர்ஜுன் ப்ளீஸ்... இந்த மழையோட சத்தமே ஒரு சங்கீதம் மாதிரி தான் இருக்கு. இதுல உன் 'மொக்கை' பாட்டு கலந்து அந்த ஃபீலை கெடுத்துடாத.. பஸ்ஸுல இருக்கிற எல்லாரும் பாவம்.. ஜன்னல் வழியா கீழே குதிச்சாலும் குதிச்சுடுவாங்க," என்று பொய்யான கோபத்துடன் சொன்னாள்.
அவளைத் திரும்பி முறைத்துப் பார்த்தான் அர்ஜூன். மீராவோ மூக்கை சுளித்து செல்லமாக சிரித்தாள். அர்ஜுன் அவள் கையைத் தன் விரல்களால் கோர்த்துக்கொண்டான். "சரி... பாட்டு வேணாம். ஆனா இந்த நிமிஷம் நம்ம ரெண்டு பேரோட இதயத்துடிப்பும் ஒரே ரிதத்துல துடிக்கிறத நீயும் கவனிச்சியா? அதுதான் உண்மையான மியூசிக்."
அவனது அந்த ஆழமான பேச்சு மீராவை மௌனமாக்கியது. அவள் தலை மெல்ல அவன் தோளில் சாய்ந்தது. நனைந்திருந்த கூந்தலின் வாசம் அவன் நாசிகளைத் தீண்ட, அர்ஜுன் ஒரு நிமிடம் கண்களை மூடி அந்த சுகமான நேரத்தை அனுபவித்தான்.
"அர்ஜூன் ஒரு கவிதை சொல்லு"
"எதைப் பத்தி சொல்ல"
"என்னைப் பற்றி சொல்லேன்"
"கவிதையே கவிதை கேட்டால் எப்படி மா"
"போதும், ரொம்பத்தான்.. ஏதாவது ஒரு குட்டிக் கவிதை சொல்லுடா ப்ளீஸ்"
"சரி"
மீராவின் முகம் மங்கலான வெளிச்சத்தில் தேவதை போலத் தெரிந்தது. அர்ஜுன் அவளை உற்றுப் பார்த்தபடி, மெல்லத் தன் கையை அவள் தோளில் போட்டுக்கொண்டான்.
பிறகு, புன்னகையோடு, அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்து, கவிதையைச் சொல்லத் தொடங்கினான்.
"மழையில் நனைந்த ரோஜாவே,
என் மனதை கொள்ளையடித்த கவிதையே!
உன் கூந்தல் மேகமோ,
என் வானத்தைக் குளிர்ந்த மழையால் நனைக்கிறதே!
உன் கண்கள் நட்சத்திரமோ,
என் இரவை ஒளியால் நிறைக்கிறதே!
உன் உதடுகள் பூக்களோ,
என் காதலை வாசத்தால் வருடுகிறதே!
உன் புன்னகை நிலவோ,
என் இருளைப் போக்கி வெளிச்சம் தருகிறதே!
உன் இதயம் மழையோ,
என் காதலை உயிர்ப்புடன் ஆக்குகிறதே!
மழையில் நனைந்த ரோஜாவே,
என் மனதை கொள்ளையடித்த கவிதையே!"
மீரா அந்தக் கவிதையைக் கேட்டு சிலிர்த்துப் போனாள். அர்ஜுன் சிரித்துக்கொண்டே அவள் கன்னத்தைத் தடவிக்கொடுத்தான். "உன்னைப் பார்த்ததும், கவிதை தானா வந்துடுச்சு மீரா!.. ஆனால் நீதான் என் வாழ்க்கையோட ஆகச்சிறந்த கவிதை!"
திடீரென பேருந்து ஒரு பெரிய மேடு பள்ளத்தில் ஏறி இறங்க, மீரா சட்டென சுதாரித்து நிமிர்ந்து அமர்ந்தாள். அர்ஜுன் அவள் காதோரம் குனிந்து, "மீரா... ஒருவேளை இந்தக் காலேஜ் முடிஞ்சு நாம பிரிஞ்சு போயிட்டா... நீ என்னைத் தேடுவியா?" என்று ஒரு விசித்திரமான கேள்வியைக் கேட்டான்.
மீரா திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். அவளது கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன. ஆனால் லேசாகப் புன்னகைத்தபடி, "தேடுறதுக்கு நீ என்ன என் கையில இருக்கிற மோதிரமா? இல்ல தொலைஞ்சு போறதுக்கு நீ ஒரு சாதாரணப் பொருளா? நீ என் சுவாசத்துல கலந்துட்ட அர்ஜுன். மூச்சு விடுற வரைக்கும் உன்னைத் தேட வேண்டிய அவசியமே எனக்கு இருக்காது!"
அர்ஜுன் அவளது நெற்றியில் மென்மையாக ஒரு முத்தம் பதித்தான். அந்த முத்தம் ஒரு வருடக் காதலை ஒரே நொடியில் அவளுக்கு உணர்த்தியது.
"நாம ஊட்டி வந்தப்போ பார்த்த இதே மலை, இதே மரம், இதே மேகம் எல்லாம் சாட்சி மீரா... என் கால்கள் உன் பின்னாடி வரும், ஆனா என் நிழல் எப்பவும் உனக்கு முன்னாடி நின்னு உன்னைப் பாதுகாக்கும்," என்று அர்ஜுன் சொல்ல, மீரா அவனது கையை இன்னும் பலமாகப் பிடித்துக்கொண்டாள்.
வெளியில் மழை வேகம் குறையத் தொடங்கியது. ஆனால் அவர்களுக்குள் காதல் வேகம் எடுத்துக்கொண்டிருந்தது. பஸ்ஸும் சற்றே வேகம் பிடித்துப் போய்க் கொண்டிருந்தது. மெல்ல மலையடிவாரத்தை நெருங்க, தொலை தூரத்தில் தெரிந்த வீடுகளும், அதன் ஜன்னல்கள் வழியாக பளிச்சிட்ட விளக்கொளியும், அந்த அழகான சுற்றுலா முடிவுக்கு வந்து கொண்டிருப்பதை உணர்த்தியது. ஆனால் அவர்களின் காதல் காவியம் அப்போதுதான் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கத் தயாரானது.
அர்ஜுன் அவளைப் பார்த்து ஒரு குறும்புச் சிரிப்புடன் சொன்னான், "மீரா, இந்த டூர் முடியலாம்... ஆனா நம்ம லவ் ஸ்டோரியோட 'இன்டர்வெல்' கூட இன்னும் வரல. இன்னும் எவ்வளவோ இருக்கு!"
அவன் சொன்னதன் அர்த்தம் புரியாமல் மீரா வியப்போடு பார்க்க, அர்ஜுன் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய, மடிக்கப்பட்ட காகிதத்தை எடுத்து அவள் கையில் திணித்தான். "இதைப் பஸ்ஸை விட்டு இறங்குனதுக்கு அப்புறம் படி... அதுவரைக்கும் இது ஒரு சஸ்பென்ஸ்!"
மீராவுக்குள் குழப்பம், "இதுல என்ன எழுதியிருக்கே அர்ஜூன்"
"அதான் சொன்னேனே மீரா.. சஸ்பென்ஸ் அப்படின்னு. பிறகு முன்னாடியே கேட்டா எப்படி டியர்"
மீரா அந்தக் காகிதத்தை குழப்பத்துடன் தனது ஹேன்ட்பேக்கைத் திறந்து உள்ளே திணித்தாள். அர்ஜூன் என்ன எழுதியிருப்பான்? ஒருவேளை அவன் காதலைச் சொல்லும் கவிதையா? அல்லது வேறு ஏதேனும் ரகசியமா? லேசான குழப்பம் அவளுக்குள் எழ, பேருந்து தனது முதல் நிறுத்தத்தில் நின்றது. அது அர்ஜூன் இறங்க வேண்டிய இடம்.
மீராவை விட்டு விலகவே மனம் இல்லாத முகத்துடன், அவளைப் பார்த்தா, "பை மீரா.. போய்ட்டு மெசேஜ் பண்றேன்.. நீயும் போய்ட்டுப் பேசு.. டேக் கேர்" என்று நெருக்கமாக வந்து சொல்லி விட்டு இறங்கினான் அர்ஜூன்.
மீராவுக்கு நெஞ்சு விம்மி இறங்கியது.. அர்ஜூனைப் பார்த்து தலையசைத்து, குரலே வராமல் "பை அர்ஜூன்" என்றாள்.
அர்ஜூன் உள்ளிட்ட சிலர் இறங்கியதும் பஸ் கிளம்பியது. அடுத்த நொடியே, ஆர்வம் உந்தித் தள்ள, ஹேன்ட்பேக்கைத் திறந்து அர்ஜூன் கொடுத்த காகிதத்தை எடுத்துப் பிரித்தாள் மீரா.
அதில் இருந்த வரிகளைப் பார்த்த மீராவுக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்றுவிட்டது!
(தொடரும்)